Wednesday, 7 December 2011

அகஸ்தியர்-எனது பதிவுகள்




மனித நேயம் மிக்க ஒருவரை மீண்டும் நாம் நினைக்க வைத்துள்ளது.வர்க்கம் சார்ந்து,சாதிய முறைமைகளை எதிர்த்த படி தனது கற்பனைத் திறத்தால் நம்மையெல்லாம் ஆட்கொண்டவர் தான் அகஸ்தியர்.29/08/1926இல் சவரிமுத்து-அன்னம்மா தம்பதியர்க்கு மகனாக ஆனைக்கோட்டையில் பிறந்தவர்.
அந்தக் காலத்து எஸ்.எஸ்.சி சாதாரண தரம் வரை கல்வி கற்றிருந்தாலும் அவர் வளர்த்துக்கொண்ட தமிழ் அறிவு அவரை நல்லதொரு படைப்பாளியாக நமக்குத் தந்திருக்கிறது.தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் ஆற்றல் வாய்ந்தவராகவே தன்னை வளர்த்துக் கொண்டார்.
எழுத்தாற்றலால் தன்னை வளர்த்துக்கொண்டாலும் பலராலும் நேசிக்கப்பட்ட அதே வேளை சிலரால் இருட்டடிப்புக்குள்ளாக்கவும் பட்டதனால் இவரின் எழுத்துக்களை கண்டும் காணாது விட்டதும் பலரின் பார்வைக்குத் தெரியாமல் போய்விட்டார்.
இவர் தன் தெரிவாக கம்யூனிஸத்தை தேர்ந்தெடுத்ததும் படைப்புகள் பலரிடம் இவர் படைப்புகள் சென்று சேர முடியாது போனது.ஆனாலும் பார்வைக்குக் கிடைத்தவைகள் காத்திரமானதான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை.
புதுமைப்பித்தன்,லெனின்,காண்டேகர்,மாஜினி,மகாகவி.பாரதியார்,பாரதிதாசன்,வள்ளுவன்,டால்ஸ்டாய்,ஸ்டாலின்,மாவோ,மார்க்ஸ் போன்று பலரின் எழுத்துக்களை விரும்பிப் படித்தார்.அதன் விளைவாக 1947 இல் தனது முதற்கதையை சுதந்திரனில் எழுதினார்.இசை மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். நாட்டுக்கூத்துக் கலைஞர்களையும் மதிக்கின்ற பக்குவம் இவருக்கிருந்ததினால் சக கலைஞர்களை,படைப்பாளர்களை மதிக்கின்ற உணர்வு இவருக்குள்ளும் வளர்ந்து வந்துள்ளதை உணரலாம்.அவ்வப்போது கவிதைகள் எழுதினாலும் சிறுகதை,கட்டுரை,நாவல் எழுதுவதில் தன் திறமையை வெளிப்படுத்தினார்.பிரேத விசாரணை,பங்காளிச் செய்தி போன்ற சிறுகதைகளை சுதந்திரன் வெளியிட்டிருந்தாலும் கண்ணதாசன்(இந்தியா)தினகரன்,செய்தி,ஈழநாடு,ஈழகேசரி,அமிர்தகங்கை,ஈழநாடு(பாரிஸ்),தமிழன்,வீரகேசரி,பாரிஸ்முரசு போன்ற பத்திரிகைகள்/சஞ்சிகைகள் இவரின் படைப்புகளை வெளியிட்டு இருந்தன.
சத்திய ஆவேசம் கொண்டவர் என் அடையாளப் படுத்தப்பட்டவர்.அதனால் விமர்சனங்களுக்குட்பட்டவர்.வர்க்கம் சார்ந்து சிந்தித்தவர்.சாதிய முறைமைகளை எதிர்த்தவர்.முற்போக்கு சிந்தனைகளுடன் வாழ்நாளில் தன்னை அர்ப்பணித்தார்.முதன் முதலில் எழுத்தில் உணர்வூற்றுச் சித்திரத்தினை அறிமுகப் படுத்தியவர்.மொழி மீதான காதல் அவரின் எழுத்தில் காணக்கூடியதாக இருக்கிறது.கொழும்பு,தியத்தலாவை,திருகோணமலை,கண்டி,களுத்துறை,அம்பலாந்தோட்டை,அளுத்கம போன்ற இடங்களில் எல்லாம் தீயணைக்கும் படைப்பிரிவு,பண்டகசாலை பொறுப்பாளர்,பொலிஸ் அதிகாரி,இராணுவ அலுவலக உத்தியோகத்தர் என பல பதவிகளை வகித்திருந்தாலும் எழுத்தாளராகவே பலருக்குத் தெரிய வந்திருக்கிறார்.
ஈழநாடு நடாத்திய நாவல் போட்டியில் இவரது 'எரிகோளம்' நாவல் பரிசு பெற்றது.தொடராக வெளிவந்து பலரை வியக்க வைத்தது.அதுவே பின்னாளில் 'எரி நெருப்பில் இடை பாதை இல்லை' எனும் பெயரில் நூலாக வந்து பலரையும் சென்றடைந்தது குறிபிடத் தக்கது.
அது போலவே 'மண்ணில் தெரியுதொரு தோற்றம்' நாவல்1978இற்குரிய இலங்கை சாகித்திய மண்டல பரிசினைப் பெற்றதை ஈழத்து இலக்கிய உலகில் இவரின் இருப்பை மேலும் உறுதிப் படுத்தியது. நாடுக்கூத்துக் கலைஞர் மீதான அபிமானமே நமது கலைஞர் பூந்தான் ஜோசெப் அவர்களின் வாழ்க்கை வரலாறை எழுதி 1981இல் வெளியிட்டார்.எழுத்தில் ஒரு லாவகம் இருந்தை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.
கார்த்திகேயன்,வைத்திலிங்கம்,பீட்டர் கெனமன்,சண்முகதாசன்,கைலாசபதி,சிவத்தம்பி,தில்லைநாதன் போன்ற மார்க்ஸீச சிந்தனையாளர்களை மிகவும் நேசித்தார்.நெருங்கிய தொடர்புகளைப் பேணியும் வந்துள்ளார்.இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் தொடர்புகளை கொண்டிருந்தார். மல்லிகை,தாமரை,மேகம் போன்ற சிறுசஞ்சிகைகளை விரும்பி வாசித்தார்.தினகரன் மீதான அவரின் அபிமானமோ என்னவோ அவரின் ஞாபகார்த்த சிறுகதைகளுக்கான போட்டிகளை அவரின் குடும்பத்தார் நடாத்தினார்களோ?
