Saturday, 12 June 2010


'ஏழாவது ஊழி'
பொ.ஐங்கரநேசனின் கட்டுரைகளின் தொகுதி இதுவாகும்.
ஏற்கனவே 'வேர்முகங்கள்' எனும் நூலை வெளியிட்டுள்ளார்.இவ்விரு நூல்களையும் 'சாளரம் பதிப்பகம்'மூலமாகவே வெளியிடப்பட்டுள்ளது .சிறப்பாகவே வந்துள்ளதனை பாராட்டியேயாகவேண்டும்.
430 பக்கங்களில் 2009 இல் 'சுற்றுபுறச் சூழல் சார்ந்த தினக்குரல்,கூடம்,அரும்பு,பசுமைத்தாயகம்,சாளரம் இலக்கிய மலர்,கருஞ்சட்டைத் தமிழன்,தாமரை,அருவி,வைகறை ஆகிய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து அழகிய நூலாக நம் கரம் கிட்டியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
ஐங்கரனேசனின் எழுத்து நடையை 'வேர்முகங்களில்'கண்டிருந்தோம். கூடவே,
கட்டுரைகள் வெளிவந்த இதழ்கள் அனைத்தும் சிறப்பானது.எனவே அதில் வரும் எழுத்துக்கள் சிறப்பானவைகள் என ஊர்ஜீதப்படுத்தலாம்.ஆசிரியர் மனித நேயம் மிக்கவர் என்பதை அவரின் பார்வை கட்டுரைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கட்டுரகளை உள்வாங்க முன் அவற்றின் தலைப்புக்களை பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.பூகோள மயமாதல் அல்லது சூழல் மாசுபடுதல் எத்துணை தூரம் வளர்ந்த்து வரும் நாடுகளை அச்சுறுத்துகிறது என்பது புரிகிறது.
கொதிக்கும் பூகோளம்,அனல் கக்கும் அமெரிக்காவும் புனல் தின்றஆர்லியன்சும்,ஓசோன் குடையில் ஓட்டை,பிலாஸ்டிக்கின் பிடியில் பூமி,அச்சுறுத்தும் ,அஸ்பெஸ்ரஸ்,கொலைக்களமாகும் அடுக்களைகள்,நீல நஞ்சு,காதினுள் பாயும் நஞ்சு,செல்லிடப்பேசிகள் வரமா? சாபமா?,தள்ளாடும் மினமாட்டா,சுவாசமே நஞ்சாக..,தாய்ப்பாலிற் சிறந்ததொரு அமிர்தமும் இல்லை,மென்பானங்களின் வன்முறைகள்,நீரின்றி அமையாது உயிர்,பாழாகும் யாழ்ப்பாணக் கிணறுகள்,யாழ்ப்பாணம் பாலையாகுமா?நீர்ப் போர் மூளுமா?முற்றுகையில் மழைக்காடுகள்,கண்டல்களைக் காப்போம்,படையெடுக்கும் பார்த்தினீயம்,வாழை உயிர் வாழுமா? இயற்கை விரித்த வலை,சுதந்திரத்தின் சிறகுகள்,காணாமற் போகும் கடற்குதிரைகள்,கேட்குமா இனித் தவளைச் சத்தம்?,ஆசியாவின் கடைசிச் சிங்கங்கள்,புலிகள் அழியலாமா?,குரங்குகளில் மனிதர்களும் மனிதர்களில் குரங்குகளும்,தந்திர விதைகளும் தற்கொலை விவசாயிகளும்,பறிபோகும் பாரம்பரிய மருத்துவம்,காப்புரிமை என்னும் பொருளாதாரஆயுதம்,எதனோல் பெற்றோல்:மாற்றா-ஏமாற்றா?,மிதிவிசைப் பயணம்,ஊமையாகும் மொழிகளும் மணிக்கும் உயிர்ச் சூழலும்,ஏழாவது ஊழி,கோழிகளைக் கொல்ல இராணுவம்,அசைவமா?..சைவமா?,உலகப் பசிக்கு உருளைக் கிழங்கு,தாங்குமா இந்தப் பூமி?,தேசிய வாசம் வீசும் கார்த்திகைப்பூ,விடுதலைச் சூழலியல்..
தலைப்புக்களால் புரிய வைக்கின்ற சூட்சுமம் தெரிந்த கலைஞனாக ஆசிரியர்.
தங்களின் குப்பைகளை கொட்டுகின்ற கொடுமை இங்கு நடைபெறுகிற துயரம் நமக்குப் புரிகிற மொழியில் எழுதியதில் நமை வியப்பில் ஆழ்த்துகிறார்.
வாசகனின் மொழி தெரிந்தவனே எழுத்தை ஆழமுடியும்.
போர்ச் சூழல்,மக்கள் இடப்பெயர்வு,காடுகள் அழிப்பு,இராசயனக் கலவைகளின் அதீத பாவனைகளினால் வட பகுதி தண்ணீர்,சூழல்,விலங்குகளின்/மனிதர்களின் வாழ்வாதாரங்களின் வீழ்ச்சி...இவைகளை ஆய்ந்துணர்ந்து கட்டுரைகளை தந்து எமை ஒரு அறிவியல் உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார் .
'மட்டுமீறிய நுகர்வுப் போக்கு வாழ்க்கை முறையாக
பரிணமித்து விட்டதும்,வளங்களை வரம்பின்றிச் சூறையாடும்
அபத்தமும்தான் சுற்றுச் சூழலின் முக்கிய எதிரிகளாக
விளங்குகின்றன'..ஃபிடல் கஸ்ட்ரோ சொல்கிறார்.
கார்த்திகைப் பூவின் சிறப்பை அதிகமே சொலிச் செல்கிறார்.
சில நாடுகளில் பூக்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தே வந்துள்ளார்கள்.
'கார்த்திகைப்பூவின் நிறத்தில் இவள்
கட்டுற சேலைகள் இருக்கும்
கார்த்திகை மாதம் கல்லறை நாளில்
தூயவள் மேனி சிலிர்க்கும்.'
புதுவையின் கவிதையூடாக பல செய்திகளை/ தமிழ்த் தேசிய பூ சார்ந்த விசயங்களை,ஈழத்தில் கார்த்திகைப் பூ மரம் பற்றி ஆய்வுடன் எழுதுவது எழுத்துடன் நம்மை நெருங்க செய்கிறது.
யாழ் நகரில் புகழ் பெற்ற கல்விநிறுவனமான 'யூனிவேர்சல் சயன்ஸ் அக்கடமி'யை சிறந்த முறையில் நடாத்திய பெருமை ஐங்கரநேசனையே சாரும்.
முதன் முதலாக யாழ் நகரில் ஆய்வுகூட பரிசோதனை நடத்திய பெருமையும் இவரையே சேரும்.சட்டநாதனின் நட்பும் ,புதுவையின் நெருக்கமும் இயல்பாகவே இவருக்கிருந்த தேடல் முயற்சியும் 'ஏழாவது ஊழி'நூலை படிக்க வாய்த்திருக்கிறது.
பூகோள மயமாக்கலின் திசை மாற்றம் எம் மக்களின் வசந்தம் கைக்குள் வரும் போது ஐங்கரநேசனின் மகளைப் போல் நமது பிள்ளைகளும் 'பொன்வண்டு' பிடிக்கும் கனவு நிறைவேறும்.
வாழ்த்துக்களுடன்...

-முல்லைஅமுதன்-
'ஏழாவது ஊழி'
பொ.ஐங்கரநேசனின் கட்டுரைகளின் தொகுதி இதுவாகும்.
ஏற்கனவே 'வேர்முகங்கள்' எனும் நூலை வெளியிட்டுள்ளார்.இவ்விரு நூல்களையும் 'சாளரம் பதிப்பகம்'மூலமாகவே வெளியிடப்பட்டுள்ளது .சிறப்பாகவே வந்துள்ளதனை பாராட்டியேயாகவேண்டும்.
430 பக்கங்களில் 2009 இல் 'சுற்றுபுறச் சூழல் சார்ந்த தினக்குரல்,கூடம்,அரும்பு,பசுமைத்தாயகம்,சாளரம் இலக்கிய மலர்,கருஞ்சட்டைத் தமிழன்,தாமரை,அருவி,வைகறை ஆகிய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து அழகிய நூலாக நம் கரம் கிட்டியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
ஐங்கரனேசனின் எழுத்து நடையை 'வேர்முகங்களில்'கண்டிருந்தோம். கூடவே,
கட்டுரைகள் வெளிவந்த இதழ்கள் அனைத்தும் சிறப்பானது.எனவே அதில் வரும் எழுத்துக்கள் சிறப்பானவைகள் என ஊர்ஜீதப்படுத்தலாம்.ஆசிரியர் மனித நேயம் மிக்கவர் என்பதை அவரின் பார்வை கட்டுரைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கட்டுரகளை உள்வாங்க முன் அவற்றின் தலைப்புக்களை பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.பூகோள மயமாதல் அல்லது சூழல் மாசுபடுதல் எத்துணை தூரம் வளர்ந்த்து வரும் நாடுகளை அச்சுறுத்துகிறது என்பது புரிகிறது.
கொதிக்கும் பூகோளம்,அனல் கக்கும் அமெரிக்காவும் புனல் தின்றஆர்லியன்சும்,ஓசோன் குடையில் ஓட்டை,பிலாஸ்டிக்கின் பிடியில் பூமி,அச்சுறுத்தும் ,அஸ்பெஸ்ரஸ்,கொலைக்களமாகும் அடுக்களைகள்,நீல நஞ்சு,காதினுள் பாயும் நஞ்சு,செல்லிடப்பேசிகள் வரமா? சாபமா?,தள்ளாடும் மினமாட்டா,சுவாசமே நஞ்சாக..,தாய்ப்பாலிற் சிறந்ததொரு அமிர்தமும் இல்லை,மென்பானங்களின் வன்முறைகள்,நீரின்றி அமையாது உயிர்,பாழாகும் யாழ்ப்பாணக் கிணறுகள்,யாழ்ப்பாணம் பாலையாகுமா?நீர்ப் போர் மூளுமா?முற்றுகையில் மழைக்காடுகள்,கண்டல்களைக் காப்போம்,படையெடுக்கும் பார்த்தினீயம்,வாழை உயிர் வாழுமா? இயற்கை விரித்த வலை,சுதந்திரத்தின் சிறகுகள்,காணாமற் போகும் கடற்குதிரைகள்,கேட்குமா இனித் தவளைச் சத்தம்?,ஆசியாவின் கடைசிச் சிங்கங்கள்,புலிகள் அழியலாமா?,குரங்குகளில் மனிதர்களும் மனிதர்களில் குரங்குகளும்,தந்திர விதைகளும் தற்கொலை விவசாயிகளும்,பறிபோகும் பாரம்பரிய மருத்துவம்,காப்புரிமை என்னும் பொருளாதாரஆயுதம்,எதனோல் பெற்றோல்:மாற்றா-ஏமாற்றா?,மிதிவிசைப் பயணம்,ஊமையாகும் மொழிகளும் மணிக்கும் உயிர்ச் சூழலும்,ஏழாவது ஊழி,கோழிகளைக் கொல்ல இராணுவம்,அசைவமா?..சைவமா?,உலகப் பசிக்கு உருளைக் கிழங்கு,தாங்குமா இந்தப் பூமி?,தேசிய வாசம் வீசும் கார்த்திகைப்பூ,விடுதலைச் சூழலியல்..
தலைப்புக்களால் புரிய வைக்கின்ற சூட்சுமம் தெரிந்த கலைஞனாக ஆசிரியர்.
தங்களின் குப்பைகளை கொட்டுகின்ற கொடுமை இங்கு நடைபெறுகிற துயரம் நமக்குப் புரிகிற மொழியில் எழுதியதில் நமை வியப்பில் ஆழ்த்துகிறார்.
வாசகனின் மொழி தெரிந்தவனே எழுத்தை ஆழமுடியும்.
போர்ச் சூழல்,மக்கள் இடப்பெயர்வு,காடுகள் அழிப்பு,இராசயனக் கலவைகளின் அதீத பாவனைகளினால் வட பகுதி தண்ணீர்,சூழல்,விலங்குகளின்/மனிதர்களின் வாழ்வாதாரங்களின் வீழ்ச்சி...இவைகளை ஆய்ந்துணர்ந்து கட்டுரைகளை தந்து எமை ஒரு அறிவியல் உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார் .
'மட்டுமீறிய நுகர்வுப் போக்கு வாழ்க்கை முறையாக
பரிணமித்து விட்டதும்,வளங்களை வரம்பின்றிச் சூறையாடும்
அபத்தமும்தான் சுற்றுச் சூழலின் முக்கிய எதிரிகளாக
விளங்குகின்றன'..ஃபிடல் கஸ்ட்ரோ சொல்கிறார்.
கார்த்திகைப் பூவின் சிறப்பை அதிகமே சொலிச் செல்கிறார்.
சில நாடுகளில் பூக்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தே வந்துள்ளார்கள்.
'கார்த்திகைப்பூவின் நிறத்தில் இவள்
கட்டுற சேலைகள் இருக்கும்
கார்த்திகை மாதம் கல்லறை நாளில்
தூயவள் மேனி சிலிர்க்கும்.'
புதுவையின் கவிதையூடாக பல செய்திகளை/ தமிழ்த் தேசிய பூ சார்ந்த விசயங்களை,ஈழத்தில் கார்த்திகைப் பூ மரம் பற்றி ஆய்வுடன் எழுதுவது எழுத்துடன் நம்மை நெருங்க செய்கிறது.
யாழ் நகரில் புகழ் பெற்ற கல்விநிறுவனமான 'யூனிவேர்சல் சயன்ஸ் அக்கடமி'யை சிறந்த முறையில் நடாத்திய பெருமை ஐங்கரநேசனையே சாரும்.
முதன் முதலாக யாழ் நகரில் ஆய்வுகூட பரிசோதனை நடத்திய பெருமையும் இவரையே சேரும்.சட்டநாதனின் நட்பும் ,புதுவையின் நெருக்கமும் இயல்பாகவே இவருக்கிருந்த தேடல் முயற்சியும் 'ஏழாவது ஊழி'நூலை படிக்க வாய்த்திருக்கிறது.
பூகோள மயமாக்கலின் திசை மாற்றம் எம் மக்களின் வசந்தம் கைக்குள் வரும் போது ஐங்கரநேசனின் மகளைப் போல் நமது பிள்ளைகளும் 'பொன்வண்டு' பிடிக்கும் கனவு நிறைவேறும்.
வாழ்த்துக்களுடன்...

-முல்லைஅமுதன்-
நூல் அறிமுகம்: த.அகிலனின்.. 'மரணத்தின் வாசனை.' (போர் தின்ற சனங்களின் கதை)

- முல்லைஅமுதன் -




ஈழத்தின் மூத்த பத்திரிகையாளரான ஆர்னல்ட் சதாஸிவம் பிள்ளை எழுதிய சிறுகதையே முதல் கதையென அறிஞர்கள் சுட்டுவர். நவீன சிறுகதை 1930ற்கு பின்பே ஆரம்பமாகிறது எனவும் கொள்ளப்படுகிறது.1983ற்குப் பின்னரே அதிக படைப்பாளர்களின் வருகை நிகழ்ந்துள்ளது.இனக் கலவரம், இடப்பெயர்வு, பொருளாதார இழப்பு / தடை, விமானத் தாக்குதல்கள், போக்குவரத்து அசொளகரியங்கள், உள்ளக / வெளியக புலப்பெயர்வுகள் என்பன படைப்பாளர்களையும் உருவாக்கியிருக்கலாம். வளர்ந்து வந்த இனச் சிக்கல் பெரும் போராக வெடித்ததில் போருக்குள் வாழ்ந்த / வாழ்கின்ற / வாழ்ந்து மடிந்த மக்களிடமிருந்து எழுதிய படைப்பாளர்கள் நிஜத்தை எழுதினார்கள்/எழுத முற்பட்டார்கள். போருக்குள் நின்று புதுவை இரத்தினதுரை , கருனாகரன் ,நிலாந்தன் , அமரதாஸ், வீரா , திருநாவுக்கரசு , சத்தியமூர்த்தி ,புதுவைஅன்பன் ,முல்லைகோணேஸ் , முல்லைகமல் , விவேக் , மலரன்னை ,மேஜர்.பாரதி , கப்டன்.வானதி என விரிந்து இன்றைய த.அகிலன் வரை தொடர்கிறது.

'தனிமையின் நிழற்குடை'யைத் தொடர்ந்து நமக்கு அகிலன் தந்திருக்கும் நூலே 'மரணத்தின் வாசனை'.போர் தின்ற சனங்களின் கதை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இதனை 'வடலி.கொம்' பதிப்பகம் வெளியிட்டுள்ளனர்.

1.ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப் போனார்..
2.ஓர் ஊரிலோர் கிழவி.
3.மந்திரக்காரன்டி அம்மான்டி.
4.குமார் அண்ணாவும் மிளகாய்க் கண்டுகளும்.
5.ஒருத்தீ.
6.சித்தி.
7.நீ போய்விட்ட பிறகு.
8.சலனங்கள் அற்றவனின் கடைசி நாள்.
9.தோற்றமயக்கங்களோ.
10.கரைகளிற்க்கிடையே
11.செய்தியாக துயரமாக அரசியலாக...
12.நரைத்த கண்ணீர்.