ஆலடியம்மான்,காலன்,தீட்சண்யன்,எஸ்.ஏ,அருளம்பனார்,குறுமுனிவர்,வித்தக பண்டிதர்,யாழ்ப்பாணன்,ஈழத்துச் செல்வன்,சத்தியமூர்த்தி,நவமணி,நவஜோதி,ஜெகா,ஜீவா,ஜெகனி,நாவலன்,வசந்தன்,லெனினிஸ்ட்,கலைதாசன்,புதுமைப்பிரியன், போன்ற புனைபெயர்களில் எழுதியுள்ளார்
1983 இல் ஏற்பட்ட இனக்கலவரம் இவரின் உடைமைகளை-நூல்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.படைப்பாளிக்கு பிற அழிவுகளை விட நூல்களின் இழப்பின் வலி அதிகம் தான்.
இவரின் நூல்களாக:சிறுகதைள்-இலவு காத்த கிளிகள்,மேய்ப்பர்கள்,அகஸ்தியர் கதைகள்,எவளுக்கும் தாயாக,மானிட தரிசனங்கள்,லெனின் பாதச் சுவடுகள் என்பனவும்,குறு நாவல்களாக-மகாகனம் பொருந்திய,நரகத்திலிருந்து..,இருளினுள்ளே,கோபுரங்கள் சரிகின்றன,ஒரு குப்பி விளக்கு எரிகின்றது போன்றனவும் வெளிவந்துள்ளன.தொடராக வந்திருந்தாலும் நாவல்கள் நூலாக வந்தபின் விமர்சனங்கள் பல கிடைத்து ஊக்கத்தை தந்தன எனலாம்.அந்த வகையில் திருமணத்திற்காக ஒரு பெண் காத்திருக்கிறாள்,மண்ணில் தெரியுதொரு தோற்றம்,எரி நெருப்பில் இடைபாதை இல்லை என்பவற்றைக் குறிப்பிடலாம். அவரின் போரும் சமாதானமும் நாவல் அச்சில் உள்ளதாக அறிகிறோம். இன்னும் உதிரிகளாக எழுதிய ஆக்கங்கள் தொகுக்கப் பட வேண்டியுள்ளன..
மெல்லியதாக காதல் உணர்வு,குடும்ப உறவு இவற்றூடாவே வர்க்க-சாதி இவற்றுக்கெதிரான போராட்டம் பற்றி தன் கதைகளூடு நகர்த்திச் சென்றார்.
வில்லூன்றி சாதிக் கலவரம் இவர் மனதை பாதித்ததின் விளைவே வில்லூன்றி மயானம் படைப்பு உருவானது.அதுவே எரிமலையாகவும்,எரிகோளமாகவும் விரிவடைந்தது என்பர்.பின்னர் எரி நெருப்பில் இடைபாதை இல்லை என நூலாகியது.
கட்டுரைகளாக தன் எண்ண வெளிப்பாடுகளை எழுதியது சிறப்பாகவெ பார்க்கமுடிகிறது.அவற்றுள் நூலாக வெளி வந்த ஒரு நூற்றாண்டின் இரு தமிழ் நாவல்கள்,கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும்,மரண சாசனம்-கருத்தியல் சார்ந்த பிரகடன நூல்,அகஸ்தியர் பதிவுகள்,அர்த்தமுள்ள வாழ்க்கை(அச்சில்)எனது இலக்கிய வாழ்க்கை(அச்சில்) சிறப்பான பக்கங்களை நமக்குத் தொடுக் காட்டுகின்றன.
நாடகங்கள்,நாட்டுக்கூத்து மீதான இவரது ஈடுபாடும்,நாடகம் சார்ந்த கலைஞர்களின் வாழ்க்கையின் தேடலுமே நவீன பரமார்த்த குருவும் அவர்தம் சீடர்களும்,அலைகளின் குமுறல்,நாட்டுக்கூத்துக் கலாநிதி பூந்தான் ஜோசேப்பு கலை உலக வாழ்க்கை வரலாறு நுல்களாக தந்திருக்கிறதும் பாராட்டத் தக்கது.
நான் அறிந்தவரையில் உணர்வூற்றுச் சித்திர நூலாக நீ எனும் நூலைத் தந்ததன் மூலம் மேலும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டார்.இயக்க-இயல் தத்துவ நூலென பலராலும் விதந்துரைக்கப்பட்டார்.
கலகக்காரர் என்று சிலரால் அடையாளப் படுத்தினாலும் அவருக்குள் இருந்த நேயத்தை அவருடன் பழகியவர்கள் குறிப்பிடத் தவறியதில்லை.
எங்கோ இருக்கும் ருஷிய,சீன கம்யூனிஸ தத்துவங்களை உள்வாங்கிக் கொண்டவர்கள் நமது இன விடுதலைப் போராட்டத்தைக் கண்டு கொள்ளவில்லை என்பது என் கருத்து.அவர்களின் சூழல் சார்ந்த போராட்டங்கள் அப்படி இருந்ததோ?
டொமினிக் ஜீவா, அ.ந.கந்தசாமி,டானியல்,டானியல் அன்டனி என்று பலரை குறிப்பிடலாம்.
பிரான்ஸிற்கு புலம் பெயர்ந்த பின்னும் நிறைய எழுதினார்.நோய் வாய்ப்பட்டு 08/12/1995இல் மரணிக்கும் வரை இலக்கியம் பற்றியே பேசினார்-எழுதினார்.
இலக்கியம் அவரின் சொத்து.அவர் நம் இலக்கியத்தின் சொத்து.ஈழத்து இலக்கிய பற்றி எழுதும் போது அகத்தியரை விட்டு விட்டு எழுதி விட முடியாது.
நாமும் இலக்கியம் மட்டுமன்றி இலக்கியர்களையும் நினைவு கூர மறத்தல் ஆகாது.
ஒரு இலக்கிய இயக்கமாக வாழ்ந்த அகஸ்தியர் நம் ஆன்மாவிலும் வாழ்வார்.
முல்லை அமுதன்
05/12/2011

Saturday, 28 May 2011

முல்லை அமுதனுடனான நேர்காணல் :-

1981ல் நித்தியகல்யாணி கவிதை நூலுடன் ஆரம்பித்த இவரது எழுத்துப்பயணம் 14வது வெளியீடாக வந்துள்ள இலக்கியப்பூக்கள் வரை தொடர்கிறது. ஆரம்பத்தில் நாடகம், கவியரங்கம் என தொட்டு வந்த இவர் ஈழத்துநூல் சேகரிப்பாளராகவும் சஞ்சிகையாளராகவும் திகழ்கிறார். இவர் எமக்காக வழங்கிய செவ்வி. (ஆ-ர்)

1. தங்கள் எழுத்துப்பணிபற்றி...?
1981 வரை நாடகம், கவிதை, என தொடர்ந்த என் இலக்கியப்பயணம் நித்தியகல்யாணி எனும் கவிதை நூலுடன் மேலும் இலக்கியப் பயணத்துடனான எனது வாழ்வும் இறுக்கம் கொண்டது இன்றுவரை தொடர்கிறது.
2. உங்களது நூல்சேகரிப்புப் பற்றி, அது சார்ந்த அனுபவங்களைக் கூறுங்கள்...
ஈழத்தில் இருந்த போதே தந்தையுடன் நானும் நூல்களை வாங்கி வாசிப்பதுடன் சேகரித்தும் வந்துள்ளேன். இன்று புலம்பெயர்ந்த பின் ஈழத்து இலக்கியம் சார்ந்த நூல்களை ஆவணப்படுத்த எண்ணி சேகரிப்புப்பணியில் ஈடுப்பட்டு வருகிறேன். ஆத்ம திருப்தி எனினும் வலிகள் அதிகம். அச்சுறுத்தலும் அதிகம்.
3. புலம்பெயர்ந்தோர் படைபிலக்கியம் சார்ந்து நீங்கள் அடையாளப்படுத்தும் எழுத்தாளர்கள் சிலரைக்குறிப்பிடுங்கள்...
என். கே. மகாலிங்கம், ஷோபாசக்தி, குமார்மூர்த்தி, செழியன், கி.பி. அரவிந்தன், கருணாகரமூர்த்தி, மு. புஸ்பராஜன். பாலகணேசன், இப்படி நீள்கிறது பட்டியல்.
4. இலக்கியம் இலக்கண விதிகளை உடைத்தெறிவது ஆரோக்கியமானது என நினைக்கிறீர்களா?
நிச்சயமாக. சில சமயம் கசப்பாகவும் இருக்கும். புதிய வீச்சுடனான நமக்கான உலகத்தை சிருஸ்டிக்க இலக்கிய விதிகளை உடைத்தெறிவது சாத்தியப்பட்டுத்தான் ஆகவேண்டும். புலம்பெயர் இலக்கியம் இதற்கான நெம்புகோலாக இருக்கும்.







5. காற்றுவெளி சஞ்சிகை பற்றி...
நினைத்தபோது வரும் இதழாக 13வது இதழ்வரை விளம்பரம் எதுவுமின்றி தனித்தே இலக்கியம் சார்ந்து வெளிவருகிறது. படைப்பாளிகளின் ஒத்துழைப்புடன் வெளிவரும் இதழ் புதிய படைப்பாளிகளுடன் பலரைச் சென்றடைய வழிசமைத்துள்ளது. சாதாரண விளம்பர சஞ்சிகைகள் போலன்றி ஆர்வம் உள்ளவர்களிடம் நேரடியாக சென்றடைகிறது.
6. புற்றிசல் போல் புலம்பெயர் எழுத்தாளர்களிடம் ஊடுருவும் தமிழக பதிப்பாளர்கள் பற்றி என்ன கூறவருகிறீகள்...
ஒரு வழிப்பாதையாக கைலாசபதி, டொமினிக்ஜீவா, பத்மநாபஐயர், காவலூர் ஜெகநாதன் போன்றோரால் சிரமத்துடன் தமிழக எழுத்தாளர்களுக்கு அறிமுகமான எமது ஈழத்து இலக்கியம் 83 இனக்கலவரத்திற்கு பிற்பாடு ஈழமக்கள் புலம்பெயர்நாடுகளில் தங்களைப்பதிய வைத்த பின்பு எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகமாக எதுவித சிரமமுமின்றி எம்மை நாடி பதிப்பகங்கள் நம்மை நாடி வர ஏதுவாயிற்று.
7. ஈழத்து இலக்கியம் அதன் செல்நெறி பற்றி....
அன்றைய எழுத்துப்போல இல்லாது காலச்சூழலில் சிந்தனை விரிவாக்கம் தொழில்நுட்ப வளர்ச்சி பதிப்பு சார்ந்த நெருக்கம் என்பவற்றால் எமது இலக்கியம் ஒரு வீச்சைத் தந்துள்ளது எனினும் உலக இலக்கிய தரத்திற்கு வரவில்லையே என்ற ஆதங்கமும் உள்ளது.
8. நீங்கள் தொகுத்த இலக்கியப்பூக்கள் வாசகர்களிடையே இருந்த வரவேற்பு எப்படி?
ஒரு வருட தேடுதலில் இருந்து நண்பர்கள் மூலம் கிடைத்த கட்டுரைகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன். 376 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்நூல் பலருக்கும் சென்று சேர்ந்துள்ளது. ஆங்காங்கே விமர்சனங்களும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இதனால் பகுதி 2 க்கான வேலையை ஆரம்பிக்கும் உற்சாகம் வருகிறது.







9. ஆரோக்கியமான விமர்சனங்கள் எழுத்தாளனை வளம்படுத்தும். இதை எற்றுக்கொள்கிறீர்களா?
விமர்சனங்கள் வாசகனையும் படைப்பாளியையும் இணைக்கும் கருவியாகும். படைப்பாளியை மீண்டும் மீண்டும் எழுத வைக்கிற உற்சாகத்தையும், படைப்பை – படைப்பாளியை ஆர்வத்துடன் தேடி வாசிக்கும் உந்துதலையும் தரவேண்டும். கூடவே விமர்சகனும் நூல்சார்ந்து அல்லது அதன் இலக்கியம் சார்ந்த பரிச்சயம் உள்ளவனாக இருக்க வேண்டும்.

10. ஈழத்து நூல்கண்காட்சி மூலம் ஒரு அசைவை ஏற்படுத்தியதா?
நிச்சயமாக. பலரை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. சிலரைச் சிந்திக்கவும் வைத்துள்ளது. எனினும் அது தந்த வலிகள் ஏராளம்.
11. இங்கு எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீகள்...
முள்ளிவாய்க்கால் வரை காவு கொள்ளப்பட்ட எம் கனவுகள், களவாடப்பட்ட எம் நிலங்கள், மரணித்த எம் மனிதர்களின் துயரம் சார்ந்த அவலங்களை எழுதுங்கள். அதுவே இன்றைய தேவையும் ஆகும்.

*ஈழநாடு ஆசிரியரால் வெளியிட இருந்த சஞ்சிகை ஒன்றிற்காக பெறப்பட்ட நேர்காணல் :சஞ்சிகை இதுவரை வரவில்லை(13/06/2010)

Sunday, 3 April 2011

ஈழத்துச் சிறுகதைகள்: எனது பார்வை

ஈழத்து சிறுகதைகளின் மீதான பார்வை தமிழக விமர்சகரிடையே பரவலாக தென்படவில்லையோ என்பதான ஆதங்கம் எம்மிடையே இருப்பதை மறுக்க முடியாது. விமர்சகர்களின் வாசனைத் தளம் பலரை உள் வாங்காமல் இருந்திருக்கலாம். விமர்சகர்களும் தங்கள் பரப்பை விட்டு வெளி வரத் தயாராகவும் இல்லை.