என பன்னிரண்டு கதைகளைக் கொண்ட தொகுதி சிறப்பான தொகுதியாக கொள்ளலாம்.அழகிய பதிப்பு. வெளியீட்டுத் துறையில் ஓர் மைல் கல்.

சிறுகதைக்கான தொடக்கம் விரிவு உச்சம் முடிவு என படித்த எமக்கு விதியாசமான கதை நகர்வினைக் கொண்டது. சிறந்த ஆவணப்பதிவு. முழுமையான ஒரு இனத்தின் வரலாற்றுப்பதிவின் ஒரு சிரு துளி எனினும் நல்ல பதிவு. 83 தொடக்கம் அல்லது இந்திய இராணுவத்தின் கொடூரங்கள் / மாவிலாறு தொடங்கி முள்ளிவாய்க்கால் வரையான கொடுமைகள், இன்று வரை தொடர்கின்ற இன அழிப்பு,அவலம் என்பவற்றின் ஒரு புள்ளி. அவலத்துள் வாழ்ந்தவனுக்குத்தான் அதன் வலி தெரியும். பதுங்கு குழி வாழ்வு, காடுகளுக்கூடான பயணம்... ஒவ்வொரு வார்த்தைகளும் நமக்கு களத்துக்குள் அழைத்து செல்லுகின்ற வல்லமை அகிலனின் கதைகளுக்கு கிடைத்திருக்கின்றது. பாம்பு கடித்து இறக்கின்ற தந்தை,கடலில் மூழ்கிப் போகும் இளைஞன்,தான் வாழ்ந்த மண்ணில் மரணிக்கிற கிழவி,தான் நேசித்த தோழி பற்றிய நினைவின் வலி .... பாத்திர வார்ப்பு அபாரம்.அகிலனின் சொந்த கதையாகவும் இருக்கலாம்.ஆனால் நமக்கு நடந்தது போல உணர முடிகிறது. அனுபவம் தனக்கு நடந்தது அல்லது பிறருக்கு நடந்தது.எனினும் நமக்குள் நடந்த நமக்கான சோகத்தை சொல்லிச் செல்வதால் நெருக்கமாகின்றது.சொல்லடல் இயல்பாகவெ வந்து வீழ்கிறது.எங்கள் மொழியில் எழுத முடிகின்றதான இன்றைய முயற்சி வெற்றி பெற்றே வருகிறது எனலாம்.சில சொற்களுக்கான விளக்கங்கள் தரப்பட்டுள்ளனவெனினும் நம் மொழியில் பிறழ்ச்சி ஏற்படாதவாறு எழுதியுள்ளமை வரவேற்கக் கூடியதே.போரின் கொடுமைகளை அவர்களின் மொழியில் பேசவேண்டும்.இங்கு அது சாத்தியமானது அகிலனுக்கு கிடைத்த வெற்றி. கதியால் , குத்தியாக , திரிக்கிஸ் , குதியன்குத்தும் , அந்திரட்டி, உறுக்கி, கொம்புபணீஸ் , புழூகம் ,தத்துவெட்டி, தோறை , எணேய் , நூக்கோணும், அம்மாளாச்சி , ரைக்ரர், விசர் , மொக்கு , சாறம் , சாமத்தியப்பட்டிட்டாள் ... இவைகள் சில விளக்கங்களுக்கான சொற்கள்..

'நரைத்த கண்ணீர்' எனும் கதையில் வயதான தம்பதியரைப் பார்க்கப் போகும் இளைஞனின் நிலை பற்றிச் சொல்கிறது.தங்கள் மகன் பற்றிக் கேட்டதற்கு விசாரித்துச் சொல்ல முற்பட்டும் அந்த தம்பதியர்க்கு அவர்கள் மகன் வீரமரணம் அடைந்தது பற்றிச் சொல்லி அவர்களை சோகத்தில் ஆழ்த்த விரும்பாது தவிர்த்த போதும் மணைவியின் சந்தோசமே பெரிதென அந்த பெரியவர் மறைத்தது தெரிய வர அவனுடன் சேர்ந்து எமக்கும் வலிக்கிறது. தப்பிச் செல்ல இன்றோ நாளையோ என்றிருக்கையில் திடீர் பயணிக்க நேர்கையில் மூட்டை முடிச்சுகளுடன் பயத்துடன்... தோணிக்காரனுடன் புறப்படுகின்ற அவர்களுடன் நாமும் பயணிக்கிற அனுபவம் (கிளாலி,கொம்படி,ஊரியான் பாதைப்பயணங்கள்/96ன் பாரிய இடப்பெயர்வுகள்) தோணிக்காரன் இடை நடுவில் ஒரு மணற் திட்டியொன்றில் இறக்கிவிட்டுச் சென்றுவிட தவித்த தன் குடும்பத்தை தானே காப்பாற்ற எண்ணி படகுக்காரனுடன் வருவதாகக்க் சொல்லி கடலுள் குதிக்க மூழ்கிப் போகிறான்.பத்திரிகைச் செய்தியில் படித்திருந்தாலும் உண்மைக்கதையின் பதிவாகியிருக்கிறது 'கரைகளிற்கிடையே' கதையில்.. மக்களுடன் இடம்பெயர்ந்து பின் தன் காணி/மிளகாய்க் கண்டுகளை பார்க்கச் சென்ற குமார் அண்ணையின் அவலம்/சோகம் 'குமார் அணாவும் மிளகாய்ச் செடிகளும்'கதை சொல்கிறது.

இப்படி ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கதை சொல்லி அசத்துகிறது. ஏகலைவர்களின்றி நகர்கின்ற போருக்குள் வாழ்ந்த மக்களிடத்திலிருந்து புறப்பட்ட படைப்பாளர்கள் சரியான தளத்தை நோக்கிப் பயணிப்பது 'மரணத்தின் வாசனை' சொல்லி நிற்கிறது. ஜனவரியிலும்(2009)மேயிலும் இரண்டு பதிப்புக்களை கண்டுள்ள இந் நூலின் அட்டைப்படம் மருதுவின் ஓவியத்தால் மிகச் சிறப்பாக இருக்கிறது. த.அகிலனிடமிருந்து நிறைய ஆவணப்பதிவுகளை படைப்புலகம் வாழ்த்துக்களுடன் எதிர் பார்த்து நிற்கிறது.
நூல் அறிமுகம்: கருணாகரனின் 'பலிஆடு'

-முல்லைஅமுதன் -




கவிஞர்.கருணாகரன் நமக்குத் தந்திருக்கும் மூன்றாவத் கவிதை நூல் 'பலிஆடு' ஆகும்.

'..உனனை என்னுள் திணிப்பதையும்
என்னை உன்மீது ஏற்றுவதையும் வெறுக்கிறேன்
உன் மகிழ்ச்சியை நீயே பாடுவதிலும்
என் பாடலை நானே இசைப்பதிலும்
ஆனந்தமுண்டல்லவா?...'

கவிஞர் முதல் நூலின் முதல் கவிதையுடன் தன்னை அறிமுகம் செய்தாலும் கவிஞருக்கு அறிமுகம் தேவையற்றது. ஏற்கனவே 'வெளிச்சம்' சஞ்சிகை மூலமும், தமிழீழ தேசிய தொலைக்காட்சியிலும் முக்கிய பொறுப்பில் இருந்தவர். உலக இலக்கியங்களில் அதி தீவிரம் காட்டியவர். நல்ல இலக்கிய முயற்சிகளுக்கு ஆதரவாக இருந்தவர்.எனக்கு சுந்தரராமசாமியின் எழுத்துக்களை அறிமுகம் செய்து வைத்தவர். இவரின் கவிதைகள் வாழ்வின் அணைத்து பரிமாணங்களையும் உள்வாங்கிய படி எழுதப்பட்டிருக்கிறது. காலடிக்குள் நழுவிப்போகும் வாழ்வின் வசந்தங்கள்..கைகளுக்குள் அகப்படாமல் விலகிப்போகும் சுதந்திரம்..வண்ணாத்திப்பூச்சியை தேடி ஓடும் குழந்தையை பதுங்கு குழிக்குள் அடைக்கின்ற சோகம்,வீரியன் பாம்பு நகரும் போதும்...குண்டுகள் வீழ்கின்ற வழவுக்குள் இருளில் அருகாய் கேட்கின்ற துப்பாக்கி வேட்டுக்கள்...எது வாழ்க்கை?எங்கே வாழ்வது?பசிக்கின்ற வயிற்றுக்கு உணவு எங்கே?எல்லாவற்றுக்கும் மேலான சுதந்திரம் பற்றிய சிந்தனை அறவே அற்று வாழ்வா சாவா என்கிற ஓட்டத்தில் நின்று நிதானித்து கவிதை பாடும் நேரப் பொழுதை ஒதுக்க முடியுமா? அதற்குள்ளும் தன்னை பதிய வைக்கின்ற முயற்சிக்கிற ஒரு கவிஞனின் முயற்சியைப் பாராட்டத் தான் வேண்ட்டும்.

அறுபதிற்குப் பிறகு முகிழ்க்கின்ற நமது நவீன கவிதைப் படைப்புக்கள் தொடர்ச்சியான வளர்ச்சிப் பாதையிலேயே சென்று கொண்டிருப்பதையே உணர முடிகிறது.மகாகவி முதல் இன்றைய த.அகிலன் வரை விதைக்கப்பட்டிருக்கிறது எனலாம். 'உண்மையைக் கண்டறியும் போதும் அதனோடு இணைந்திருக்கும் போதும் தனிமையும் துயரமும் இயல்பாக வந்து சேர்கின்றன.இந்த தனிமையும் துயரமுமே என் வாழ்வின் பெரும் பகுதியாகவும் இருக்கின்றது.ஆனாலும் இது பேராறுதலைத் தருகின்றது....'என கவிஞர் சுதாகரிப்பதும் தெரிகிறது.

'என்னுடைய புன்னகையைத் தந்துவிட்டு
எல்லோருடைய கண்ணீரையும்
எடுத்துச் செல்கிறேன்.
மாபெரும் சவப்பெட்டியில்
நிரம்பியிருக்கும் கண்ணீரை போக்கி விடுகிறேன்.
கள்ளிச்செடிகள் இனியில்லை.
காற்றுக்கு வேர்களில்லை.
ஒளிக்குச் சுவடுகளிலை.
எனது புன்னகை
நிலவினொளியாகட்டும்.'

இவரின் முதல் இரண்டு (ஒரு பொழுதுக்கு காத்திருத்தல்(1999),ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள்.(2003) நூல்களினூடாக தன்னை ஒருமுகமாக ஸ்திரப்படுத்தியபடி 'பலிஆடு' எனும் மூன்றாவது கவிதை நூலுடன் னம்மைச் சந்திக்க வந்துள்ளார்.

'நிலவெறிக்குது வெறுங் காலத்தில்
வீடுகள்
முற்றங்கள்
தோட்டவெளி
தெரு
எல்லாமே சபிக்கப்பட்டு உறைந்தன போல
அமுங்கிக் கிடக்கின்றன..'
கவிஞனின் கவலை
நமக்கும் வலிக்கவே செய்கிறது..
'நாங்கள் எதற்கு
சாட்சிகளாக்கப்
பட்டிருக்கிறோம்
அல்லது
எதற்காக
சாட்சிகளாயிருக்கிறோம்..
எனக்கேதும்
புரியவில்லை.
பகலையும் இரவையும்
கண்டு
அஞ்சும் என்
கண்களை
என்ன செய்வேன்..'

போரினுள் அன்பையும் கருனையையும் எதிர்பார்க்கும் உண்மைக் கவிஞனின் வார்த்தை வடிவங்கள் அவைகள். இன்பங்கள் அணைத்தும் துடைத்தெறியப்பட்டுள்ள சூழலில் துன்பத்தை மட்டுமே காவியபடி பதுங்குகுழி,காடுகள்,அகதிமுகாம் என வாழ்விழந்து பலிக்கடாவாக்கப்பட்டிருக்கும் ஒரு மனிதகுலத்தின் விடுதலை எப்போது என்கிற ஏக்கம்...

'பூக்கள் இனி எப்படியிருக்கும்
மரங்கள் மிஞ்சியிருக்குமா
பறவைகளின் சிறகுகளில்
சாவு வந்து குந்திக் கொண்டிருக்கும்
காலம் இதுவல்லவா...'
'நாடு கடக்க முடியவில்லை
சுற்றி வரக் கடல்
சிறைப் பிடிக்கப்பட்ட தீவில்
அலைகளின் நடுவே
துறைமுகத்தில்
நீண்டிருக்கும் பீரங்கிக்கு
படகுகள் இலக்கு.
மிஞ்சிய பாதைகளில்
காவலர் வேடத்தில் கொலையாளிகள்..
குற்றமும் தண்டனையும் விதிக்கப்பட்ட
கைதியானேன்...'

ஒவ்வோரு முறையும் தப்பி ஓடுதல் ஆபத்தானது.சுடப்படுவர்.கடலுக்குள் மூழ்கடிக்கப் படுவர்.கைதியாக்கப்படுவர்.

'எனது மொழி என்னைக் கொல்கிறது
மொழியொரு தூக்கு மரம்
என்றறிந்த போது
எனது தண்டனையும் ஆரம்பமாயிற்று
எனது குரல்
என்னை அந்தர வெளியில் நிறுத்துகிறது
விரோதியாக்கி...'

நமது சாவு நம்மை நோக்கி வருகிறது அல்லது நாமே அதை நோக்கி நகர்கிறோம்.முப்பது வெள்ளிக்காசுக்காய் யேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் ஒருபுறம்...உலக வல்லாதிக்கப் போட்டிகளில் அழிகிறது எம் பூமி..இரத்தவாடை வீசுகின்ற நிலத்தில் நிமிடத்திற்கொரு பிணம் வீழ்கிற கொடுமைக்கு விதியா காரணம்?

எமக்கான நிலத்தில்,எமக்கான கடலில் வாழ்வுக்கான தேடலை சுதந்திரமாக தேட முடியாத அவலம்....கொடுமையிலும் கொடுமை! முகம் தெரியாத துப்பாக்கிகளின் விசையை அழுத்தும் வேகத்தில் மனிதம்...

'யாருடயதோ சாவுச் செய்தியை
அல்லது கடத்தப்பட்டதான
தகவலைக் கொன்டுபோகக்
காத்திருந்த தெரு...'
....'சொற்களை முகர்ந்து பார்த்த நாய்கள்
விலகிச் சென்றன அப்பால்
கண்ணொழுக..
பாம்புகள் சொற்களினூடே
மிக லாவகமாய் நெளிந்து சென்றன
நடனமொன்றின் லாவகத்தோடு...'

சொற்கள் சுதந்திரமாய் விழுந்திருக்கின்றன. அணைத்து விஞ்ஞான பரீட்சாத்தங்களும் பரீட்சித்து பார்க்கப்படுகின்ற பூமி எங்களது. பலஸ்தீனம் பற்றி பேசத் தெரிந்த பலருக்கு நமது பலம், பலவீனம், கொடூரம், சோகம் தெரியாதது மாதிரி இருப்பது தான் வலிக்கிறது. மனு நீதி சோழனின் வருகை எதுவும் நடந்துவிடவில்லை.

...'வானத்தை நான் பார்க்கவில்லை
நட்சத்திரங்களையும் காணவில்லை
பதுங்கு குழியின்
இருளுக்குள் வீழ்ந்த வாழ்வின்
சருகு நான்....
..... நிலம் அதிர்கிறது.
குருதியின் மணத்தையும்
மரணத்தின் அருகாமையையும் உணர்கிறேன்
கந்தகநெடில்
கபாளத்தைப் பிளக்கிறது
வீரர்கள் முழங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்
அழியும் வாழ்வின் பிரகடனத்தை
ஒவ்வொரு துப்பாக்கியிலும்
ஒவ்வொரு பீரங்கியிலும்...'

உண்மையாக,உண்மைக்காக,சொல்லவந்த சேதியை சரியாகச் சொன்ன கவிஞனின் வரலாற்றுப் பதிவு இந் நூலாகும். உலக ஒழுங்கின் மாற்றத்தால் ஏற்பட்ட அழிவுகளை ஓரளவுக்கேனும் தன் மொழியில் சொல்லியுள்ள கருனாகரன் 'பலிஆடு' போன்று தொடர்ச்சியாக நூல்களைத் தருவதனால் உலகம் தன்மௌனம் கலைக்கலாம். அன்று தொட்டு இன்று வரை வீச்சுள்ள படைப்புகளை போருக்குள் வாழ்ந்த எழுத்தாளர்களே தந்துள்ளார்கள்.புதுவை. இரத்தினதுரை, தீபச்செல்வன்,சித்தாந்தன், வீரா,அமரதாஸ், த.அகிலன் என கருனாகரனுடன் வளர்கிறது. 113 பக்கங்களில் அழகிய வடலி வெளியீடாக (2009) நம் கரம் கிட்டியுள்ள நூலுக்குச் சொந்தக்காரர்களுக்கு (படைப்பு / பதிப்பு) வாழ்த்துச் சொல்வோம்.