ஈழத்து விமர்சகர்கள் முன்வைத்த சிறுகதைகள் பல தளங்களிலும் பேசப்படாமல் போயும் இருக்கலாம். மேலும் அவ்வாறான சிறுகதைகளின் ஆசிரியர்களால் மீண்டும் எழுதாமல் போனதுவும் நமது துரஷ்டமுமாகும்.

குறிப்பாக திருக்கோவில்.கவியுவன், கோ.றஞ்சகுமார் போன்றோரிடமிருந்து சிறுகதைகள் பேசும் படியாக வரவில்லை. கோ.றஞ்சகுமாரின் 'மோகவாசல்' தொகுப்பு மீள் பிரசுரம் பெற்றிருந்தாலும் அதில் அவரின் தொடர்ச்சியான வளர்ச்சியைத் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

அதற்காக வேறு யாரும் எழுதவில்லை என்பதல்ல. சிறுகதைகளை கனதியாக எழுதுகிற பலரும் இருக்கிறார்கள் தான்.

தமிழ்க் கதைஞர்வட்டம் காலாண்டுகளில் வெளிவந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து சிறப்புச் செய்வதும், ஞானம் சஞ்சிகையூடாக சிறுகதைப் போட்டிகள் நடாத்தப் பட்டும் வருவது நல்ல பயனைத் தந்துள்ளதை மறுக்க முடியாது. இங்கிலாந்திலிருந்து 'பூபாளராகங்கள்' நிர்வாகிகளால் வருடா வருடம் நடத்தப்பட்ட சிறுகதைகள் பலவற்றைச் சொல்லி நின்றன. 'புதினம்' பத்திரிகையினால் நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் அதிகமாக நல்ல சிறுகதைகளே வந்து பரிசுக்குழுவினரை வியக்கவும் வைத்தது.

அலை பிறகு சிறுகதைகளுக்குப் பிறகு நல்ல சஞ்சிகையாக நாம் பார்த்த 'மூன்றாவது மனிதன்' இதழ் கணிசமான சிறுகதைகளைத் தந்தது எனலாம்.

சிரித்திரன், மல்லிகை, தீர்த்தக்கரை, புதுசு, நந்தலாலா, தாயகம், நான், செம்பருத்தி, ரோஜாமலர், விடிவு, துயரி, சரிநிகர், ஓலை, அகல், பெண், சிறகுகள், போது, சமாதானம், கீறல், கொழுந்து, நதி, விவேகி, கலைச்செல்வி, கலைமுகம், கிருதயுகம், பாரதி(கி.மா), கதிரவன், பூர ணி, மருதம், மறுமலர்ச்சி, கண், கலைக்குரிசில், மாற்றம், வசந்தம், புத்தொளி, யாழ், முத்தூர் முரசு, தாகம், கோணைத்தென்றல், தாரகை, வெளிச்சம், பூவரசு, படிகள், ஜீவநதி, கிருதயுகம், அம்பலம், புதிய தரிசனம், அகிலம், இந்துமதி, குருதிமலர், இருக்கிறம், பூரணி, மலைமுரசு, மலைப்பொறி, செய்தி, சாரல், அமுதம், அல்லி, துடிப்பு, வியூகம், நதி, சுடர், தோழி, உதயம், உள்ளம், கனவு, செங்கதிர், கிழக்கொளி, குமரன், திருப்பம், திசை புதிது, பூங்காவனம், பெருவெளி, புதுமை இலக்கியம் ,மறுகா, மலர், நவரோஜா, கலைமுகம், முரசொலி, ஞானம், நங்கூரம், சமர், வாகை, அக்னி, தடம், சிலம்பொலி, தொடர்பு, மானச தீபம், கொழுந்து, அன்னை, தேனி, இலங்கை விகடன், நாற்று, சிறகுகள், அங்குசம், தாய்மொழி, தோழன், ஆதவன் எழுகிறான், கலசம், கலைமுரசு, மறுமலர்ச்சி, குன்றின் குரல், குரல், மேகம், வசந்தம் ,அஞ்சலி , சுடர், ஏகலைவன், திசைபுதிது, புதிய உலகம், பிரியநிலா, தொடர்பு, தொன்டன், களம், தடாகம், பாரதி(கே.கணேஷ்) மின்விழி, சமாதானம், கலாவல்லி, இதயம், இளம்பிறை, உள்ளம், இலக்கு, வயல், குமரன்,தூண்டி,தேனருவி,மாணிக்கம் இப்படிப் பல சஞ்சிகைகளும், தினகரன், வீரகேசரி, தினக்குரல், தினச்சுடர், சங்கமம், ஈழநாடு, ஈழமுரசு. நமது ஈழநாடு, ஈழநாதம் , உதயன், சஞ்சீவி, திசை, ஈழமணி, ஆதவன், ஈழகேசரி, தினச்சுடர், தினமுரசு, சங்கமம், ஜோதி, மித்திரன் வாரமலர், சுதந்திரன் எனப் பல பத்திரிகைககளும் சிறுகதைகளை பிரசுரித்து வளம் தந்தன எனலாம்.

புலம்பெயர் சஞ்சிகைகளாக அ.ஆ.இ, ஈழகேசரி, அம்மா, கமலம், கலப்பை, ஆதவன் எக்ஸில், காலம், மண்வாசம், நான்காவது பரிமாணம், உயிர்நிழல், உயிர்மெய், தமிழ் உலகம், தமிழர் தகவல், அலை ஓசை, மண், காகம், கற்பகம், மேகம், இனி, கலைவிளக்கு, கலைஓசை, இலண்டன் , சுடரொளி புலம், தேடல், இனி, கற்பகம், கலைவிளக்கு, கமலம், இளஞ்சூரியன், பாலம், மனம் பேசுது,நாழிகை, இலண்டன் முரசு, தமிழோசை , கண், பூவரசு, மனம் பேசுது, நாழிகை, அக்னிக்குஞ்சு, மரபு, அவுஸ்திரேலியமுரசு, தமிழ் உலகம் (அவுஸ்திரேலியா), உதயம், தமிழருவி, கலப்பை, தேடல், தமிழோசை, சுவடுகள், மௌனம், ஆதவன், சுமைகள், ஓசை, காற்றுவெளி, கதலி, தமிழ்உலகம், கண், இளைஞன், ஆனந்தி, -பத்திரிகைகளாக புதினம், தாய்வீடு, வடலி, தமிழர் செந்தாமரை, நிருபம், ஈழமுரசு,, பாரிஸ்முரசு, நிலவரம், தமிழன் வழிகாட்டி, உதயன், ஈழநாடு (பாரிஸ்,கனடா)

கூடவே,

பிரதேச மட்டத்திலான இலக்கிய-சாகித்திய விழா மலர்கள், கல்லூரி-பாடசாலை-பல்கலைக்கழக விழா மலர்கள், தனியான- கழக தொகுப்புக்கள் என வெளி வந்த சிறுகதைகள் அதிகம் பேசின எனலாம். அண்ணளவாக ஆயிரக்கணக்கில் வெளிவந்தாலும் அரசியல், இனமுரண்பாடுகளினால் பலரிடம் சென்று சேர வாய்ப்பில்லாமல் இருந்திருக்கலாம். வீரகேசரி பவளவிழா சிறுகதக் களஞ்சியம் தொகுதியில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து தொகுத்துள்ளது அந்த நிறுவனத்தின் இலக்கிய பாரம்பரியத்தின் தொடர்ச்சியின் நீட்சியாகவே கருத இடமுண்டு.

தனிமனித துயரம், அரசியல் சித்தாந்தம், இடபெயர்வு, இனநெருக்கடி, வறுமை, காதல், வர்க்க முரண்பாடு, சீதனக் கொடுமை எனப் பலவற்றை அழகாகவும் ஆணித்தரமாகவும் சொன்ன சிறுகதைகள் ஏராளம்.

இருள்வெளி, பத்மநாப ஐயர் தொகுத்த தொகுப்புக்கள், தேனகம், இளந்தளிர், விடுதலைபுலிகள் தொகுத்த முத்தமிழ் விழா மலர்கள், புலிகளின் குரல் வானொலியினர் தொகுத்த தொகுத்த மலர் இப்படி பலதையும் சொல்லலாம். எல்லாவற்றையும் ஒரு சேர பார்த்து இதுவரை நல்ல விமர்சனத்தை வைக்கவில்லை. இதுவே பல அசௌகரியங்களை நமக்கு ஏற்படுத்தி இருக்கிறது.

திருகோணமலையில் ஈழத்து இலக்கியச் சோலை, கோணைத்தென்றல், அம்மா பதிப்பகம், எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், கல்கின்னை தமிழ் மன்றம் போன்றனவும் கணிசமான நூல்களை வெளியிட்டுள்ளன

புலம் பெயர்ந்த எழுத்தாளர்களில் பொ.கருணாகரமூர்த்தி, விமல் குழந்தைவேல், ராஜேஸ்வரி.பாலசுப்பிரமணியம், ஷோபா சக்தி, சுமதிரூபன், அ.முத்துலிங்கம், இரவி.அருணாசலம், சிறிதரன், ரமணீதரன்(சித்தாந்த சேகுவரா), சார்ல்ஸ் போன்றவர்களின் சிறுகதைகள் அதிகம் பேசப்பட்டன. எனினும் 'மண்' சிவராஜா, இந்துமகேஷ், வண்ணைதெய்வம், தேவகாந்தன், எம்,ரி.செல்வராஜா, கல்லாறு.சதீஷ், தமிழ்ப்பிரியா, கவிதா(நோர்வே), களவாஞ்சிக்குடி.யோகன், பாடும்மீன்.சிறீஸ்கந்தராஜா, கி.செ.துரை, பாரதிபாலன், உதயணன், புவனன், லெ.முருகபூபதி, அருண்.விஜயராணி, குரு அரவிந்தன், வ.ஐ.ச.ஜெயபாலன், மா.கி.கிரிஸ்டியன், த.சு.மணியம், கௌசல்யா.சொர்ணலிங்கம், பாமா.ராஜகோபால், சந்திரபோஸ்,சாந்தினி.வரதராஜன், ம.தி.சாந்தன், அகில், வி.ரி.இளங்கோவன், ஈழத்துச்சிவானந்தன், உதயணன், இரா.சம்பந்தன், சி.ஜெயபாரதன், பாரதி பாலன், பாரதி, சரோவர்ணன், சிவராஜா(ஜேர்மனி, ஹேமா, ராகினி.பாஸ்கரன், கே.எஸ்.சுதாகர், பொன்.குலேந்திரன், பொன்.புத்திரசிகாமனி, இளைய அப்துல்லா, ரமேஷ் சிவரூபன், நவஜோதி. யோகரத்தினம், இரா.தணிகாசலம், ந.கிருஷ்ணசிங்கம் ,க.செபரத்தினம், கோவிலூர்.செல்வராஜன், மாதுமை, லெ.முருகபூபதி, சாரங்கா, விக்கி.நவரத்தினம், டானியல்ஜீவா, சந்திரா.ரவீந்திரன், காரையூரான், ஜீவகுமாரன், பற்றிமாகரன், சிவலிங்கம்.சிவபாலன், கீர்த்தி, பசுபதிராஜா, சுமதி.ரூபன், மாத்தளை.சோமு, ஆவூரான், சக்கரவத்தி, சந்திரவதனா.செல்வகுமாரன், திருமவளவன், இளைய அப்துல்லா, வ.ந.கிரிதரன், முல்லையூரான், சாந்தி.ரமேஷ் வவுனியன், கந்தவனம், சிறிரஞ்சனி ,அ.கந்தசாமி, விக்னா.பாகியநாதன் போன்ற பலரின் சிறுகதைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சி.பன்னீர்ச்செல்வம், காசி.ஆனந்தன், பரிபூரணன், சசிபாரதி, பாலு மகேந்திரா போன்று பலர் தமிழகத்திலும் வாழ்பவர்கள். செந்தூரன் அமரராகிவிட்டார். திருகோணமலையைச் சேர்ந்த சிவராமலிங்கம் என்று அறியப்பட்ட தருமு சிவராம் (பிரமிள் )தமிழகத்தில் வாழ்ந்து மறைந்துவிட்டாலும் இன்றுவரை அவர் ஆற்றிய பங்கு பேசப்படுகிறது. வேலூர் சிறையில் இருந்தபடி எழுதும் ஈழத்து எழுத்தாளரான ம.தி.சாந்தன் நல்ல கற்பனை வளம் கொண்டவர். திவிர எழுத்தின் பரிமாணங்களை சிறுகதைகளாகியுள்ளார். இவரது இரண்டு நூல்கள் தமிழகத்தில் வெளிவந்துள்ளன.

தன் வாழ் நாளில் ஒரு தொகுதி கூட போட முடியாமல் இறந்த எழுத்தாளர்களின் கதைகளைத் தேடி எடுத்து தொகுப்பாக்க புரவலர்கள் முன் வர வேண்டும். வறுமையில் வாடும் வாழும் எழுத்தாளர்களின் எழுத்துகள் நூலுருப் பெறுவதன் மூலம் சிறுகதைகளின் பரிமாணங்களை புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு கதைகளிலும் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிற எமது கலை, கலாச்சார, பண்பாட்டுக் கோலங்களையும் அறிய முடியும்.

கதைக்களம், பாத்திரத் தேர்ந்தெடுப்பு, மொழியின் ஆளுமை வளம் சற்று தூக்கலாகவே கதைகளில் தென்படுவதை உணரலாம். 83இன் பின்னரான சிறுகதை எழுத்தாளர்களின் வருகை அபரிமிதமானதாகவே உள்ளது. வாய்ப்பும் அவர்களுக்கு அமைந்திருக்கிறது.