சந்திரவதனாவின்-'மனஓசை'

- முல்லைஅமுதன் -

ஈழத்து பெண் படைப்பாளர்களில் வித்தியாசமாக சிந்திக்க முனைந்த சந்திரவதனா பாராட்டுக்கு உரியவர். மீனாட்சி நடேசையர் தொடக்கி வைத்த பெண்களின் படைப்புலகம் இன்று வரை தொடர்கிறது. ஈழத்தின் கல்வி,மேலைநாடுகளின் இலக்கிய வருகை,திராவிட எழுத்துகளின் பயிற்சி, தென்னிந்திய சஞ்சிகைகளின் ஆக்கிரமிப்பு, இயல்பாகவே நடைமுறை வாழ்வியலின் ஏதுநிலை என நமது பெண் படைப்பாளர்களின் வருகை நிகழ்ந்துள்ளது.
ஆமை நகர்வது போலவே பெண் படைப்பாளர்களின் வருகை 80 இற்குப் பிறகு நிகழ்ந்த அதிசயம் அதிக பெண் படைப்பாளர்களின் படைப்புக்களை நாம் படிக்க வாய்ப்பாகியது. மீனாட்சி நடேசையர் ,கோகிலம் சுப்பையா, குறமகள், பவானி ஆழ்வாப்பிள்ளை, யாழ்நங்கை, குந்தவை, கோகிலா மகேந்திரன், மண்டூர். அசோகா, நயீமா சித்தீக், தாமரைச்செல்வி... எனத் தொடங்கி சந்திரவதனா ,சந்திரா ரவீந்திரன் வரை நீள்கிறது. உள்ளக, வெளியக இடப்பெயர்வுகள் இவர்களது புதிய சிந்தனை விரிவாக்கத்துக்கு உதவியது. 83இற்கு பின்னரான இனக்கலவரம்,போராட்ட உணர்வு அல்லது போருக்குள் வாழ்கின்ற சூழல் இவர்களையும் ஆகர்சித்ததில் வியப்பில்லை. இங்கு சந்திரவதனாவின் தாய்-தந்தையரின் அறிவூட்டல் இவருக்குள் ஒரு எழுத்தாளரை உருவாக்கியிருக்கலாம். சூழலை அனுபவித்து, வாழ்க்கையை சரிவர உள்வாங்கி அதனை படைப்பில் தந்திருப்பது உண்மையில் பாராட்டத்தான் வேண்டும். எழுத்தும் வாழ்வும் ஒன்றாகி இவர் தருகின்ற பதிவுகள் சமூக வட்டத்தின் வரம்புகளை மீறாமல் வார்த்தைகள் சிதறாமல் எங்களுக்கு தந்த ‘மனஒசை’ இல் சிறப்பான சிறுகதைகளை வாசிக்க முடிந்திருக்கிறது. ஏற்கனவே ‘ஈழமுரசு’ பத்திரிகையில் வாசித்த உணர்வு இன்றும் என்னுள் ஞாபக விதைகளை விதைத்ததை உணரமுடிகிறது. என் தந்தையுடன் அவர் மாற்றலாகி சென்ற இடங்களில் நானும் என் தங்கைகளும் சிறு சிறு அசைவுகளையும்/ அமைவுகளையும் அனுபவித்து நுகர்ந்த நிகழ்வை நினைத்துப் பார்க்க வைத்த கதைகள் அனேகம். ஒவ்வொரு கதைகளை வாசிக்கும் போதும் என்னுள் எழுகின்ற உணர்வு என் வாழ்வின் கதைகளைப் போலுள்ளதாக உணர்கையில் எல்லா யாழ்ப்பணத்துக் கிராமங்களின் கதைகளே என உணர்த்தப்படுவது புரிகிறது. பருத்தித்துறை தொடங்கி நாகொல்லாகம ஊடாக ஜெர்மனி வரை தொடர்கிறது. பழகிய பாத்திரங்கள், ஊர்த் திருவிழா ஞாபகங்கள் வித்தியாசமான சிந்தனை, வார்த்தைகளை லாவகப்படுத்தும் திறமை இவருக்கு எல்லாமே கைகொடுத்திருக்கிறது. இதுவரை வாசித்த கதைகளூடாக நம்பிக்கையும், ஆரோக்கியமாகவும் ஈழத்து பெண் படைப்பாளர்கள் எழுதுகிறார்கள். இங்கு இவரும் அப்படியே. மொழிக்கு முழு உரிமையும் எழுத்தில் தந்திருக்கிறார். வாய்மொழிச் சொற்கள் ஆளுமையுடன் வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. கனவு/கனவு காத்த வாழ்வு.. அது தருகின்ற சோகம் /வலிகள் என் போன்ற வாசகர்களை உள்வாங்குகின்ற நிகழ்வு நடந்திருக்கிறது.

இன்றைய பெண்களின் பெண்ணியம் சார்ந்த தவறான சிந்தனைகள் மீது எனக்கு அவநம்பிக்கை உண்டு. எனினும் வரம்புகள் மீறாமல் எழுதியது ஆறுதலைத் தந்துள்ளது.

ரயில் பயணம் அலாதியானது. அன்றைய யாழ்ப்பாணத்து யாழ்தேவி / மெயில் ரயில் பயணம் சுவாரஷ்யம் நிறைந்தது. வழியில் தெரிகின்ற மரங்கள், மனிதர்கள், தரித்து நிற்கிற போது வந்து முண்டியடித்த படி ஏறுகிற வியபாரிகள்/பயணிகள், சுதந்திரமாக பத்திரிகையை விரித்தபடி தூங்குகிற மனிதர்கள் அவ் அனுபவம் இப்போது இல்லை. ஐ டி கேட்டு பயமுறுத்தும் இராணுவம், ஆங்கங்கே பதிவு செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை.. இப்படி நிறைய அனுபவ வெளிப்பாடுகள் கதைகள் நம்மை உலுக்கிப் பார்க்கின்றன. சுதந்திரமாக எதுவும் இல்லைதான். முன்னால் நகர்கிற எதுவும் நீ அன்னியன் என்பதை சொல்லாமல் சொல்லுகிற செய்திகள்.

மனிதர்களால் நிச்சயிக்கப்பட்டு இணைகிற மனங்களுள் எழுகின்ற விரிசல்கள் ஒரு பேதையை மரணிக்க வைக்கிறது ‘வேஷங்கள்’ இல். புலம்பெயர் சூழலில் இயல்பாகவே ஆகிவிட்ட உறவுப் பிறழ்வு உமா மூலம் சாட்சியமாக்கப் பட்டுள்ளது.

சின்னச் சின்ன அனுபவ வெளிப்பாடுகளை, சில பயணங்களில் ஏற்படுகின்ற எரிச்சலூட்டுகிற சம்பவங்களை கோகிலா என்ற பாத்திரத்தின் மூலம் ‘பயணம்’கதையில் சொல்கிறார்.

‘கண்டவற்றை நாளும் கனவிற் …திண்டிறலிற் கென்னோ…’ திருவருட்பயன் தருகின்றதாயினும் உண்மையே. கண்முன்னே நிகழ்ந்த சம்பவங்களையே மனதிருத்தி எழுத்தில் தந்து எம்மைத் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

இன்றைய பெண் படைப்பாளர்களின் சிந்தனை விரிவு பட்டிருக்கிறது. அனுபவம் என்பதே நேரடி/பிறரின் என வகைப்படுத்துகையில் இங்கு சந்திரவதனா தன் அனுபவங்களை ஆழமாக உள்வாங்கியிருப்பது சிறப்பைத் தருகிறது.

பெண் என்பவளே மென்மையானவள் தான். அந்த பெண்மையிலும் சீரிய சிந்தனைகள் பூக்கும் தான். இங்கு சிறுகதைகளாய்ப் பூத்திருகிறது.

தேனீர் குடிக்க வரச் சொல்லுகிறவனிடம் நாசூக்காய் நழுவுகின்ற கோகிலாவின் சாமர்த்தியம் புலம்பெயர் நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணும் அனுபவ வாயிலாகப் பெற்றிருக்கிறார்கள். ஊரில் ஊசியும், கொஞ்சம் மிளகாய்த் தூளும் அவர்களின் கைப் பையில் கொண்டு செல்லும் நம் ஊர் பெண்களை நினைத்துப் பார்கிறேன். இங்கு வாழ வேண்டிய சூழலில் தம்மை பழக்கப் படுத்திக் கொண்டுள்ளார்கள்.

உயரத்தில் இருந்து வீழ்ந்து மரணிக்கும் பெண்ணிலிருந்து பிற கதைகள் மாறினாலும் ஒரு மையப் புள்ளிக்கே வந்து நிற்கிறார்கள்.

பெண்ணின் மன வலி அவளுக்குத் தான் தெரியும். முகம் தெரியா ஆணுக்கு மாலை இடுவதும் அவனின் எல்லா சுகங்களுக்கும் / துக்கங்களுக்கும் அனுசரித்துப் போகின்றவளாக, விட்டுக்கொடுத்தபடி யாரோ வகுத்த சமூக வட்டத்துள்ளிலிருந்து வெளி வரமுடியாமல் தவிக்கின்ற பெண்ணின் மன நிலைக்கேற்றவாறு, ஊர் மாதிரி அம்மா வீட்டுக்கு பொதிகளுடன் வந்து இறங்காமல் தன் முடிவை தானே எடுக்கின்றவளாகவும், மகனுக்காக வாழ முடிவெடுக்கிறவளாகவும், முகம் தெரியாத ஊரில் யாரோ பொருத்தம் பார்த்து பார்சல் மனைவியாக வந்த ஒருத்தியின் வாழ்நிலை சிதறுகிற நிலையிலும் நிதானமாக முடிவெடுத்த பெண்ணின் மன உளைச்சல் அழகாக படம் பிடித்துக் காட்டப் பட்டிருக்கிறது. சங்கர்- கோகுல்- இந்து மூன்று பாத்திரங்களூடாக நம்மையும் நிமிர வைக்கிறார்.

ஊரின் நிகழ்வுகளுக்குள்/ இராணுவக் கெடுபிடிகள், இதர அச்சுறுத்தல்கள் இவற்றுக்குள் மத்தியில் தன் அக்கா பேசிய மாப்பிள்ளையுடன் வந்த சங்கவிக்கு தன் கணவன் சேகரின் இன்னொரு பக்கம் தெரிய வர, முதலில் தன்னைத் தானே சிறைப்படுத்தி வாழுதலில் இருந்து நிதானமாக தன் நாளை தீர்மானிக்கிறவளாக சங்கவி மாறுகையில் வரம்புகளை உடைக்க வைக்கிற சிந்தனை தெளிவு படைப்பாளரிடம் நிறையவே தெரிகிறது. வர்ணனைகள் அளவாக சேர்க்கப்பட்டுள்ளது. இன்னொரு சேதியாக இளமையான புகைப்படங்களூடாக பெண்ணையும் அவள் சார்ந்த உறவுகளையும் ஏமாற்றுகிறதாக சேகர் பாத்திரமூடாக கோடிட்டுக் காட்டுகிறார். நிறைய கனவுகளுடன் வருகின்றவள் தன் வாழ்வு பற்றிய கனவுகள் உடைகையில் சீற்றம் கொள்வதை அழகாக புரியவைக்கிறார்.

தங்களின் வாழ்வுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணம் செய்த தாய் தந்தையரை புலம்பெயர் தேசத்துக்கு அழைத்து வந்து விட்டு அவர்களின் சுகதுக்கங்களை மறந்து உபகாரப்பணத்துக்காக வருத்துகின்ற கொடுமைகள் சோகம் தருகிறது. பாத்திரங்களை உள்வாங்குகிற அனுபவங்கள் அதை எழுத்தில் தருகிற ஆற்றல் எம்மை மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது. மொழியைக் கைக்குள் அடக்குகின்ற வல்லமை எதிர்கால சிற்பியின் இன்றைய தரிசனம் நமக்கு ‘மனஒசை’யைத் தந்துள்ளது.

mullaiamuthan_03@hotmail.co.uk
முல்லை அமுதனின் 'இலக்கியப் பூக்கள்' ஓர் அறிமுகம்!



- பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா -

இங்கிலாந்து தேசத்தில் ஈழத்து நூல்களின் கண்காட்சிகளை நடாத்தி ஈழத்துத் தமிழ் அறிஞர்களினதும், எழுத்தாளர்களினதும் படைப்புக்களை அனைத்துலக ரீதியில் அறிமுகப் படுத்திவரும் பிரபல எழுத்தாளர் முல்லை அமுதன் அவர்கள் தொகுத்தளித்திருக்கும் இலக்கியப் பூக்கள் என்னும் நூல் சென்னை காந்தளகத்தின் தயாரிப்பில், “காற்றுவெளி” வெளியீட்டகத்தின் வெளியீடாக மலர்ந்திருக்கின்றது. ஈழத்தின் சிறந்த தமிழ் அறிஞர்கள், புகழ்பெற்ற எழுத்தாளர்கள், பெருமைக்குரிய பத்திரிகையாளர்கள், இணையற்ற இலக்கிய வாதிகள், வியக்க வைத்த சாதனையாளர்கள், என்றவாறு மகத்துவம் மிக்க நாற்பத்து நான்கு மனிதர்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். பெரும்பாலானவை அவர்களது வரலாறுகள் என்றே சொல்லலாம். இந்த நாற்பத்து நான்கு பேரையும் பற்றி முப்பத்தியிரண்டு எழத்தாளர்கள் எழுதியுள்ளார்கள். வரலாற்றில் வாழ்பவர்கள் மட்டுமன்றி அவர்களைப்பற்றி எழுதியுள்ள முப்பத்தியிரண்டு பேரில் பெரும்பாலானவர்களும் பிரபலமான எழுத்தாளர்களே.

இந்த நூலைப் படிக்கும் போது, நயம்பட எழுதப்பட்ட நல்ல சிறுகதைகளை வாசிக்கும் உணர்வு உண்டாகின்றது. சுவையான ஒரு நாவலை வாசிக்கத் தொடங்கினால் எப்படி முழுவதையும் படித்து முடிக்காமல் வைப்பதற்கு மனம் வருவதில்லையோ அதைப்போல, இந்த நூலும் உள்ளது. சிலரின் வாழ்வின் நிகழ்வுகளை அறியும்போது, எவ்வளவு மகத்தான மனிதர்கள் நம்மிடையே வாழ்ந்திருக்கிறார்கள் என்ற வியப்பு ஏற்படுகின்றது. மற்றும் சில தகவல்கள் திகைப்பைத் தருகின்றன. ஓவ்வொரு கட்டுரையும் நாவலொன்றின் ஒவ்வொரு அத்தியாயத்தைப் போன்று உள்ளது என்று சொல்லலாம். அல்லது ஒரு சிறுகதைத் தொகுதியில் அடங்கியுள்ள பல சிறுகதைகளைப்போல என்றும் சொல்லலாம். அந்த அளவுக்கு எல்லாக கட்டுரைகளும் இதயத்தைத் தொடுகின்றன. வாழ்க்கைக் குறிப்புக்களைத் தாங்கிய கட்டுரைத் தொகுதியொன்று இவ்வாறு மனதைக் கவர்வதென்பது அவ்வளவு சாதாரணமான விடயமல்ல.

நூலின் கடைசி இரண்டு பக்கங்களில் அந்த நாற்பத்து நான்கு பெரியார்களதும் பிறப்பும், இறப்பும் நிகழ்ந்த ஆண்டுகள் அட்டவணையாகத் தரப்பட்டுள்ளன. மிகவும் பயனுள்ள தகவல். அந்த அட்டவணையை நோக்கினால் ஒரே பார்வையிலேயே காலத்தால் முந்தியவர்கள் யாவர், பிந்தியவர்கள் யாவர், சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் யாவர் என்பன போன்ற தகவல்களை அறியமுடிகின்றது. அத்துடன் அளப்பரிய ஆற்றலுடன் விளங்கி, மிகப்பெரிய சாதனையாளர்களாகத் திகழ்ந்த சிலர் மிகக் குறைந்த காலமே இவ்வுலகில் வாழ்ந்திருக்கிறார்கள் என்னும் வேதனை தரக்கூடிய விபரத்தையும் கணக்கிட்டுக் காணமுடிகின்றது. நாற்பத்து நான்கு சாதனையாளர்களில் ஏறத்தாழ மூன்றில் ஒருபகுதியினர் ஐம்பத்து ஆறு வருடங்களுக்கும் குறைவான காலமே வாழ்ந்துள்ளனர். அவர்களில், மு.தளையசிங்கம், அங்கையன் கயிலாசநாதன், சுபா~; சந்திரபோஸ், செ.கதிர்காமநாதன் ஆகிய நால்வரும் நாற்பது வயதிற்கும் குறைவான தமது ஆயுட்காலத்தில் தமது சாதனைகளால் ஈழத் தமிழினத்தின் இலக்கிய வரலாற்றில் காலத்தால் அழிக்கமுடியாத பக்கங்களில் இடம்பிடித்திருப்பதை எண்ணிப் பார்க்கும் போது மேலும் பல ஆண்டுகள் அவர்களுக்கு வாழக்கிடைத்திருந்தால், ஈழத்தமிழ் இலக்கியம் இன்னும் பயன்பெற்றிருக்குமே என்ற எண்ணத்தால் நம் இதயம் வலிக்கிறது. அதிலும், ஒருகாலத்தில் வீரகேசரி பிரசுரமாக வெளியிடப்பட்டு, ஈழத்தமிழ் இலக்கிய ஆர்வலர்களால் பெரிதும் சிலாக்கியப்படுத்தப்பட்ட, “நான் சாகமாட்டேன்” என்ற மொழிபெயர்ப்பு நாவலைத் தமிழ் உலகுக்கு அளித்த செ. கதிர்காமநாதன் அவர்கள், முப்பது ஆண்டுகள் வரையே இவ்வுலகில் வாழ்ந்தமையை அறியும்போது சில நிமிடங்கள் நாம் செயலற்றுப்
போய்விடுகின்றோம்.