மென்போக்குக் கொண்ட கதையாளர்களாக நாம் நினைத்திருக்கும் இலங்கையர்கோன், சம்பந்தன், சி.வைத்திலிங்கம் இவர்களுக்குப் பிற்பாடு கல்வியாளர்களாக முகிழ்த்த பவானி.ஆழ்வாப்பிள்ளை, செம்பியன்.செல்வன், செ.யோகநாதன், நவசோதி, செங்கைஆழியான், யோ.பெனடிக்பாலன், சொக்கன் என்று பலரைப் பட்டியல் இடலாம். பிறகு சாதி, மனித முரண்பாடுகள், வர்க்கம் சார்ந்து எழுத முற்பட்ட டானியல் ,என்.கே.ரகுநாதன் (கனடாவில் வாழ்கிறார்), டொமினிக் ஜீவா, அ.செ.மு, கே.கணேஷ், என்.எஸ்.எம்.ராமையா, தெணியான், அகஸ்தியர், இ.நாகராஜன், தையிட்டி.ராஜதுரை, உமா வரதராஜன், எம்.ஏ.நுஃமான், துறையூரான், செ.குணரத்தினம், ந.பாலேஸ்வரி, ஞானரதன் ,எச்.எஃப்.ரிஸ்னா, து.வைத்திலிங்கம், நந்தி, சொக்கன், அ.யேசுராஜா, டானியல்.அன்ரனி, மதிவாணன் (ரத்தினசபாபதி) வை.அஹ்மத், நந்தினி.சேவியர், உதயச் செல்வன், யாழ்நிலா,சி.வி.வேலுப்பிள்ளை, இளையவன், சுதாராஜ், இளங்கீரன், த.கலாமணி, லறினாஅப்துல்ஹக் தெளிவத்தை. ஜோசேப், சசிபாரதி, தாவையூர்.காண்டீபன், தாட்சாயினி, கமலினி சிவநாதன்,உதயணன், பி.ரவிவர்மன், சிவனு.மனோகரன், இரா.நித்தியானந்தன்,வெலிகம.ரிம்சா முகமட், த.அஜந்தகுமார், தாளையடி.சபாரத்தினம், தேவி.பரமலிங்கம், திக்வெல்லை.கமால், கே.ஆர்.டேவிட்,செந்தூரன்,மல்லிகை.சி.குமார், மலரன்பன், மு.நித்தியானந்தன், கே.கோவிந்தராஜ், பரிபூரணன், நூரளை.சண்முகநாதன், நயீமா.சித்தீக், பித்தன், இளங்கீரன், கலைவாதி.கலீல், ஜுன்னைதா.செரிஃப், அனல்,அண்ணல்,நிஃமத், நீள்கரை நம்பி, புண்ணீயாமீன் ,சம்ஸ், யூ.எஸ்.தாவுத், வேதாந்தி, பாலரஞ்சனி சர்மா,ஒட்டமாவடி.அரபாத், ஒலுவில்.அமுதன், புதுமை லோலன், மருதூர் வாணன், எம்.எஸ்.அமானுல்லாஎம்.கே.முருகானந்தன், மட்டுநகர்.முத்தழகு, திமிலைத் துமிலன்,யாழ்நங்கை, கோகிலாமகேந்திரன், தேவன்.(யாழ்ப்பாணம்), கவிதா, புதுமைப்பிரியை, மண்டூர்.அசோகா, குறமகள், மு.சிவலிங்கம், அப்பச்சி.மகாலிங்கம், சு.வே, அன்புமணி, கே.எஸ்.ஆனந்தன்,கே.விஜயன்,ஆரையம்பதி. நவம், திருமலை.சுந்தா, புத்தொளி, கே.வி.நடராஜன், மு.பொன்னம்பலம், ஜெபம்பவதாரினி, கோப்பாய்.சிவம், வளவை.வளவன், சு.மகேந்திரன், மதுபாலன், வ.அ.இராசரத்தினம், வெற்றிவேல்.வினாயகமூர்த்தி, காவலூர்.இராஜதுரை, குந்தவை, உடுவில் அரவிந்தன், மீசாலை கமலா, நெல்லை.க.பேரன், மன்டைதீவு. கலைச்செல்வி, ஏழாலை. ஜனகமகள் சிவஞானம், கலைலங்கா.இராசையா, மருதூர் வாணன், சோமகாந்தன், கெக்கிராவை.சஹானா, ச.முருகானந்தன், கே.வி.நடராஜன், ந.பாலேஸ்வரி, கனக.செந்திநாதன், ராணி.சீதரன், நகுலன், மா.பாலசிங்கம், மட்டுவில்.ஞானகுமாரன் ,மன்னார்.அமுதன், மருத மைந்தன், மருதூர்.ஏ.மஜீத், மாவைவரோதயன், புனிதகலா ஜெயராஜ், ரூபராணி ஜோசெப், பிரமீளா, கார்த்திகா, நீர்கொழும்பூர்.முத்துலிங்கம், அருள்.செல்வநாயகம், அஸ்ரப் சிகாப்டீன்,கமலாதேவி அரவிந்தன், முகில்வாணன், மருதூர்க்கொத்தன் த.மலர்ச்செல்வன், புண்ணீயாமீன், பொ.சன்முகநாதன், ஆரையம்பதி.தங்கராஜா, சந்திரகாந்தாமுருகானந்தன்,அ.ந.கந்தசாமி, வரதர், ஐ.சாந்தன், ஏ.பி.வி.கோமஸ், குப்பிளான்.சண்முகம், சட்டநாதன், யோகேஸ்வரி சிவப்பிரகாசம், கமலினி, யோகா. யோகேந்திரன் என்று பலரும் அடங்குவர். நல்ல கதைகளைத் தந்த வடகோவை.வரதராஜன், சௌமினி போன்றோர் எழுதாமல் இருப்பதும்,தமது சிறுகதைகளை தொகுப்பாகத் தராமல் இருப்பதும் நமது துரதிஷ்டமே. ஒரு கதை மட்டும் எழுதியவர்களும் உண்டு. கணிசமாதும், காத்திரமானதுமான கதைகளை சண்முகம் சிவலிங்கம் தந்திருந்தாலும் கவிஞராகவே தெரிந்திருக்கிறார். அந் நாட்களின் ஆலயப் பிரவேச போராட்டங்கள் எழுத்தாளர்களின் எழுத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். அ.ந.கந்தசாமி நல்ல உதாரணம். புதியவர்களில் ரிஷான் ஷரிஃப், இப்னுஅஸ்மத் போன்றோர் தமிழுக்கு மொழிபெயர்ப்பு சிறுகதைகளையும் தந்துள்ளனர்.இன்னும் பலர் விடுபட்டிருக்கலாம்

எஸ்.பொ. தனித்தே நின்றார்.