பிறந்த ஆண்டு அடிப்படையில் காலத்தால் முந்தியவர்களில் இருந்து கட்டுரைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் பிறந்த ஆண்டுக் கணக்கை அறிந்து கொள்ளமுடியாத நிலையில், சங்க காலத்தில் வாழ்ந்தவராகக் கருதப்படும் ஈழத்துப் பூதந்தேவனார் அவர்களைப் பற்றிய கட்டுரை முதலாவதாக இடம்பெற்றுள்ளது. 1848 ஆம் ஆண்டு பிறந்த உரையாசிரியர் ம.க.வேற்பிள்ளை அவர்களைப்;பற்றிய கட்டுரை இரண்டாவதாக இடம்பெற்றுள்ளது. 1975 ஆம் அண்டு பிறந்த சுபாஸ் சந்திரபோஸ் பற்றி, 44 ஆவதாகக் கடைசிக் கட்டுரையாக அமைந்துள்ளது. 1942 ஆம் ஆண்டில் பிறந்து, எழுத்தாளராக மலர்ந்து, கல்விமானாகச் சிறந்து, இலங்கை நிருவாக சேவையிலே உயர்ந்து, 1972 ஆம் ஆண்டில் இவ்வுலக வாழ்வைத் துறந்து, முப்பது வயது வரையே வாழ்ந்த செ.கதிர்காமநாதன் அவர்களைப் பற்றிய கட்டுரை முப்பதாவது கட்டுரையாக அமைந்திருப்பது வியப்பைத் தருகின்றது.

“ஈழத்து முன்னோடித் தமிழ்ப் பெரும் புலவர், ஈழத்துப் பூதன்தேவனார்” என்ற கட்டுரையை மயிலங்கூடலூர் பி.நடராசன் அவர்கள் எழுதியுள்ளார்கள். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த ஈழத்துத் தமிழ் அறிஞரான இந்த ஈழத்துப் பூதன்தேவனாருடைய பாடல்கள் சங்க இலக்கியங்களிலே இடம்பெற்றுள்ளன என்ற தகவல் இந்தக் கட்டுரையிலே பதிவு செய்யப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களான நற்றிணையில் இரண்டு பாடல்கள், குறுந்தொகையில் நான்கு பாடல்கள், அகநானூறில் மூன்று பாடல்கள் என்று ஆகமொத்தம் ஒன்பது பாடல்கள் இவரது புலமைக்குச் சான்றாக உள்ளன. பூதன்தேவனார், ஈழத்துப் பூதன்தேவனார், மதுரைஈழத்துப் பூதன்தேவனார் என்று மூன்று பெயர்கள் வௌ;வேறு இடங்களில் அறிஞர்களால் குறிப்பிடப்பட்டு வந்தாலும் இந்த மூன்று பெயர்களுக்கும் உரியவர் ஒருவரே என்பதையும், அவர் ஈழத்தில் தமிழ் அறிஞராக விளங்கிய பூதன்தேவனாரே என்பதையும், அவர் தமிழகம் சென்று தமிழகப் புலவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்பதையும், மதுரைத் தமிழ்ச்சங்க விழாவிலே பாண்டிய மன்னன் பசும்பூட் பாண்டியனால் “மதுரை ஈழத்துப் பூதன்தேவனார்” என்று வரவேற்று அழைக்கப்பட்டார் என்பதையும் கட்டுரை ஆசிரியர் தர்க்க முறையிலே நிறுவிப் பதிவு செய்துள்ளார்.

மாபெரும் தமிழ் அறிஞராக விளங்கிய, உரையாசிரியர் ம.க. வேற்பிள்ளை அவர்களதும், அவரின் பிள்ளைகளான பண்டிதர் ம.வே.திருஞான சம்பந்தப்பிள்ளை, குருகவி ம.வே.மகாலிங்கசிவம் ஆகியோரதும் வரலாறுகளை வாசிக்கும்போது, அவர்களது பரம்பரையில் புலவர் ம.பார்வதிநாதசிவம், அவரின் மகன் கவிஞர் ம.பா.மகாலிங்கசிவம் என்றவாறு உரையாசிரியரின் நான்காவது தலைமுறையும் தமிழ் அறிஞர்களாகத் திகழ்ந்து தமிழ்ப்பணி புரிந்து வருகின்ற பெருமை மிக்க தகவலையும் காணமுடிகின்றது. தமிழ் மக்களால் பெரும்பாலும் அறியப்பட்டவர்களும், தமிழ் எழுத்தாளர்களாலும், பேச்சாளர்களாலும் அடிக்கடி நினைவுபடுத்தப்படுபவர்களுமான சைவப் பெரியார் சிவபாதசுந்தரனார், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, பேரறிஞர் தவத்திரு தனிநாயகம் அடிகளார், இரசிகமணி கனக செந்திநாதன், பேராசிரியர் க.கைலாசபதி, பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா முதலியோரைப்பற்றி மட்டுமன்றி, இன்றைய தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் நன்கு அறிந்திராத தமிழ் அறிஞர்கள் சிலரைப்பற்றியும் கட்டுரைகள் இந்த நூலிலே இடம்பெற்றுள்ளன. அந்தக் கட்டுரைகளின் மூலம் அந்தத் தமிழ் அறிஞர்களின் புலமைச் சிறப்புக்களை அறியமுடிகின்றது. இவர்களைப் போல இன்னும் எத்தனையோ தமிழ் அறிஞர்கள் ஈழத்திலே வாழ்ந்திருக்கின்றார்கள், எண்ணற்ற நூல்களை எழுதியிருக்கிறார்கள், அளவற்ற தமிழ்ப்பணிகளைப் புரிந்திருக்கின்றார்கள். இதுபோன்ற நூல்களின் மூலமே அவர்களைப்பற்றியெல்லாம் ஆவணப்படுத்த முடியும், உலகுக்கு அறியத்தர முடியும்.

அவ்வாறே, புகழ்பெற்ற எழத்தாளர்களாக, பத்திரிகையாளர்களாக, கவிஞர்களாக விளங்கி இன்றும் மக்களிடையே மிகவும் பிரபல்யம் மிக்கவர்களாகத் திகழும் அ.செ.முருகானந்தன், அ.ந.கந்தசாமி, தில்லைச்சிவன், வரதர், நந்தி, சொக்கன், யாழ்வாணன், ஏ.ஜே.கனகரட்ணா, அப்பச்சி மகாலிங்கம், மு.தளையசிங்கம். பிரமிள், செ.கதிர்காமநாதன், அங்கையன் கைலாசநாதன், செ.யோகநாதன், செம்பியன் செல்வன், சிலோன் விஜேந்திரன், நாவண்ணன், ராஜசிறீகாந்தன், சி.புஸ்பராஜா, முல்லையூரான், சுபாஸ் சந்திரபோஸ் என்பவர்களைப்பற்றிய வரலாறுகளையும், தமது நினைவுகளையும் எழுத்தாளர்கள் இந்த நூலிலே கட்டுரைகளாகத் தந்திருக்கின்றார்கள். மிகப்பெரிய சட்ட அறிஞராகத் திகழ்ந்து, 1978 அம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையினுள்ளே பார்வையாளராக நுழைந்து, அமைதியாக அமர்ந்து, யாரும் எதிர்பாராத விதமாக எழுந்து. மூன்று நிமிடங்கள் ஈழத்தமிழர் பிரச்சினையை அதிரடியாக மொழிந்து உலகத் தலைவர்களையெல்லாம் வியந்து நிற்க வைத்த கிருஸ்ணா வைகுந்தவாசன் அவர்களைப்பற்றிய கட்டுரையும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது.

நவரச நடிப்பாற்றலில் சிறந்து விளங்கிய இளவாலை விஜயேந்திரன் அவர்கள் ஆசுகவி கல்லடி வேலப்பிள்ளை அவர்களின் பேரன் என்பதாலோ என்னவோ நினைத்தவுடன் கவி இயற்றுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தவர். தமிழகத்தில் வாழ்ந்தபோது கலையுலகத் தொடர்பினால் சிலோன் விஜயேந்திரன் என அழைக்கப்பட்டவர். நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்புப் பெற்றவர். திரைப்பட முன்னணிக் கதாநாயகர்கள் பலருடன் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தந்தை சைவசமயத்தவர், தாயார் கிறீஸ்தவர், மனைவி இஸ்லாமியர் என்று மும்மதங்களோடும் தன் வாழ்வை இணைத்துக்கொண்ட சிலோன் விஜயேந்திரன் சிலகாலம் இஸ்லாமிய மதத்தினைத் தழுவி இஸ்லாமியராகவும் வாழ்ந்தவர் என்ற தகவல்களைத் தருகின்றார் அவரைப்பற்றிய கட்டுரையை எழுதியிருக்கும் தமிழறிஞர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்கள்.

மிகப்பெரிய எழுத்தாளராக விளங்கிய அ.செ.முருகானந்தன் அவர்கள் பற்றி எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்கள் எழுதியுள்ள கட்டுரை நெஞ்சை உருக்குகின்றது. ஈழத்தில் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் அந்த மாபெரும் எழுத்தாளரை உருக்குலைய வைத்த சோகக்கதை, அந்தநிலையிலும் அவரை ஏமாற்றிய இன்னுமோர் எழுத்தாளரின் துரோகச் செயல், இறுதிக்காலத்தில் முதியோர் இல்லமொன்றில் அவர் வாழவேண்டி ஏற்பட்ட அவல நிலை என்று பல்வேறு துன்பங்களினிடையே அந்த இலக்கியவாதியின் வாழ்வு நகர்ந்திருப்பதை அந்தக்கட்டுரையின் மூலம் அறிய முடிகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் மருத்துவத்துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்த மருத்துவர் செ.சிவஞானசுந்தரம் அவர்கள், நந்தி என்ற பெயரில் எழத்துலகில் தன்னிகரற்று விளங்கியவர். அவரின் இலக்கிய வரலாற்றை எழுதியிருக்கிறார், ஈழத்துநால்களைப் பதிவுசெய்யும் திட்டத்தினைப் பாரிய அளவில் நிறைவேற்றிக்கொண்டிருக்கும் என். செல்வராஜா அவர்கள்.

பதினெட்டுக்கும் மேற்பட்ட புனைபெயர்களிலும். தனது சொந்தப் பெயரிலும் ஏராளமாக எழுதிக் குவித்து, ஈழத்து இலக்கிய வரலாற்றுக்கு வளம் சேர்த்த மூதறிஞர் சொக்கன் அவர்களைப்பற்றி, கடந்த வருடம் இலண்டனில் இயற்கை எய்திய அமரர் சிவலிங்கம் சிவபாலன் எழுதியுள்ளார். சொக்கன் அவர்களைப்பற்றிய பல்வேறு அறிஞர்பெருமக்களின் விதப்புரைகளையும், கட்டுரைகளையும் பட்டியல்போட்டுத் தந்துள்ளார் கட்டுரையாளர். சொக்கன் அவர்களைப்பற்றிய அந்தப் பட்டியல் நம்மைச் சொக்கவைக்கிறது.

ஈழத்தமிழ் இலக்கியத்தை, தமிழக இலக்கியவாதிகளையும், இலக்கிய ஆர்வலர்களையும் வியப்போடு நோக்கவைக்கும் அளவுக்கு உயர்ந்த இலக்கியவாதிகளாகத் திகழ்ந்த பலரைப்பற்றிய கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. அவற்றையெல்லாம், இன்றைய புகழ்பூத்த எழுத்தாளர்கள் எழுதியுள்ளார்கள். இந்த அறிமுகக் கட்டுரையில் மற்றைய பந்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களோடு மேலும், மட்டக்களப்பைச் சேர்ந்த இலக்கியமணி அன்புமணி அவர்கள், கனடாவில் வாழும் மாபெருங்கவிஞர் கந்தவனம் அவர்கள், இலக்கியவாதி வ.ந.கிரிதரன் அவர்கள், இலக்கியவாதி என்.கே.மகாலிங்கம் அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் கால.சுப்பிரமணியம் அவர்கள், பிரான்சு தேசத்தில் வாழும் பிரபல எழத்தாளர் வண்ணை தெய்வம் அவர்கள், மா.கி. கிறிஸ்ரியன் அவர்கள், டென்மார்க்கில் வசிக்கும் பிரபல கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்கள், யேர்மனியைச் சேர்ந்த எழுத்தாளர் திருமதி.ஜெயா நடேசன் அவர்கள், கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் செயலாளர் அறிஞர் இ.க. கந்தசுவாமி அவர்கள், இலங்கையிலிருந்து கவிஞர் கருணகரன் அவர்கள், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் அதிபர் இ.நடராசா அவர்கள், நாடகாசிரியர் நவாலியூர் நடேசன் அவர்கள், கோப்பாய் சிவம் அவர்கள், பரம்பரைத் தமிழ் அறிஞர் ம.பா.மகாலிங்கசிவம் அவர்கள், கல்விமான் அனு.வை.நாகராஜன் அவர்கள், தம்பு சிவசுப்பிரமணியம் அவர்கள், காசிநாதர் சிவபாலன் அவர்கள், திருமதி. ஜெயமணி கனகரெத்தினம் அவர்கள், மற்றும் பண்டிதர் வடிவேலு அவர்களின் மகள், திருமதி. இராதாதேவி சிவசுப்பிரமணியம் அவர்கள், இலண்டனில் வாழும் எழுத்தாளர்கள் மு.புஸ்பராஜன் அவர்கள், திருமதி. நவஜோதி ஜோகரட்ணம் அவர்கள், மற்றும் இந்தியாவில் வாழும் யாழ்வாணனின் மகன் கண்ணதாசன் அவர்கள் ஆகியோர் எழுதியுள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஈழத்தமிழ் வரலாற்றின் பக்கங்களில் நிலைத்த இடம்பெறத்தக்க விபரங்களைக் கொண்டு விளங்குகின்றன. இந்த நூலில் உள்ள கட்டுரைகளில் வெறும் வரலாற்று நிகழ்வுகளை மட்டுமன்றிக் காலத்தின் போக்குக்கேற்ற கருத்துக்களையும் கட்டுரையாளர்கள் ஆங்காங்கே விதைத்துள்ளார்கள். உதாரணமாகச் சிலவற்றைக் குறிப்பிடலாம்.

“நாவற்குழி மண் தமிழீழத்திற்கு அளித்த மாபெரும் சொத்து பண்டிதர் சு.வே.” என்ற தலைப்பிலே, இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர், 2007 ஆம் ஆண்டு உயிரிழந்த பண்டிதர் சு.வேலுப்பிள்ளை அவர்களைப் பற்றி இந்த நூலின் தொகுப்பாசிரியரான முல்லை அவர்கள் எழுதியுள்ள கட்டுரையில்,“தமிழர்களில் சு.வே.போன்ற பல எழுத்தாளர்களையும், புத்திஜீவிகளையும், அறிஞர்களையும் போராட்டத்தினாலும், திட்டமிட்ட மருந்துத் தட்டுப்பாடு, உணவுப் பற்றாக்குறை, வறுமை, சுகாதாரச் சீர்கேடுகள் என்பவற்றால் காலத்திற்கு முன்பே இழந்துகொண்டிருக்கின்றோம். இருக்கும் காலத்திலும் அவர்களின் வளர்ச்சிகள் ஏதோ ஒரு விதத்தில் மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. ஏனையோர்களையும் சிந்திக்க இடமளிப்பதில்லை. தமிழர்களுக்கு இந்நிலையிலிருந்து எப்போது விடிவு கிடைக்குமோ?” என்று தனது ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றார். கிருஸ்ணா வைகுந்தவாசன் பற்றிய கட்டுரையில், கட்டுரையாளரான அவரது மனைவி மகேஸ்வரி வைகுந்தவாசனின் கருத்து இப்படியிருக்கின்றது:

“உலகநாடுகளின் தலைவர்களின் செவிகளில் இது (அவரது பேச்சு) முறையாக அன்று ஏறியிருந்தால், 30 ஆண்டுகளின் பின்னர், இன்று இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாகவும். மனித உரிமை மீறல் தொடர்பாகவும், தமது கருத்தை இன்று நேர்மையாக முன்வைக்க முனையும் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரிகளை, பயங்கரவாதிகள் எனவும், தமிழர்களிடம் கையூட்டுப் பெறுபவர்கள் எனவும் கேவலமாகவும். துணிச்சலாகவும் குற்றச் சாட்டுக்களை இலங்கை அரசத் தலைவர்கள் விடுக்கும் நிலைமை ஏற்பட்டிராது” “என் இனமே என் சனமே..என்னை உனக்குத் தெரிகிறதா” என்பன போன்ற எண்ணற்ற பாடல்களை எழுதிய கவிஞர் நாவண்ணன் அவர்களைப்பற்றிய கட்டுரையை எழுதியுள்ள மட்டுவில் ஞானக்குமாரன் ஓரிடத்தில், “ குண்டுகளை நிரப்பிக்கொண்டு களத்திலே நிற்கும் போராளிகளுக்கு அருகிலே நின்று தனது பேனாவின் தண்டுக்கு மை நிரப்பிக்கொள்ளும் ஒரு படைப்பாளி” என்று அருமையாகக் குறிப்பிடுகின்றார்.

இந்தக்கட்டுரைகளை எழுதியுள்ள முப்பத்தியிரண்டு பேரைப்பற்றிய குறிப்புக்களும் நூலின் இறுதியில் அவர்களது நிழற் படங்களுடன் தரப்பட்டுள்ளன. அந்தக் குறிப்புக்களை வாசித்தபோதுதான் இரத்தினச்சுருக்கம் என்றால் என்ன என்பதை உணரமுடிந்தது. அவ்வளவு சுருக்கமாக, அற்புதமாக ஒவ்வொருவரைப் பற்றியும் குறிப்புக்களைத் தந்திருக்கிறார் தொகுப்பாசிரியர் முல்லை அமுதன் அவர்கள். எவ்வித காய்தல். உவத்தலும் இன்றி கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. எந்தவித அரசியல். சமூக. சமய வேறுபாடுகளும் இன்றி அறிஞர்கள், சாதனையாளர்கள். எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவ்வகையான நூல் ஒன்று வெளிவந்த பின்னர் அவரைப்பற்றி எழுதவில்லை. இவரைப்பற்றிய கட்டுரை நூலில் இடம் பெறவில்லை என்றெல்லாம் எழக்கூடிய எதிர்ப் புகைச்சல்களுக்கு இடம் ஏற்படாதவகையில் தொகுப்பாசிரியர் முல்லை அமுதன் அவர்கள் தனது, “என்னுரை” என்னும் சின்னதோர் ஒருபக்கக் குறிப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

“எதிர்பார்த்த கட்டுரைகள் பாகுபாடின்றிக் கிடைக்க வாசல் திறந்திருந்தோம்........எனினும் பாகம் இரண்டில் அவர்களின் கட்டுரைகள் வரும் என்கிற நம்பிக்கையுடன் பாகம் ஒன்று வெளிவருகிறது.” தொகுப்பாசிரியரின் அந்தக் குறிப்பு இந்த முயற்சியிலே அவர் எவ்வளவு கரிசினையோடு ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்துகின்றது.

எனவே, இன்னும் தொகுதிகள் வெளிவரும். விடுபட்டுப்போன சாதனையாளர்கள் பற்றிய விபரங்கள் அவற்றில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கலாம். அதற்கு எழத்தாளர்கள் அவருக்குக் கைகொடுத்து உதவவேண்டும். தானாக ஒரு நூலை எழுதுவது இலகுவானது. அது ஒருவரது அறிவின்பாற்பட்ட விடயம். அதற்கான அறவும், ஆற்றலும் உள்ளவர்களால் அது முடியும். தரமாக இருந்தால் வாசகர்களால் ஏற்றுக்கொள்ளப்படும், வரலாற்றில் நிலைக்கும். ஆனால், பலரது ஆக்கங்களைத் தொகுத்து வெளியிடுவதில் பல்வேறு சிக்கல்களைச் சமாளிக்க வேண்டி எற்படும். இலக்கியத் தொடர்பு இல்லாதவர்களின் எதிர்ப்புக்களைக்கூட எதிர்நோக்க வேண்டிவரும். அவை எல்லாவற்றையும் தாண்டி இப்படியொரு அற்புதத் தொகுப்பு நூலை வெளியிட்டுள்ள முல்லை அமுதன் அவர்களின் தமிழ்ப்பணி உலகத் தமிழர் வரலாற்றில் உன்னத இடத்தைப் பெறும். உலகத்தில் தமிழ் உள்ளளவும் நிலைக்கும். வாழ்க தமிழ்.


பிற்குறிப்பு:-இந்த நூலை விரித்ததுமே எதிர்பாராத இன்ப உணர்ச்சி எனக்கு எற்பட்டது. காரணம் என்னவெனில் முதலாவது கட்டுரையை எழுதியிருப்பவர் மயிலங்கூடலூர் பி.நடராசன் அவர்கள். எனது நனவிலம், கனவிலும் காலமெல்லாம் நின்று நர்த்தனம் ஆடிக்கொண்டிருக்கும் அவர் பட்டிருப்பு மத்திய மாவித்தியாலயத்திலே ஒன்பதாம் வகுப்பிலிருந்து எனக்கு உயிரினவியல் அசிரியராக வாய்த்தவர். விஞ்ஞான ஆசிரியரான அவர் என்னுள்ளிருந்த தமிழை இனம்கண்டு களம் அமைத்துக்கொடுத்தவர். வற்புறுத்தி ஊக்கம் கொடுத்தவர். எனது பதினைந்தாவது வயதிலேயே சுதந்திரன் பத்திரிகையில் நிருபராகச் சேர்த்துவிட்டவர். “உயிர்ப்பு” என்ற பாடசாலையின் சஞ்சிகையில் ஆசிரியராகப் பதவியளித்தவர். எழுத்துத் துறையில் என் கழுத்தைப் பிடித்துத் தள்ளிவிட்டவர். யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டில் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் அவரைக் கண்டு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகின்றது. அவரது கட்டுரையைக் கண்டதும் அவரையே கண்டதுபோல உள்ளம் களிநடம் புரிந்தது.
புலம்பெயர்ந்த பறவை ஒன்றின் நீள்மௌனம!



- முல்லைஅமுதன் -

இடியாய் வந்து விழுந்தது. காறு;றும் வீச மறந்திருக்கலாம். மழையும், குளிரும் நம்மை அயர வைத்திருக்கலாம். எனி நம்மை ஆசுவாசப்படுத்திக் கொன்டிருந்த ஒரு பொழுதில் இன்னொரு அதிர்ச்;சியும் எம்மை அதிர வைத்தது. அது தான் மனநல வைத்தியர் க. இந்திரகுமார் அவாகளின் மரண செய்தி. (21-12-2008) காலைக்கதிர் ஆசிரியரிடம் இருந்து கிடைத்தது.

யாழ்ப்பாணம் கதிரவேலு-சிவபாக்கியம் தம்பதிகளுக்கு மகனாக 1945ல் பிறந்த இவர் மனநல வைத்தியராகவும், அறிவியல் நூல்களுடன் பிற நல்லறிஞர்களின் நூல்களை வெளியிடும் பதிப்பாளராகவும் மிளிர்ந்தார். இவர் பிரதம ஆசிரியராக இருந்து மேகம் மாத இதழை தொடந்து ஓராண்டுக்கு மேல்லாக தொடர்ந்து நடாத்தி வந்தார்.

இலங்கையில் இருந்த காலத்தில் அறிவியல், மருத்துவ கட்டுரைகளை அனைத்துப்பத்திரிகைகளிலும் எழுதி வந்திருந்தார். இவர் எழுதிய மண்ணில் இருந்து விண்ணுக்கு எனும் நூலுக்கு 1973 ல் இலங்கையரசின் சாகித்தியமண்டலப்பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. செங்கையாழியான் எழுதிய வாடைக்காற்று நாவல் திரைப்படமானபோது கே. எம் வாசகரின் இயக்கத்தில் அமரர் இந்திரகுமார் கதாநாயகனாக நடித்ததுடன் இலங்கை வானொலியில் பல நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியுமுள்ளாh. இவர் எழுதிய ‘விண்வெளியில் வீரகாவியங்கள்’ எனும் நூலுக்கு தமிழக அரசின் பரிசு (1996) கிடைத்தது.

இவர் நடனக்கலைஞர் விஐயாம்பிகை அவர்களை வாழ்கைத்துணைவியாக்கிக் கொண்டார். இவர்களுக்கு விநோதினி என்ற மகளும் உண்டு. ஈழத்துத் தமிழர் வரலற்றை நூலாக எழுதி வெளியிட இருந்தவரின் கனவு நனவாகவில்லை என்பது கவலைக்குரியது. சிலகாலம் விடுதலை, காலைக்கதிர் ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியர் குழுவிலும் இருந்துள்ளார். இலங்கையில் விண்வெளிக்கழத்தின் ஸ்தாகராக இருந்த இவர் உலகப் புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சி எழுத்தாளர் அமரர் ஆதர் சி. கிளார்க்கின் நண்பருமாவார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினராகவும், அக்கட்சியின் அமரர் பீற்றர்கெனமன் அவர்களுக்கு தமிழ் மொழிபெயர்ப்பாளராகவும் கடமையாற்றிமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

பல்கலைவிற்பன்னரான இவரின் மரணம் இலக்கிய உலகத்திற்கு பேரிழப்பாகும்.

இவர் எழுதிய நூல்கள்

1. FIRE WALKING THE BURNING FACTS (ENGLISH)
2. மண்ணில் இருந்து விண்ணுக்கு
3. புதுயுகம் கண்டேன்
4. விண்வெளியில் வீரகாவியங்கள்
5. டயானா – வஞ்சித்தாரா? வஞ்சிக்கப்பட்டாரா?
6. வயாக்ராவும் ஏனைய சிகிசிசை முறைகளும்.
7. புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஓர் அறைகூவல்

இவர் பதிப்பித்த நூல்கள்

1. இலங்கேஸ்வரன் (நாடகம்) – ஆர். எஸ். மனோகர்
2. யாழ்ப்பாணத்தின் வீரத்தமிழ் மன்னன் இரண்டாம் சங்கிலி (நாடகம்) – கௌதம நீலாம்பரன்
3. திருக்கோணேஸ்வரம் தான் தெட்சணகயிலாயம் (தொல்லியல்) – பண்டிதர் வடிவேலு
4. The Marathan Crusade for ‘FIFTY. FIFTY’ (SPEECH) G.G.PONNAMBALAM

எழுத்தாளர் சிவலிங்கம் சிவபாலன்!


-முல்லைஅமுதன் -

ஈழத்து இலக்கிய உலகம் இன்னும் ஒரு படைப்பாளியை 23.05.2008 ல் இழந்துள்ளது. இலக்கியச் செழுமை மிக்க யாழ்ப்பாணத்திலுள்ள
நாயன்மார்கட்டு கிராமத்தில 1954ல்; பிறந்த இவர் வீரம் விழைந்த உரும்பிராய் மண்ணில் ஊன்றிக் கால் பதித்தவர். பின்னாளில் 1985 தொடக்கம் பிரான்ஸிற்கு புலம்பெயர்ந்தார். எவருடனும் பழகுவதற்கு இனிமையானவர். எவரையூம் எளிதில் நண்பராக்கிக் கொண்டுவிடுவார். தமிழ் மக்களுக்கான விடியல் விரைவில் வரவேண்டும் என விரும்பும் பலரில் இவரும் ஒருவர். வி. ரி.
இளங்கோவன்.. தியாகி சிவகுமாரன் பற்றி நிறையவே அறிந்து வைத்திருந்தார்.

ஊரில் இருந்த காலத்திலேயே தேன்மலர் எனும் சஞ்சிகையை நடத்தியுள்ளார். கவிதை, சிறுகதை, கட்டுரை என தன் எழுத்தை
விரிவுபடுத்தினார். ஈழமுரசு, எரிமலை, உயிர்நிழல், போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் எழுதி வந்துள்ளார். 1998 ல் ‘சுரங்கள் மாறி……’
எனும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தார். பலரையூம் நேசித்தார். எழுத்தாளர் கலாநிதி சொக்கன் அவர்கள் மீது மிகுந்த
மாpயாதை வைத்திருந்தார். அவரின் மாணவன் என்று சொல்வதில் பெருமைப்பட்டுக் கொண்டார். அதனால் தான் காற்றுவெளி நுர்லகம்
வெளியிடும் இலக்கியப்பூக்கள் எனும் தொகுதிக்கு கலாநிதி சொக்கன் அவர்களைப்பற்றிய கட்டுரையை எழுதித் தந்துள்ளார்.

நிறைய வாசிக்கும் பழக்கம் உள்ள இவர் இங்கிலாந்திற்கு வந்தபின்பு ஒரு இலக்கிய வெறுமையை உணர்ந்தவராகக் காணப்பட்டார்.
அதனால் தானோ என்னவோ காற்றுவெளி நுர்லகத்தை தன் வாசிப்புக்காகப் பயன்படுத்த தொடர்பு கொண்டார். சிலநாட்களிலேயே
இதயஅறுவைச்சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார். பின்னரும் இலக்கிய ஆர்வலர்களுடன் அதிகமாகவே தொடர்புகளை அதிகமாகவே
பேணிவந்தார். இலக்கியம் பற்றி பேசுவதற்கான தன் ஆதங்கங்களை, ஆர்வத்தை எழுத்தாளர்களுடன் பேசும் போது வெளிப்படுத்தினார்.
அவாpன் வார்த்தைகளில் மெல்லியதான சோகம் இழையோடியதையூம் எம்மால் உணர முடிந்தது. சிறுவயதின் நாடக முயற்சிகளை மீட்டுப்பார்த்து இப்பொழுது அது முடியாத ஏக்கம் எமக்குப் போலவே அவருக்கும் இருந்துள்ளது. தன் படைப்புகள் முழுவதையூம் தொகுத்து ஒரு நுர்லாகவூம் தனித்து ஒரு நாவலும் எழுதத் திட்டமிட்டிருந்தார் அவரின் ஆசைகள் நிறைவேற நாமும்
பிரார்த்திப்போமாக…
கணபதி கணேசன்!



- முல்லை அமுதன் -

ஒரு ஆளுமைமிக்க கலைஞனாக கவிஞனாக, வீரிய வார்த்தைகளை வீசியெறிந்து எழுத்தாக்கும் வல்லமையும் கொண்டவர்தான் திருநெல்வேலி யாழ்ப்பாணத்தில் 03.03.1955 ல் பிறந்த கணபதி கணேசன் ஆவார். எனது ‘நித்யகல்யாணி’ நூல் பதித்தலுக்காக சிரித்திரனின் கவின் அச்சகத்தில் அச்சாகிக் கொண்டிருந்தபோது தான் ராதையன் மூலம் கணபதி கணேசனின் தொடர்புகிட்டியது. அன்புநெஞ்சன், சுதாராஜ், காவலூர் ஜெகநாதன், வடகோவை வரதராஜன், சௌமினி போன்றோர் எழுதத்தொடங்கிய காலங்கள்… நெருங்கிவந்தோம். 1970 ல் தன் எழுத்துப் பணியை ஆரம்பித்த கணபதி கணேசன் ‘மதுரா’ என்ற புனைபெயாரிலும் எழுதியுள்ளார். ஈழநாடு, தினகரன், சிரித்திரன்,செவ்வந்தி, வீரகேசரி ஆகியவற்றிலும் எழுதியுள்ளார். தமிழகத்தில் மக்கள் பாதை மலர்கிறது, பொங்கும் தமிழமுது, ஆகியவற்றிலும் எழுதியுள்ள இவர் மலேசிய நண்பன், மக்களோசை, இதயம் ஆகியவற்றிலும் தொடர்புகளை பேணிவந்துள்ளார் என்றும் அறியமுடிகிறது.

மேகம் எனும் சிறுசஞ்சிகையினை ஓட்டுமடத்திலுள்ள தனது கௌரி அச்சகத்தில் அச்சிட்டு வந்ததைக் காண்பித்தான். அதில்
சிறுசஞ்சிகைக்கே உரிய இறுக்கமும் ஆழமும் தெரிந்தது. அப்போது தமிழகத்தில் வெளிவந்த புதியகலாச்சாரம் சஞ்சிகையை
ஞாபகப்படுத்தியது. கொக்குவில் இராமகிருஷ்ணமிஷனில் ஆசிரியையாகக் கடமையாற்றிக் கொண்டிருந்த ‘கவிதாயினி’ கௌரி
திருநாவுக்கரசு அவர்களைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.

பின்பொருநாளின் மாலைப்பொழுதில் மேகம் அனுசரனையுடன் எனது ‘ஷோபா கிரியேஷன்ஸ்’ சார்பில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில்
‘மை பெயா லேடி’ நிகழ்ச்சியினை நடாத்தினோம். அவரின் அச்சகத்தில் நிறையப்பேசினோம்….விவாதித்தோம் …. அவரின் மூலமாகத்தான்
திரு பத்மநாபஐயர் அவர்களை அவர் தங்கியிருந்த சங்கிலியன் வீதியில் சந்தித்ததும் அவரிடம் இருந்து புதிய ஜனநாயகம்,
புதியகலாச்சாரம் போன்ற தீவிர இலக்கிய சஞ்சிகைகளைப் பார்க்கக் கிடைத்தது.

அப்போதே கணபதி கணேசனின் தீவிர இலக்கிய சிந்தனைபற்றி அறியமுடிந்தது. நாமிருவரும் சேர்ந்து ‘புதிய அடிமைகள்’ எனும் கவிதை நூலை மேகம் வெளியீடாக 1983; ல் வெளியிட்டோம். மகேந்திரன் எனும் அப்போதைய மாணவர் ஒருவரால் அட்டைப்படம்
கீறப்பட்டிருந்தது. அப்போதுதான் மட்டக்களப்பு சிறையுடைப்பு நடந்தது. அதனால் நாம் திட்டமிட்டபடி நூலை வெளியிடமுடியாது
போயிற்று. மானுட விடுதலை வேண்டும் என நினைத்தே அட்டைப்படத்தை ஓவியர் வரைந்திருந்தார். மாறாக சிறையுடைப்பு எமக்கு இராணுவ அச்சுறுத்தல் தரும் என்பதால் 800 பிரதிகளை கௌரி அச்சகத்தின் முன்பு எரித்தோம்.