டொமினிக் ஜீவா சஞ்சிகையாளராகப் பலருக்குத் தெரிந்திதாலும் பாதுகை போன்ற தொகுப்புகள் ஊடாக சிறுகதையாளர் என நம்மை வியக்க வைத்துள்ளார்.

வடக்கு கிழக்கு மக்களின் அவலத்தை விடவும் அதிகமான சுமைகளை சுமந்த மக்களின் துன்பியலை எழுதியவர்கள் பலர்.

ஈழத்தில் தொகுக்கப்பட்ட தொகுப்புக்களில் கலை ஒளி முத்தையாபிள்ளை ஞாபகார்த்த போட்டிச் சிறுகதைகளின் தொகுப்பு, அகஸ்தியர் நினைவுச் சிறுகதைப் போட்டிச் சிறுகதைகளின் (2001) தொகுப்பு, செல்வகுமார் தொகுத்து மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்ட இரு தொகுதிகள், செங்கை ஆழியான் தொகுத்த மறுமலர்ச்சி சிறுகதைகள், ஈழநாடு சிறுகதைகள், சுதந்திரன் சிறுகதைகள், மல்லிகைச் சிறுகதைகள், ஞானம் போட்டிச் சிறுகதைகள் மலையகச் சிறுகதைகளின் தொகுப்பு இப்படிப் பலதை உதாரணம் காட்டலாம்.

இலங்கைக் கலைகழகம் 1998 இல் வெளியிட்ட 'சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள்' நல்லதொரு தொகுப்பு. செங்கைஆழியான் அண்மையில் தொகுத்த 'முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள் (2010) நல்லதொரு தொகுப்பாகும்.

செ.யோகநாதன் தொகுத்த இரண்டு தொகுப்புகள் (வெள்ளிப் பாதரசம், தோட்டக்காட்டினிலே) எஸ்.பொ. தொகுத்த 'பனியும் பனையும் நல்ல தொகுப்பாக இன்றும் பேசப் படுகின்றன. அண்மையில் ஜீவகுமாரன் தொகுப்பில் 'முகங்கள்' (2011)தொகுப்பு வந்துள்ளது. அதன் இரண்டாம் பாகத்துக்குரிய தொகுதியும் தயாராகிறதாகவும் அறியக் கிடக்கிறது.

மு.நித்தியானந்தன் வைகறை வெளியிட்டகத்தின்(1980) மூலம் மலையக எழுத்தாளர்களின் கதைத் தொகுப்பை வெளி யிட்டிருந்தார். மாத்தளை தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் 80 களில் 'தோட்டக் காட்டினிலே' தொகுப்பையும், ஐரோப்பிய தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் 89இல் 'தேசம் தாண்டிய நதிகள்' போன்ற தொகுப்புகளும், நெதர்லாந்திலிருந்து வெளிவந்த அ.ஆ.இ தொகுத்த (1993) சிறுகதைகளும், கனடாவிலிருந்த கே.நவம் தொகுத்த 'உள்ளும் புறமும்' தொகுப்பும்(1991) கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் வெளியிட்ட 'அரும்பு' (2000)தொகுப்பும் வன்னியில் கப்டன். வானதி வெளியீடுகளும் வீரகேசரி பவள விழா சிறுகதைக் களஞ்சியம் தொகுப்பும், இரத்தின வேலோன் தொகுத்த புலோலியூர் சொல்லும் கதைகள் (2002) தொகுப்பும், துரைவி வெளியீடுகளும் (1997) எமக்குத் தந்த கதைகளை சற்றும் குறைத்து மதிப்பிட முடியாது.( துரைவியின் மறைவு ஈழத்து எழுத்தாளர்களுக்கு பாரிய இழப்பாகும்)

கலைச்செல்வி. சிற்பி தொகுத்த ஈழத்துச் சிறுகதைகள்-(1958) தொகுப்பையும் மறக்க முடியாது. மன உணர்வுகளைத் தட்டி எழுப்பும் வகையில் அமைந்த கதைகள் அடங்கிய தொகுதியாகும். ஆங்காங்கே நண்பர்கள் இணைந்தும் தனித்தும் (லெ.முருகபூபதி, ஓ.கே.குணநாதன், புரட்சிபாலன், புண்ணியாமீன் எனப் பலர்) சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இவற்றை தொகுத்து நோக்கின் ஈழத்தின் சிறுகதைகளின் தன்மை பற்றி உணர முடியும்.

கதைக்களம், கதைக்கரு, பாத்திரச் சேர்க்கை சிறுகதையைத் தீர்மானிக்கின்றன. அளவில் அல்லது பக்கங்களின் வரையறை இல்லை. எனினும் பொதுவான சிறுகதைப் பண்புகளைக் கொண்டிருப்பின் வாசகரின் கணிப்பைப் பெறும்.

இங்குள்ள பிரச்சனை என்னவெனில் விமர்சகர்களின் பார்வையில் படாதவைகள் தரம் பிரிக்கப் படமாட்டாதா என்பதே பலரின் வருத்தமுமாகும். எமது ஈழத்தின் காட்சி மாற்றம் காலச்சுவடு, உயிர்மை, தீராநதி, குமுதம், கணையாழி, ஆனந்தவிகடன், யுகமாயினி, உயிரோசை, வல்லினம், செம்பருத்தி, இனிய நந்தவனம் என நீண்ட வரிசை கொண்ட தமிழக, மலேசிய இதழ்கள் நமது சிறுகதைகளை பிரசுரித்து தமக்கும் நமக்குமான இலக்கியப் பரிவர்த்தனையை மேற்கொள்கின்றன. ஒரு வழிப் பாதையூடாக தமிழகத்தில் கால் ஊன்ற சிரமப்பட்ட, அடைப்புக் குறி தேவை எனவும் விமர்சிக்கப்பட்ட நம்மவரின் கதைகள் இலகுவாக உலா வருவதும் எதிர்காலத்தில் நல்ல நம்பிக்கையை தருவதாகவும் உணர்கிறோம். புதியவர்களை மழுங்கடிக்கும் முயற்சியும் இடம் பெறக்கூடாது.



தற்போது கவிதை போல சிறுகதைகள் எழுதுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகம். இழப்புகளை அதிகம் சந்திக்கிறார்கள்(காதல் உட்பட). படித்த மலையக வாலிபர்களின் வருகை அவர்களின் பிரச்சினைகளை லாவகமாக சொல்லி பலரிடம் கொண்டு செல்கிறார்கள். புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னியில் பல சிறுகதைகள் வெளி வந்தன. தாமரைச் செல்வி, முல்லைக் கோணேஸ், இணுவையூர். சிதம்பர. திருச்செந்திநாதன், ஆதிலட்சுமி. சிவகுமார், மலைமகள், மலரன்னை எனப் பலர் குறிப்பிடத் தக்கவர்கள்.