1984ல் நானும் நாட்டை விட்டு வெளியேறும்படியாயிற்று. அவனும் நிறைய எழுத்தில் சாதிக்க உழைத்தான். பண்டைய
தமிழ்ப்புதையல்களில் இருந்து தேர்ந்தெடுத்த படைப்புகளை தொகுத்து ‘தமிழ் அமுதம்’ எனும் நூலையும் வெளியிட திட்டமிட்டிருந்தோம்.
மலையகம், தமிழகம் என அவனும் புலம்பெயர்ந்தான். தமிழீழ மாணவர்பேரவை சென்னை-5 வெளியிட்ட ‘பொங்கும் தமிழ் அமுது’ சஞ்சிகையில் தன்னையும் இணைத்து நிறைய எழுதினான். 1985 ல் ‘சூரியனைத் தொலைத்தவர்கள்’ கவிதை நூலை வெளியிட்டார்.
பின்னர் மலேசியாவிற்குப் புலம் பெயர்ந்தார். இவருக்கு யதுந்தன் எனும் மகனும், மதுரா எனும் மகளும் உள்ளனர். மலேசியாவிலும்
நண்பர்களுடன் இணைந்து செம்பருத்தி மாத இதழை வெளிகொணர்ந்தார். அவரின் நல்ல சிந்தனைகளுக்கு களம் செம்பருத்தி இதழின் மூலம் கிடைத்தது. தமிழர் நலன்களில் அதிக அக்கறை கொண்டிருந்தார். தமிழர்களை ஒருங்கிணைப்பதில் முன்னின்று உழைத்தார். 2002 ல் உலகத்தமிழர் நிவாரண நிதிக்காக ‘குருதி பூர்த்த வெள்ளரசு’ என்ற கவிதை நூலை வெளியிட்டார். இடைக் காலத்தில் ‘மூன்றாம் பிறையும் பௌர்ணமி நிலவும்’ என்ற கவிதை நூலை வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நல்ல சிந்தனையாளர்களை காலன் விட்டுவிடுவதில்லை.

‘எதுவும் வேண்டாம்
‘ஒன்று’
அதுமட்டும்தான்
வேண்டும்! அது….
விடுதலை!

கனவுகள் வசப்படாத ஒரு பொழுதில் நோய் வந்தது. தமிழகத்தில் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டு 13.11.2002ல் மரணம் அவனைத்
தழுவியது. நிறையப் பேசுபவன். நிறையவே சிந்திப்பவன். அவன் இறக்கும் போது மகன் யதுந்தனுக்கு 16 வயது. மகள் மதுராவிற்கு 18
வயது. இவரின் விருப்பத்திற்கேற்ப இவரது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அறிவுமதி, வல்லிக்கண்ணன், சுபவீரபாண்டியன், தாசீசியஸ், ஆகியோருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு கிடைத்தவரின் கனவு மெய்ப்பட வேண்டும்.

நாவற்குழி மண் தமிழீழத்திற்கு அளித்த மாபெரும் சொத்து பண்டிதர் சு.வே!.



- முல்லை அமுதன் -

தமிழீழத்திற்கான போராட்ட இக்கால கட்டத்திலே தமிழ் அறிஞர்களையும், அவர்களின் ஆக்கங்களையும் பேணிப் பாதுகாக்க வேண்டியது தமிழர்களான எங்களின் முக்கிய கடமையாகும். இதுவும் வித்தியாசமானதொரு போராட்டமே. இப்போராட்டத்தில் தற்போது நாம் இழந்து நிற்பது சு.வே. என்று செல்லமாக அழைக்கப்படும் நாவற்குழி மண் தந்த மாமனிதர் பண்டிதர் சு. வேலுப்பிள்ளை அவர்கள்.

2004ல் எனக்குத் தாயகத்திற்கு குடும்பமாகச் செல்லவேண்டிய அவசியமேற்பட்டது. அப்போது என்னால் மிகவும் மதிக்கப்பட்டவரும் எனக்கு மிகவும் மனதிற்கினிய எழுத்தாளரும் குடும்ப நண்பருமான சு.வேயின் இல்லத்திற்குச் சென்று அவருடன் அவர் சகோதரங்களையும் சந்திக்கும் அரும்வாய்ப்புக்கிடைத்தது. அப்போது சு.வே. அவர்களின் தளர்நிலையும், போராட்டசூழல் காரணமாக சொத்தழிவுகளுடன் அவரால் சேகரிக்கப்பட்ட விலைமதிப்பற்ற புத்தகங்களும் மழைக்கும் கறையானுக்கும் அழிந்து கிடந்தன. அவற்றில் இருந்து ஓரளவிற்கு பழுதடையாத நூல்களை தட்டி எடுத்து என்னிடம் வற்புறுத்தித்தந்தார். நோய் காரணமாக வடிவாகக் கதைக்க முடியவில்லை. அப்படியிருந்தும் தன்னால் முடிந்தவரை கதைத்தார். துக்கமிகுதியால் அழுதழுது கதைத்தார். அவரது கவலை முழுவதும் தனக்கு தமிழுக்கு இன்னும் தொண்டாற்ற முடியவில்லை என்பதே. அவரின்; நோய்த்தாக்கத்தால் அவரின் உச்சரிப்புகள் எமக்கு விளங்காத போது அவரது சகோதரர் மகேந்திரம் ஆசிரியர் அவர்கள் எமக்கு விளக்கம் கொடுத்தார். வாழ்கையில் பிரமச்சாரியத்தைக் கடைபிடித்த சு.வே அவர்களின் தேவைகளை அன்பே உருவான அவரது சகோதரி கவனித்துக் கொண்டிருந்தார். அன்று கனத்த மனத்துடன் திரும்பிய எமக்கு இன்று அவரின் இழப்பு (22.06.2007) மேலும் கனக்கவைக்கிறது.

தமிழர்களில் சு.வே. போன்ற பல எழுத்தாளர்களையும், புத்திஜீவிகளையும்,அறிஞர்களையும் போராட்டத்தினாலும், திட்டமிட்ட மருந்துத்தட்டுப்பாடு, உணவுப்பற்றாக்குறை, வறுமை, சுகாதாரச்சீர்கேடுகள் என்பவற்றால் காலத்திற்கு முன்பே இழந்து கொண்டிருக்கிறோம். இருக்கும் காலத்திலும் அவர்களின் வளர்ச்சிகள் ஏதோ ஒரு விதத்தில் மழுங்கடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கன்றது. ஏனையோர்களையும் சிந்திக்க இடமளிப்பதில்லை. தமிழர்களுக்கு இந்நிலையிலிருந்து எப்போது விடிவுகிடைக்குமோ?

04.05.1921ல் பிறந்த சு.வே. அவர்களின் இலக்கியபணி அளவிடமுடியாதது.; ஈழத்து உருவகக்கதையின் தந்தை என்று அனைவராலும் புகழப்பட்டார். ஈழத்தின் முன்னோடிச் சிறுகதை எழுத்தாளர்,உருவகக்கதை, கட்டுரை, நாடகம் ஆகிய இலக்கியத்துறைகளில் சிறந்து விளங்கினார். அத்தோடு தமிழ்ப்பண்டிதராகவும் இருந்த சு.வே. அவர்கள் பல பாடசாலைகளில் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். அவரிடம் கல்வி கற்றோர் பலர் தமிழில் மிகுந்த பற்றுள்ளவர்களாகவும் அறிவுப்பெட்டகங்களாகவும் திகழ்கின்றனர். நாவற்குழியில் தமிழில் திறமையான எந்த ஒரு மாணவனைக் கேட்டாலும் ஏதோ ஒரு வகையில் அவனது குருவாக சு.வே. திகழ்வார்.

திருநெல்வேலி வைவாசிரிய பயிற்சிக்கல்லூரி மாணவனான சு.வே. அவர்கள் 1942ல் பயிற்றப்பட்ட தமிழாசிரியரானார். இலங்கையின் பலபாகங்களிலும் அதாவது ஹற்றன், டிக்கோயா, சுன்னாகம், மானிப்பாய் போன்ற பிரதேசப்பாடசாலைகளில் 1946 முதல் 1981வரை தன் ஆசிரியப்பணியை மேற்கொண்டார். பின்பு தன் சொந்த ஊரான நாவற்குழி மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தார்.

நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த சு.வே. அவர்களின் திறமை உலகறியச் செய்தமையும் காலம் கடந்தேயாகும். சு.வே. யின் சிறுகதைகள் கொண்ட “பாற்காவடி” (2002) என்ற நூலில் அவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார். ‘இன்றைய இலக்கிய உலகினால் தொண்ணூறு விழுக்காடு மறக்கப்பட்டு, எங்கோ ஒரு மூலையிலே இருளில் கிடந்த என்னை மறுமலர்ச்சிச் சிறுகதைகள், ஈழகேசரிச் சிறுகதைகள் என்பவற்றினூடாக வெளிவரச்செய்த பெருமை தம்பி செங்கை ஆழியானிற்கே என்றும் மேலும் அவர் தன்னைப்பற்றிக் கூறும் போது “ சின்னஞ சிறிய எளிய மான் மனக்கோயிற் கொட்டிலில் இருந்து பல்லாண்டுகளுக்கு முன் தலைமேற்கொண்ட இந்தப் பாற்காவடியை கன்னித் தமிழ்த்தேவியின் திருக்கோவிற் சந்நிதியிலே, இலக்கிய ஆர்வலர்களான பக்தர்களின் திருமுன்னிலையில் இறக்கி வைத்துள்ளேன். என் பணி முடிந்துவிட்டது. சுபம்! இந்தப் பாற்காவடியே, எனக்கு இவ்வுலக வாழ்வின் எச்சங்கள், மிச்சங்கள்.வாரிசுகள்…. இவையே என் பெயர் விளங்க வந்த குழந்தைகள்.” இவ்வாறு தன் ஆதங்கத்தைத் தெரிவிக்கிறார்.

இவரது சிறுகதைகளை எடுத்துக்கொண்டால் ஈழகேசரியில் வெளியானவை,
1. கிடைக்காதபலன் - ஈழகேசரி 1943 (முதற் சிறுகதை)
2. மனித மிருகம்
3. புத்தனின் சுவடு
4. காலத்தின் தண்டனை
5. பாசம்
6. பிரேமை
7. மனநிழல்
8;. அன்புக்கறை
9. சிற்றன்னை
10.தோழன்

இவரது உருவகக்கதைகள் மறுமலர்ச்சி இதழ்களிலும் பல்வேறு ஊடகங்களிலும் வெளிவந்தவை,
1. மண்வாசனை
2. வெறி
3. பாரிசவாதம்
4. பூ
5. பாற்காவடி
6. அக்கினி
7. ஸ்ட்ரைக்
8. புகை
9. தகிப்பு
10. பெரியம்மா

கதைகள் தொகுப்பாக புத்த உருவில் வெளிவந்தமை

1. மண்வாசைன – சிறுகதைத்தொகுப்பு
2. பாற்காவடி - சிறுகதைத்தொகுப்பு
3. மணற்கோவில் - உருவகக் கதைத்தொகுப்பு
சு.வே. யின் கதைகள் வந்த ஏனைய நூல்கள்

1. ஈழகேசரிச் சிறுகதைகள்
2. மறுமலர்ச்சிச் சிறுகதைகள்

கல்வித்தினைக்களத்தில் பாடநூல் தொகுப்பாசிரியராகவும் சில காலம் பணிபுரிந்தார்.
1. சூழல்
2. சுற்றாடல் கல்வி
3. தமிழ்
4. தமிழ் மொழி

இவரது சிறுவர் இலக்கிய நூல்கள்-
1. சந்திரமதி
2. குகன்

இவரது பரிசு பெற்ற நாடகங்கள் மற்றும் வானொலி தொடர் நாடகங்கள்
1. வஞ்சி – ஓரங்க நாடகம் (1965) முதற்பரிசு பெற்றது.
2. எழிலரசி - முழுநீள நாடகம்(1966) முதற்பரிசு பெற்றது.
3. மண்வாசைன -இலங்கை வானொலியில்(1960)பரிசு பெற்றது.
4. ஒருமை நெறித்தெய்வம் -இலங்கை வானொலியின்பரி;சு(1968)
5. ஏட்டிலிருந்து - தொடர் நாடகம் 16 வாரம் (1964)
6. கிராமராச்சியம் -தொடர் நாடகம் 32 வாரம் (1964)
7. பொன்னாச்சிக்குளம் -தொடர் நாடகம் 97 வாரம் (1967-68)
8. நவயுகம் - தொடர் நாடகம் 12 வாரம் (1969)

இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகிய இலக்கிய உரைகள்
1. இலக்கியரசனை -32 வாரம் ஒலிபரப்பாகியது. (1965)
2. திருகுறட்சித்திரம் -36 வாரம் ஒலிபரப்பாகியது. (1968)
3. நாட்டுக்கு நல்லது -24 வாரம் ஒலிபரப்பாகியது. (1969)
சு.வே. அவர்கள் வாழும் போதே கூறுவது ‘தனது கதைகளை வாசித்துவிட்டு நீண்டதொரு பெருமூச்சு ஒரு பக்தனிடமிருந்து வருமாயின் அஃதொன்றே நான் மனநிறைவடையப் போதும் என் நெஞ்சு குளிர்வதற்கு நன்றும் தீதும் எனக்கு ஒன்றே’ என்பார்.. இவரின் கதைகளைத் தேடிப்படியுங்கள். அவரது ஆத்மா மனநிறைவடையும். படிப்பவர் மனமும் குளிரும்..
இலக்கியப்பூக்கள்

ரஸஞானி

இங்கிலாந்தில் வருடாந்தம் ஈழத்து தமிழ் நூல்களின் கண்காட்சியை நடத்திவருபவரும் காற்றுவெளி என்னும் சஞ்சிகையை வெளியிடுபவருமான முல்லை அமுதன், தமிழ் உலகம் நன்றி கூறத்தக்க சிறந்த பணியொன்றை செய்துள்ளார். 370 பக்கங்களில் 44 மறைந்த ஈழத்தின் முன்னணி எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், அறிஞர்களைப்பற்றிய விரிவான
கட்டுரைகள் கொண்ட தொகுப்பு நூலை வெளியிட்டுள்ளார்.

சென்னை காந்தளகம் பதிப்பித்துள்ள இலக்கியப்பூக்கள் என்ற நூலையே முல்லை அமுதன் தொகுத்துள்ளார். மறைந்தவர்களைப்
பற்றிய ஆக்கங்களைத்தொகுக்கும்பொழுது ஏற்படும் சிரமங்கள் பல. குறிப்பாக அந்த அமரர்களின் ஒளிப்படங்களை தேடி
எடுப்பதும் பொருத்தமானவர்களுடன் தொடர்புகொண்டு ஆக்கங்களைப்பெறுவதும் சிரமசாத்தியம்தான். முல்லை அமுதனின் உழைப்பு பெருமதியானது. அது வீண்போகவில்லை.

ஈழத்து பூதந்தேவனார், ம.க.வேற்பிள்ளை, சிவபாதசுந்தரனார், திருஞானசம்பந்தப்பிள்ளை, மகாலிங்கசிவம், பண்டிதமணி சி.
கணபதிப்பிள்ளை, தனிநாயக அடிகள், புலவர் ஞானப்பிரகாசம், புலவர் தேவசகாயம்பிள்ளை, கனக செந்திநாதன், பஞ்சாட்சர சர்மா,
வ.இராசையா, பண்டிதர் வடிவேல், கிருஷ்ணா வைகுந்தவாசன், சிவ.விவேகானந்த முதலியார், சு.வேலுப்பிள்ளை,
அ.செ.முருகானந்தன், அ.ந.கந்தசாமி, வரதர், நந்தி, தில்லைச்சிவன், சொக்கன், புலவர் மிக்கேல்பிள்ளை, பேராசிரியர் கைலாசபதி,
யாழ்வாணன், ஏ.ஜே.கனகரட்ணா, அப்பச்சி மகாலிங்கம், மு.தளையசிங்கம், பிரமிள், செ.கதிர்காமநாதன், அங்கையன்
கைலாசநாதன், செ.யோகநாதன், செம்பியன் செல்வன், பேராசிரியர் அம்பலவாணர் சிவராசா, சிலோன் விஜயேந்திரன்,
நாவண்ணன், ராஜஸ்ரீகாந்தன், சு.வில்வரத்தினம், சி.புஸ்பராஜா, சிவலிங்கம் சிவபாலன், கணபதி கணேசன், முல்லையூரான், குமார்
மூர்த்தி, எஸ்போஸ் ஆகிய 44 அமரர்களின் பல முகங்களை நாம் இந்த நூலில் தரிசிக்கலாம். பலமும் பலவீனமும் கொண்ட
மனிதர்கள் படைப்பாளிகளாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் சாதனைகளும் சாதுரியங்களும் வாசகர்களுக்கு தம்மைத்தாமே
சுயவிமர்சனம் செய்துகொள்ளவும் தூண்டுகிறது.

தந்தை செல்வாவை காங்கேசன்துறையில் எதிர்த்துப்போட்டியிட்ட வைகுந்தவாசன் பின்னாளில் ஐ.நா. சபையில்
மின்னலெனத்தோன்றி முழங்கியதையும் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சந்தேகநபராக சிறைசென்று மீண்ட சிலோன்
விஜயேந்திரனின் நடிப்புலக பக்கங்களையும், அற்பாயுளில் மறைந்துபோன இலக்கியவாதிகளையும் காலை ஆகாரமாக
இடியப்பமும் வடையும் சுண்டலும் அடையும் ஒரேநேரத்தில் ரசித்து சுவைத்து உண்டு இனிப்பையே தனது தீராத
நேயாக்கிக்கொண்ட (நீரிழிவு) செம்பியன் செல்வனின் சுவாரஸ்யமான வாழ்வையும் இன்னும் சிலரின் வலிகளையும்
ஏமாற்றங்களையும் சொல்கிறது இந்த ஆவணம்.

அவர்களின் ஆற்றல் ஆளுமை வாசகர்களை நிச்சயம் வியக்கவைக்கும். விந்தையான இந்த மனிதர்களின் வாழ்வில்தான்
எத்தனை சோதனைகள்? சில பக்கங்களை படித்து முடித்ததும் அவர்களின் அந்த வாழ்விலிருந்து வெளியே வருவதற்கு சற்று
நேரமாகிறது.

இலக்கியப்பூக்களில் இடம்பெற்றிருக்கும் சிலரை பல எழுத்தாளர்கள் அறிந்திருக்கமாட்டார்கள். இந்த நூல் வாசகர்களுக்காக மாத்திரம் தொகுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. எழுத்தாளர்களும் அறிந்துகொள்ளவேண்டிய பல அரிய தகவல்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

தொகுப்பாசிரியர் முல்லையமுதன் தமது என்னுரையின் இறுதியில் இப்படிக்குறிப்பிடுகிறார்:- சக எழுத்தாளர்களை நேசிக்கின்ற பக்குவம் யாருக்கும் வந்ததாகத்தெரியவில்லை. வரலாறுகளைத் தேடுகின்ற தேடுதல் முயற்சியும் அரிதாகியே வருகின்றது. ஒரு சிலர் முனைப்புடன் செயல்பட்டு வந்தாலும் போதியதாக இல்லை. எனினும் தேடுவோம். தமிழால் இணைவோம்.

இலக்கியப்பூக்கள் பிரதிகளுக்கு:-

Mullai Amuthan
34. RED RIFFE ROAD.
PLAISTOW - LONDON - E 13 OJX

நன்றி: உதயம்
mullaiamuthan_03@hotmail.co.uk

****************************************
‘மண்ணில் துலாவும் மனது’ – வஸீம் அக்ரம்



அனுராதபுர மண்ணில் இருந்து இன்னொரு தமிழ்ப்பூ விரிந்திருக்கிறது. தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவனான வசீம் அக்ரம் இருபது வயதில் இப்படி முதிர்ச்சியா? என்னுள் வியப்பு! எனினும் இன்றைய யுகத்தில் ஞானசம்பந்தர்களே அதிகம். போர்ச்சூழல், இராணுவ அடக்குமுறை, வாழ்வுக்கான போராட்டம் …. இப்படித் தொடர்கிறது. நெருக்கடிகளுக்குள் வாழும் ஒவ்வொரு மனிதர்களும் ஞானசம்பந்தர்கள் தான். மொழி முரட்டுத்தனமாக வாழவே செய்யும்.

‘படிகள்’ இதழாசிரியர் என்கிற போது இரட்டிப்பு மகிழ்வு தருகிறது. இன்றைய புதிய கிராமத்து தமிழ் மணங்கள் வஸீம் அக்ரம் போன்ற கவிஞர்களால் தான் உணரப்படுகிறது. அன்புஜவகர்~1, அனு. வை. நாகராஜன், தம்பு சிவா, மு.கனகராஜன், பேனா. மனோகரன் எனப்பலர் இலக்கியம் வளர்த்த ஊர். மல்லிகை கூட ‘அனுராதபுரம் சிறப்பிதழை’ வெளியிட்டு பெருமை சேர்த்துக் கொண்டது.

ஒரு கிராமத்தின் அடையாளம் அந்தக்கவிஞனே.
பண்புகளை நேர்த்திப்படுத்துபவனும் அவனே.
ஒரு எழுத்தை லாவகப்படுத்தும் முறைமை கவிஞனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். வார்த்தைகள் வந்து விழும் போது சொற்களாகி எம்மைக் கூட நெறிப்படுத்த, நெகிழவைக்கக் கூடியது.

உண்மையில் ஒரு காலத்தின் பதிவு கவிஞன் தான். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்கம் தன் பணியைச் செவ்வனே செய்துள்ளது. எமது கிழக்கிலங்கைக் கவிஞன் பசீல் காரியப்பரின் ‘ஆத்ம அலைகள்’ நூலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

வசீம் அக்கிரமின் கனவுகள் அவர் கவிதைகளில் அதிகம் தெரிகிறது. அதிகமாய் வாசிக்கிறார் என்பதும் தமிழை அதிகமாகவே நேசிக்கிறார் என்பதும் மொழிகளின் சொல்லாடலில் தெரிகிறது.

நாம் ஏமாற்றப்படுகிறோம் என்று தெரிந்தும் திரும்பவும் ஏமாற்றப்படவே செய்கிறோம். ஒரு வகையில் கையாலாகாத்தனம் போலும். இப்படித்தான் வாழவேண்டும் என்று சமூகம் கற்றுத்தந்திருக்கிறபாடம். சகமனிதனுக்கு, துப்பாக்கிகளுக்கு, அரச இயந்திரங்களுக்கு அல்லது அரசின் ஏவல்களுக்கு அடங்கிப்போகிற ஒரு சமூகக் கூட்டம். மாற்றம் எங்கும் நிகழ்ந்துவிடப் போவதில்லை என்று தெரிந்தும் வாழப்பழகிக் கொண்ட மௌனங்கள்.

தன் கண் முன்னாலேயே மகள் வல்லுறவுக்குட்படுத்துகையில், மனைவியின் முன் கணவன் வெட்டிக்கொல்லப்படுகையில், வீடு சூறையாடப்படுகையில்- மதங்களின் பெயரால், இனங்களின் பெயரால் இழந்து போயினும் வாழ்கிறோமே. எது கொடுமை?

கவிஞன் அமைதியானவன். அவனுள்ளும் எரிமலை. ஆனாலும் தன்னைப்பண்படுத்திக்கொள்கிற பக்குவம். சந்திரனைத் தொட்ட நாட்டில் கூட மாறாத சோகம் தான் மக்கள் பட்டிருக்கிறார்கள். சொந்த மண்ணின் மைந்தர்களே ஆக்கிரமிக்கின்ற அவலம்.

யார் கற்றுத்தந்தார்கள்? யார் அனுமதித்தார்கள்? ஈராக்முதல் நமது மண்வரை தொடர்கிறது. கவிஞரின் வரிகள் பல இடங்களில் சோகம் சொல்கிறது.

சில கவிதைகள் மல்லிகை சஞ்சிகையில் வெளிவந்துள்ளது எனில் அங்கு கவிதை செப்பனிடப்படுகிறது என்றே அர்த்தம்.

அட்டைப்படம், அச்சிடல், எழுத்துப்பிழையின்மை என அதிக கவனம் எடுத்து இந்த நூல் வெளிவந்துள்ளது.

‘மாமிசப்பாடலுக்கான
குருதிப்புனைவுகளில்
கல்லறை தூரத்தைக்
கணக்கிட்டுக் கொண்டு
உயிரின் இருத்தல் தொடர்கிறது’

‘எங்கள் தேசம் 2006’ என்னும் கவிதையில் இப்படிச் சொல்லும் இவர் பிறிதொரு கவிதையில்

‘ அமாவாசை அடகு வைத்துக்கொண்டிருந்த
இரவில்
என் கடைசி துளி உயிரின் கதறலை
கடலலைகள் காற்றின் துனைகொண்டு
உன் முகத்தில் துப்பிவிடும்’

என எழுதுகிறார். இன்னொரு கவிதையில்

‘ மீண்டும் நான் என்
இருட்டறை நோக்கி
உட்காயங்களுடன்
உருகி உறைகிறேன்’

ஒவ்வொரு கவிதைக்குமான தலைப்பே கவிதைகள் தான்.

மண்ணில் துலாவும் மனது.
மரணவெளி விவரணைகள்.
வாழ்வு வரைந்த விதி.
மரணப்பொழுது.
காதல் அல்லது கவிதை சொல்லும் காலம்.
யதார்த்தின் தோல்வி குறித்து….
ஆயுதத்தின் ஓலம்.

இங்கு இன்னொரு அதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. புதிய வீச்சுடன் ஒரு இனத்தின் பரிணாம வளர்ச்சியின் எழுச்சியுடன் எழுத்துக்கள் அச்சில் வருகின்றன. மஜீத், ஆத்மா, பௌர், சோலைக்கிளி, பொத்துவில் ஜகான், சுல்பிகா, நாச்சியாதீவு பர்வீன், பகிமா ஜெகான் இவர்களுடன் வசீம் அக்ரம்.

பலவகையில் காயப்பட்ட நகரம் அனுராதபுரம் எனினும் அங்கும் தமிழ் வளர்கிறதே எனும் போது அதிக மகிழ்ச்சி தருகிறது. அனுராதபுரம் சார்ந்த குக்கிராமங்களில் இருந்தும் தமிழ் தன் அடையாளத்தைக் காட்டி நிற்கிறது. பதிப்புத்துறையிலும் முன்னணியில் நிற்கும் நம்மவர்கள் எதிர்காலத்தில் நல்ல படைப்புகளை வசீம் அக்ரம் போன்றோர்கள் ஊடாக எதிர்பார்க்கிறது.

நூலைப் பெற……
வசீம் அக்ரம்
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
ஒலுவில் 32360
இலங்கை.

கவிஞர் – முல்லை அமுதன்
27.07.2008



மேலதிகக் ஆக்கங்கள்…
காபந்து அரசாங்கத்தில் ரணில் பிரதமராக இருக்கமாட்டார்: ஐக்கிய தேசிய கட்சி
இந்தியா உதவியுடன் இலங்கையில் யுத்தம்: புலிகளின் புதிய நம்பிக்கை
இந்தியா – பாக். பிரச்னைக்கு போர் தீர்வல்ல : கிலானி
நம்புங்கள் நல்லூர் கோயிலும் இடிக்கப்படும், சங்கிலியன் சிலை தூக்கி எறியப்படும், மீண்டும் நூலகம் எரிக்கப்படும்
பாகிஸ்தானில் ராணுவ தாக்குதலில் 700 தலிபான்கள் பலி
திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
பூந்துணர் நூல் விமர்சனம் – ‘கவிஞர்’ முல்லை அமுதன்



நல்ல கலை இலக்கியங்களை வளம்படுத்தவெண்ணி கலையார்வம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்டது தான் பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கம். எழுத்தாளர்களின் ஒருங்கினைப்பினால் மாதாமாதம் இலக்கிய நிகழ்வுகளை நடாத்தி அதன் மூலம் பெறப்பட்ட இலக்கிய வடிவங்களைப் புடம் போட்டு கனகச்சிதமாக ‘பூந்துணர்’ எனும் நூலாக வெளிக் கொணந்துள்ளனர்.

பலரைச்சொன்னாலும் பேராசிரியர் கோபன் மகாதேவாவின் தொடர்ச்சியான முயற்சியினால் இவ் இலக்கிய வட்டம் தொடர்கிறது

ஈழத்து மட்டுவிலில் 1934ல் பிறந்த பேராசிரியர் கோபன் மகாதேவா தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதும் ஆற்றல் மிக்கவராக இங்கிலாந்திலும் தன் இலக்கியப் பயணத்தைத் தொடர்கிறார். இவர் தனது ஆறு சொந்த நூல்களையும் மற்றையோரின் 18 நூல்களையும் ஏற்கனவே வெளியிட்டுள்ளார். இவர் பன்முக ஆற்றல் உள்ளவர். நேரம் தவறாமை என்பது இவரது கொள்கைகளில் ஒன்றாகும்.

யுகசாரதி என்னும் பெயரில் அறியப்பட்ட திரு. எஸ். கருணானந்தராஜா அவரது பாரதியின் குயில்பாட்டின் தத்துவ மர்மம் எனும் ஆய்வு நூலுக்காக தமிழக ஸ்ரீராம் நிறுவனத்தினரால் ‘பாரதி இலக்கிய செல்வர்’ எனும் பட்டம் பெற்றவர். நடிப்பிலும் ஆற்றல் மிக்க இவர் ஏற்கனவே நான்கு நூல்களை வெளியிட்டவர். இவரது ஈழத்தாயின் சபதம் இன்றும் பலராலும் பேசப்படுகிறது.

திரு. க. சிவானந்தன் அவர்கள் தமிழ் ஈழத்து யாழ்ப்பாணத்து நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பிரித்தானியாவில் விரிவுரையாளராகக் கடமையாற்றுகிறார். பேராசிரியர் கைலாசபதி மீது அபிமானம் கொண்டவர். சிறந்த பேச்சாளர்… விமர்சகர்… தமிழை இலாவகப்படுத்துவதில் வல்லவர்.

தமிழ் ஈழத்து தென்மராச்சியில் உள்ள நுணாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. கா. விசயரத்தினம் அவர்கள் ‘கணினியை விஞ்சும் மனிதமூளை’ எனும் அறிவியல் நூலை 2005ல் வெளியிட்டுள்ளார். 2007ல்
இலக்கியப் பூக்கள் -கவிஞர் மா.கி. கிறிஸ்ரியன்





இலக்கியப் பூக்களின் ஆழம் பொதுமையில் நிற்கின்றது. படைப்பாளியின் ஒற்றுமைக்கு அறைகூவல் விடுகின்றது. காலமென்னும் கடலில்க் கட்டப்பட்டிருக்கும் கலங்கரை தீபம். நமக்குத் தெரிந்ததையும், தெரியாததையும் அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது. சமுதாய பொருளியல் அரசியல் கண்ணோட்டஙகளோடு கூடிய மக்கள் இலக்கியங்களைப் படைத்த படைப்பிலக்கியக் களத்தில் மேலோராக விளங்கி வெற்றி பெற்ற அமரர்களாகியவர்களைப் பற்றிய கட்டுரைகள், இன்றிருக்கும் படைப்பாளிகள் படைத்து ‘இலக்கியப் பூக்கள்’ வழங்குகின்றது.

சமுதாய ஈடுபாட்டுடன் மண்ணையும், மக்களையும் நேசித்து வாழ்ந்த‌ தலைமுறை வாழ்வுக்கு வழி காட்டியவர்கள் வாழ்த்துக்களுக்கு உரியவர்கள்! வணங்கத்தக்கவர்கள்!! இதன் அடிப்படையில்த்தான் முருகையன் ஒரு கட்டுரையில் சொன்னார், ‘படைப்பாளிகள் கடவுளர் என்று’. சமுதாய மாற்றத்திற்கும், மாறுதல்களுக்கும், கலை இலக்கியக் களம், இலக்கிய வடிவங்களைத் தந்த தளத்தை தரிசித்து நின்று பிரபல்யம் பெற்ற முன்னோடிகளை, இலக்கிய கர்த்தாக்களை, ‘இலக்கியப் பூக்கள்’ விளம்பி நிற்கின்றது.

உண்மையான ஈடுபாட்டோடு ஈழத்தில் வாழ்ந்த உண்மையை வரவேற்றுள்ளதை இந்த நூலில் மதிப்பிடவும் முயன்றுள்ளேன். இக்கால கட்டத்திற்குத் தேவையான புதிய அணுகுதலோடு வெளிவந்துள்ளதும் பாராட்டத் தக்கனவாகும். செம்மையான அச்சுப் பதிப்பும், அழகும் நிறைந்துள்ள முகப்புத் தெறிப்பும், கட்டுரையாளர்களின் சாயல்ப் படங்களும் மிகப்பெரும் கவருதலை கச்சிதமாக கையாண்டுள்ளமை பாராட்டுக்குரியது.

‘காற்றுவெளி வெளியீடாக’ காந்தளகம் பதிப்பகத்தால் வெளிவந்துள்ளது. இந்த ‘இலக்கிலப் பூக்கள்’ பற்றிய திறனாய்வு செய்ய வேண்டியவர்கள் கட்டாயம் அதனை மேற்கொள்ள வேண்டும். தங்களுக்குச் சரியெனப் பட்டதை ஒளிவு மறைவின்றி தயங்காமல் கூறும் அறிவைக் கூறவேண்டும். இம்மேலோர் பற்றிய கட்டுரைகளை எழுதியவர்கள் சமகாலத்தோரே! இவற்றின் வளர்ச்சிக் கூற்றில் இனத்தின் எதிர்காலம், சுற்றாடல், கருத்தாடல், நாளைய நடையியல், தெறிப்புகள் கவனமாக கவனிக்கப்பட்ட படைப்பையும், படைப்பாளியையும், பார்வைக்குட்படுத்தப்பட்டு பதியப்பட்டுள்ளது. இந்த வகையிலும் முல்லை அமுதனைப் பாராட்டவேண்டும்.