வெளிச்சம் சஞ்சிகை கணிசமான பங்களிப்பைச் செய்திருந்தது. வெளிச்சம் சிறுகதைகளின் தொகுப்பு (1996)தமிழ்நாட்டிலும் மீள்பிரசுரம் கண்டது. அதைப் போலவே ஈழத்து இலக்கியத்தின் பால் அதிக அக்கறை கொண்ட கலாச்சார உத்தியோகத்தர்களின் முன்னெடுப்புகளால் மாவட்ட பிரதேச சபைகள், வடக்கு கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத் துறை அமைச்சு, மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், யாழ் இலக்கியவட்டம், தேசிய கலை இலக்கியப் பேரவை, முற்போக்கு கலை இலக்கியப்பேரவை என பல அமைப்புகள் சிறுகதை ஆர்வலர்களின் ஆவலைப் பூர்த்தி செய்து வருகின்றனர். அவுஸ்திரேலியா/விக்டோரியா இலங்கைத் தமிழச் சங்கம் (1996) வெளியிட்ட 'புலம்பெயர்ந்த பூக்கள்' போட்டிச் சிறுகதைகள் அடங்கிய தொகுதியில் பலரும் எழுதியுள்ளனர். ஓசை மனோ, கி.பி.அரவிந்தன் போன்றோரும் சிறுகதைகளை தேர்தெடுத்து தொகுப்பதில் ஆர்வம் காட்டியுள்ளனர். இவர்கள் தொகுத்த 'மகாஜனா கதைகள், பாரிஸ் கதைகள் சிறப்பிடம் பெறுகின்றன.

நம்மவர்கள் இயக்கும் இணையத்தளங்களுடன் தமிழக, மலேசிய, சிங்கப்பூர் தமிழர்கள் நடாத்தும் இணைய பக்கங்களில் நம்மவர்களின் கதைகள் கனதியாக வந்து கொண்டிருக்கின்றன. பிடுங்கி எறியப்பட் ட வேர்களின் சுவாசத்தை நுகர்ந்தபடி காதல், சோகம், அரசியல், இனமுரண்பாடுகள் எனப் பல கருக்களுடன் வாசகரைக் கவரும் வண்ணம் எழுதுவது கண்கூடு. பதிவுகள், தமிழ்விசை, திண்ணை, தமிழமுதம், தமிழ் ஓதர்ஸ், தமிழ்வெளி, தமிழ் மணம், தமிழ்த்தோட்டம், ஈழநேசன் எனப் பல இணையத் தளங்கள் கதைகளைத் தாங்கி வருகின்றன.

உதய தாரகையின் ஆசிரியர் ஆர்னோல்ட்.சதாசிவம்பிள்ளையின் (1875) சிறுகதைகளுடன் ஈழத்துச் சிறுகதை முயற்சிகள் ஆரம்பித்தன எனக் கொண்டாலும் இலங்கையர்கோன் போன்றோரே தொடர்ச்சியாக எழுதி பலரைத் திரும்பிப் பார்க்க வைத்தனர் என்பர் அறிஞர்கள். அவர்களின் கல்வியும் அக,புற அறிவு ஜீவிகளின் தொடர்புமே எழுத வைத்தது. தற்போது போல எழுத்தில் தீவிரம் இல்லை. நவீன பரிச்சயமும் இல்லாததினால் தங்களை வளர்த்துக் கொள்ளும் வட்டம் சிறியதாகவே இருந்தது.

காவலூர்.ஜெகநாதன், தமிழ்ப்ரியா, தாமரைச் செல்வி, வடகோவை வரதராஜன், ஐ.சாந்தன், செங்கை ஆழியான், செ.யோகநாதன், சோ.இராமேஸ்வரன், தி.ஞானசேகரன், தெளிவத்தை.ஜோசேப் அதிக சிறுகதைகளை எழுதுள்ளனர்.

சோபாஷக்தி, விமல்.குழந்தைவேல், பொ.கருணாகரமூர்த்தி, இராஜேஸ்வரி.பாலசுப்ரமணியம், இரவி.அருணாசலம், குமார்.மூர்த்தி, தேவகாந்தன் புலம்பெயர் வாழ்வியல் பிறழ்வுகள், சமூக சிந்தனை இன்னோரன்ன பிற சம்பவங்களை கருவாகக் கொண்டு எழுதுபவர்கள். அகில் சில போட்டி கதைகள் எழுதி உள்ளார். லெ.முருகபூபதி, வ.ந.கிரிதரன், களவாஞ்சிகுடி.யோகன் போன்றோர் வாசகர் மனதைத் தொடும் படி எழுதி வருகின்றனர். இப்படி பலரை உதாரணம் காட்டலாம்.

நிறைவாக,

ஈழத்துக் கவிதைகள் போல சிறுகதைகளும் சிறந்த முறையில் வளர்ந்து வருவது கண்கூடு. ஈழத்துச் சிறுகதைகளை தேர்ந்தெடுத்து முழுமையான தொகுப்பாக்கும் பட்சத்திலும், அவற்றை பிற மொழிகளில் மொழி பெயர்ப்பதன் ஊடாகவும் புற வெளிச்சங்களையும் உள்வாங்க முடியும். திரு.பத்மநாப ஐயர், பேராசிரியர். செல்வா.கனகநாயகம் போன்றோர் ஆத்மார்த்தமாக சில தொகுப்பு , மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபடுகிறர்கள். இது வரை இவை தான் ஈழத்து சிறுகதைகள் என சிலரை மட்டுமே குறிப்பிடுகின்ற தமிழக விமர்சகர்களைத் தொடவும் செய்யலாம். தனியே வரப்பெற்றோம் என்று போடுவதற்காக மட்டுமில்லாமல் காத்திரமான விமர்சனங்களுக்ககாவும் இரண்டு பிரதிகளை பெற இனிமேலாவது சஞ்சிகைகள், பத்திரிகைகள் முயலவேண்டும். இவை எதிர்காலத்தில் நல்ல பயனை நம்மவர்க்குப் பெற்றுத் தரும்

கூடவே,

நமக்கிடையேயான தடைகள் எதுவென உணர்ந்து அவற்றை உடைத்தபடி முன்னேற நமது படைப்பாளர்கள் நகரவேண்டும். அதுவே ஆரோக்கியமான தடத்தை பதிக்கும் என நம்பலாம்.

-முல்லைஅமுதன்-20.03.2011

குறிப்பு: இது ஒரு நீண்ட கட்டுரைக்கான ஆரம்ப முயற்சியே. கருத்து கூற விரும்புவர்கள் சர்ச்சைகளைத் தராமல் தாராளமாக ஆலோசனைகளை அறியத் தரலாம்.)

.

Saturday, 26 March 2011