உரையால், எழுத்தால், உயர் நோக்கால் தமிழ்ச் சமூகத்திற்கு முக்கியமாக இளைஞர்களுக்கு வழிகாடடிகளாக விளங்குபவர்கள், தெளிந்த நோக்குடைய எழுத்தாளர்களால் சிறந்தமைந்துள்ள இந்த ‘இலக்கியப் பூக்கள்’ முன்மாதிரியாகத் திகழ்கின்றது. முன்னோடி மேலோர்கள் பற்றிய கட்டுரை நல்ல நிலையில் உயிரோட்டம் உள்ள நடையும், வாசகர்களைத் தன்பால் ஈர்க்கின்ற வகையில்த் துலங்குகின்றது. தொகுப்பாசிரியர் முல்லைஅமுதனையும் இந்த இடத்தில்ப் பாராட்ட வேண்டியுள்ளது.

இவர் எழுத்துக்களும், தமிழ் நூல்க்காப்பக முயற்சியும், தமிழ் கூறும் நல்லுலகிற்கும், தலைமுறை தலைமுறைக்கும் தேடலுக்குரியனவாகும். 1980களில் கவிதைகளுடன் 12 நூல்களை எமக்களித்துள்ளார். பிரித்தானியாவுக்குப் புலம் பெயர்ந்த பின்னர் இவர் மூச்சான பேச்சும் எழுத்தும் பேணிக்காக்கப்பட வேண்டிய நூல்களை ஆவணப்படுத்துவதில் உள்ள ஈடுபாடும் கவனத்தில்க் கொள்ளத்தக்கனவாகும்.

இவரது நினைத்தவுடன் வெளிவரும் ‘காற்றுவெளி சஞ்சிகை’ தமிழர் வாழும் இடங்களெங்கும் தவழ்ந்து கொண்டிருக்கின்றது. இதன்கண் கலையிலக்கியப் பங்களிப்பு அளப்பரியதாகவே திகழ்கிறது. ‘இலக்கியப் பூக்கள்’ அடக்கியுள்ளவற்றைப்போல் பல நூல்கள் வந்துள்ளது. அந்த நூல்கள்பற்றிக் கருத்துச் சொல்லவேண்டும் என்று நான் நினைக்கிறேன். என் நினைப்பிற்கு இக்கட்டுரை இடந்தராது என்பதால் அந்த நினைப்பை அறுத்துக்கொள்கிறேன். இந்தக் கட்டுரையில் பொறுப்பற்ற முறையில் சுருக்கமாக சொல்வது அறிவுமல்ல, விமர்சனமுமல்ல, பாராட்டுக்குரிய மேலோரான முன்னோடிகள் பற்றி இனிப்பார்ப்போம்.

இக்கால கட்டத்தில் புலத்திலோர் மத்தியில் புதிதான தேடல் நோக்கு முகுள்வதைக் காணலாம். பலர் இலக்கியப் பூக்கள் போன்ற நூல்களைக் கையாண்டுள்ளார்கள். கலை இலக்கிய நாடகங்கள், சினிமா, நாட்டியம், ஓவியம், சிற்பம் போன்றவற்றிற்கு ஆற்றிய பணிகளை மறந்து போகாதவண்ணம், மறைந்துவிடாத வகையில் ஆடுவணப்படுத்தலுக்கு ஏற்றவகையில் ஈடுபட்டு வருவதையும் காண்கின்றோம். இவர்கள் எல்லாம் இணைத்துப் பிணைப்பது ஒன்றே ஒன்றுதான்.

அந்தப் பெரும் பேறான ‘மானிட நேயத்தை’ மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு தலைமுறைக்கு அப்பாலும் செல்ல வேண்டும் என்பதற்காக ஆறாவது விரலைப் பயன்படுத்தி பங்களிப்பைக் காத்திரமாக இக்காலகட்டத்தில்ச் செய்கின்றனர். தமிழீழ மக்கள் படும் துன்ப துயரங்கள், சாவுகள், அவலங்களுக்குள்ளும் சாதிக்கின்றனர். ‘இலக்கியப் பூக்கள்’ நூலில் இடம்பெற்றுள்ளவர்கள் மனிதனுக்கு தங்கள் பணியைச் செய்தவர்கள். மனிதனுக்கு அப்பாலும் எப்பாலும் ஒன்றுமில்லை! மனிதனுக்காகவே தங்கள் வாழ்நாளை, இலக்கியப் பங்களிப்பை ஆற்றியவர்கள்.

அத்தகைய நாற்பத்தி நான்கு இலக்கிய வாதிகளை இன்நூலில்க் காண்கின்றோம். இந்த அமர எழுத்தாளர்கள் அதன் முன்னோடித் தமிழ்ப்பெரும் புலவர் ஈழத்தின் கண் பூதந்தேவனார் சங்கநூலில் இடங்கொண்ட பாடல்களால் ஈழத்திற்குப் புகழ்சேர்த்த அந்தப் பெரும் புலவரோடு தொடங்கி, நாப்பத்தி நான்காவது கட்டுரை அவர்கள் அவனைச் சுட்டுக் கொண்டார்கள் என்ற கட்டுரையுடன், அடுத்த இரண்டாவது பகுதிக்குக் காத்திருக்க வைத்துள்ளார் முல்லைஅமுதன்.

‘இலக்கியப் பூக்கள்’ முன்னூற்று ஏழுபத்தொரு பக்கங்களைக் கொண்டு பக்குவமான தகவல்ப் பரப்புதலைக் கச்சிதமாக உள்ளடக்கியுள்ளது. வார்த்தைகள் பூப்போன்றன. அவற்றைத் தொடுக்கும் விதத்தில்த் தொடுத்தால் மதிப்புப்பெறும். அந்த நூலைப் பார்க்கும் வாசகர்கள், விமர்சகர்கள் அடுத்த பாகத்தை எதிர்பார்ப்பார்கள். அத்தகைய ஆர்வத்தைத் தூண்டிவிட்டிருக்கிறது.

முதற்பகுதி நாற்பத்தி நான்கு கட்டுரைகளை எழுதியவர்களின் நிழற்படங்களோடு அவர்கள் பற்றிய சிறு குறிப்புகளும் இடம்பெற்றுள்ளது. எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் விரிந்து, பரந்த வாழ்க்கைக்குரிய சகல அம்சங்களையும் உள்ளடக்கிய உயர்ந்த கண்ணோட்டத்துடன் இக்கட்டுரைகள் விளங்குகின்றது. சார்பு நிலைகொண்டு நிகழ்ந்த நிகழ்வுகளை கைக்கொள்ளாமல், தொகுப்பாசிரியர் கையாண்டுள்ளார். இதுபோன்ற நூல்களின் உள்ளடக்க முயற்சிக்குப் பதிலாக வெளிவேசக் கவர்ச்சி, சுயனலச் சுண்டுதல், தன்னலப்போக்கும், புகழாதிக்கம் செலுத்தி வெளிவந்தன எனக்கொள்ள அண்மையில் வெளிவந்த நூல்கள் உண்டு.

சந்தர்ப்பவாத வெளிவேசமிட்ட பாசாங்காகவே அவற்றறை நான் கவனித்திருந்தேன். இவற்றையெல்லாம் நீக்கும் சாலச்சிறப்பு நூலாக இலக்கியப் பூக்கள் வந்துள்ளதைக் காணலாம். இவ்வாறான அறிவார்ந்த பதிவாக்கல்த் துறையில் நம்மவரின் நாட்டம் அதிகம் செல்வதும், விரித்தி அடைவதும் கண்டு நம்மவர் பாராட்டுக்களைத் தந்து மதிப்பர். இலக்கியப் பூக்களில் இடம்பெற்ற படைப்புக் கடவுளரையும், படைத்தளித்த படைப்பாளிகளையும் நாம் இனிப் பார்ப்போம்.

1-மயிலங்கூடலூர் பி. ந‌டராசன் எழுதிய ஈழத்து முன்னோடி தமிழ்ப்பெரும புலவர் ஈழத்துப் பூதந்தேவனார், சங்ககாலத்தின் ஈழத்து முன்னவர் எம்மினத்தின் வரலாற்றின் கண்ணாடி.

2-மா.பா. மகாலிங்கம் சிவம் எழுதிய உரையாசிரியர் ம.க. வேற்பிள்ளை தமிழ் நாட்டில் பட்டம் பெற்ற யாழ்ப்பாணத்து முதல்ப்பட்டதாரி.

3- சைவப்பெரியார் சி. சிவபாதசுந்தரனார் நாவலர் என்றவுடன் எவ்வாறு ஆறுமுகநாவலரின் நினைவு வருகிறதோ, அவ்வாறு சிவபாதசுந்தரனார் நினைவும் வரும்.

4- பண்டிதர் ம.வெ. திருஞானசம்பந்தப்பிள்ளை உரையாசிரியர் என்றும், பிள்ளைப் புலவர் என்றும் போற்றப்பட்டவர்.

5-குருகவி ம.வெ. மகாலிங்கசிவம் கல்வியைப் போதிப்பதிலும், இலக்கண இலக்கியத்திலும், கவிதையிலும் புகழ்பெற்றவர்.

6-கா. சிவபாலன் எழுதிய தமிழ் மூதறிஞர் இலக்கியக் கலாநிதி பண்டிதமணி சி.கணவதிப்பிள்ளை, ஆறுமுகநாவலர் பெருமானின் நிகழ்காலச் சின்னமாக விளங்கியவர். பண்டிதமணி நாவலர் பெருமானுடைய தருமத்துள் மூழ்கியவர். மேலும் நாவலரின் கண்டணப் பரம்பரையின் கடைசித் தமிழ்மகன்.

7-திருமதி ஜெயா நடேசன் எழுதிய தவத்திரு தனிநாயக அடிகள் உலகமெல்லாம் தமிழ் வளர்க்கவும், ஆய்வுக்குட்படுத்தவும், தமிழுக்கு மகாநாடு தொடங்கியவர்.

8-திருமதி ஜெயமணி கனகரத்தினம் படைத்த வித்துவான், கவிமணி, கலைஞானி, புலவர் க.த. ஞானப்பிரகாசம் புகழையும், பெருமையையும், விரும்பாத இலைமறை காயாக வாழ்ந்த ஒரு மரபுக்கலைஞர் ஞானி.

9-தமிழ்வேள் இ.க. கந்தசாமியின் தூரிகை வரைந்தது ஈழத்து நாடக இலக்கிய பெரும்புலவர் தேவசகாயம் பிள்ளை.

10-வி. கந்தவனம் படைத்திருக்கும் கனக செந்திநாதன் நெடுதுயர்ந்த உருவம், நெற்றியில்த் திருநீறு, வடிவாக வாய்விட்டுச் சிரிக்கும் குணமுடையான், குடியிருந்த வீடு தமிழ் நூல்கள் சஞசிகைகள், படிக்கும் சஞசிகைகள் பைந்தமிழ்ச்செல்வி, அடி எடுத்து வைத்து நடைபயிலும் தமிழ்வீடு.

இப்படியே இனி முப்பத்து நான்கு இலக்கியப் பூக்களையும் தேடுங்கள். தொகுத்தளித்த முல்லை அமுதன் இக்கங்கரியத்தைத் தவறாது ஈடுபடவேண்டும். படைப்பாளியளுக்கும், இப்பேற்றினைக் கொடுக்கவேண்டும். எமது தாயகம் எரிந்து கொண்டு இருக்கின்றது! எரிந்து சாம்பலலகிப் போனவற்றையும் நினைத்து இந்த ஆவணப்படுத்தலைத் தீவிரமாக ஈடுபடவேண்டுமென்று வாழ்த்தி நிற்கின்றோம்.



மேலதிகக் ஆக்கங்கள்…
சரத் பொன்சேகாவின் ஆட்சி காலத்தில் புலிகளின் சகல சொத்துக்களும் அரசுடமையாக்கப்படும்: ரணில்
இனிய நண்பிக்கு! – தயாநிதி
அரசியல்வாதிகள் பலர் ஜோதிடப் பலன்களை அறிந்து கொள்வதில் அதிக நாட்டம்
வெப்ப வாயு வெளியேற்றம்: யு.எஸ். அதிகளவு குறைக்க ஜெர்மன் வலியுறுத்தல்
தமிழராகிய நாம் எமது தாயகத்தில் முழுமையான சுயநிர்ணயவுரிமையுடன் வாழ விரும்புகின்றோம்: டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்
கடற்புலிகளை முறியடிக்க சிறீலங்கா கடற்படை உசார்நிலையில் உள்ளது: கோத்தபாய
பின்னிரவுப் பெருமழை ‍ -கவிஞர் முல்லையமுதன்



நூல் -பின்னிரவுப் பெருமழை
‍நூலாசிரியர் -மு. ரிலுவான்கான்
மித்ர பதிப்பகத்தின் ஊடாக வெளிவந்துள்ள இன்னூலின் சாராம்சமே முன்னுரை வழங்கிய பா. ரவிக்குமாரிடமிருந்து பெறமுடிகிறது. கம்பன் முதல் இன்றைய கவிஞர் வரை பலவாறாக கவிதைகளைச் சுவைத்தே வந்துள்ளோம்.

வானம்பாடிக்குப் பிறகு பல கவிஞர்கள் வந்தாலும் எழுத்து, கசடதபற, காலச்சுவடு, கணையாழி, புதியபார்வை, நவீன விருச்சம் என பல இதழ்கள் கவிதைகளைப் புடம்போட களம் அமைத்ததை மறுக்கமுடியாது.

காதல்க் கவிதைகளினூடாக ஏற்றத்தாழ்வு, மாற்றம், விடிவு என விரிவாகவும் ஆழமாகவும் கவிதைகள் பல வந்துள்ளன. நறுக்கென நல்ல கவிதைக்கு அமுத பாரதியின் புள்ளிப்பூக்கள் நூலைக் குறிப்பிடலாம். மேத்தாவின் கண்ணீர் பூக்கள் தொடங்கி அவரின் இறுதித் தொகுப்பு வரை காதல் ஊடாக சமுதாயம் நோக்கி விழுந்தவை தான். கண்ணதாசன் ஈரோடு தமிழன்பன், வைரமுத்து, ஆத்மானாம், யூமாவாசுகி, விக்கிரமாதித்தியன் என பலபல கவிஞர்களைக் கண்ட கவிதையுலகம் புதிதாய் மு. ரிலுவான்கானின் படைப்புலகம் பற்றி அறிய இன்னூல் வழிசமைத்துள்ளது. இவருக்கும் ஆத்மானாம், நகுலன் கவிதைகள் ஆகர்ஷித்துள்ளது போலும். தலைப்பே ஒரு கவிதை போலத்தான்.

மீரா, மேத்தா போன்று இழைய பாரதியின் கவிதைகளை ரசித்திருக்கின்ற என்னால் இவரின் கவிதைகளுக்குள்ளும் மூழ்க வைத்து ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஆனாலும் நேரடியாக படித்தது ஊடாக கவிதைகளை அனுபவித்து எழுதியுள்ளார்.

என் பிரேதப் பரிசோதனையில்
கவனமாகத் தேடுகிறார்கள்
உன்னை.

இவருக்கு ஆகாயம் கையில் கிடைத்திருக்கிறது. காதல் அருகில் வசப்பட்டிருக்கிறது. வாழ்வின் மீதான ஏக்கம் விரக்தி பிற கவிஞர்களைப் போல காதல் தூரம்தூரமாக…. கவிதை மனக் கைப்பிடியில்……
கவிஞனுக்கான சிறப்பே வாழ்க்கையை ரசிப்பது. அந்த ரசிப்பின் ஊடாக வார்த்தைகளை வாலாயப்படுத்துவது வெற்றியாக வாய்த்திருக்கிறது.

என்னைக் கொன்றுவிட்டாய்
அவசரத்தில்
என் பிணம் புதைக்க
மறந்துவிட்டாய்…

முடிந்தது
முடிந்ததாகவே போக
நாம் சந்திக்காமலே சாகவேண்டும்.

இவரின் கவிதைகளில் வார்த்தையாலங்கள் இல்லை. சக மனிதர்களோடு உரையாடுவது போல் வார்த்தைகளை அழகாக விதைத்துச் செல்கிறார். இன்ம கவிதை நூலை வாசித்துமுடித்தபோது ஒரு அழகிய காதல் நவீனத்தை வாசித்து முடித்த அனுபவம் ஏற்பட்டது.

இனியும் வலிதாங்காது இதயம்
நீ என்னைக் காணக்கூட வேண்டாம்
கடந்தாவது போ…..

வாசித்து முடிக்கையில் மனதும் வலிக்கிறது. இவரின் எழுத்துப்பணி தொடர வாழ்த்தி இன்னொரு பரிமாணத்துடன் கூடிய கவிநூலை எதிர்பார்த்து நிற்கிறோம்.


மேலதிகக் ஆக்கங்கள்…
மனித உரிமைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க அவுஸ்ரேலியாவிடம் கோரிக்கை
ஈரான் அணுசக்தி தலைவர் ராஜினாமா
வுட்ஸோர்ஸிங்-நிறுவனங்களுக்கு ஒபாமா ‘வேட்டு’!
ஒன்றுகூடலை கைவிட்டமை அரசின் அழுத்தமே: பௌத்த சங்க பேச்சாளர்
பாகிஸ்தானுக்கு 7.5 பில்லியன் டாலர் நிதியுதவி: மசோதாவில் ஒபாமா கையெழுத்து
வவுனியா இடம்பெயர் மக்கள் முகாம்களுக்கு விஜயம் செய்தார் பிளேக்