Saturday 12 June 2010

இலக்கியப்பூக்கள்

ரஸஞானி

இங்கிலாந்தில் வருடாந்தம் ஈழத்து தமிழ் நூல்களின் கண்காட்சியை நடத்திவருபவரும் காற்றுவெளி என்னும் சஞ்சிகையை வெளியிடுபவருமான முல்லை அமுதன், தமிழ் உலகம் நன்றி கூறத்தக்க சிறந்த பணியொன்றை செய்துள்ளார். 370 பக்கங்களில் 44 மறைந்த ஈழத்தின் முன்னணி எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், அறிஞர்களைப்பற்றிய விரிவான
கட்டுரைகள் கொண்ட தொகுப்பு நூலை வெளியிட்டுள்ளார்.

சென்னை காந்தளகம் பதிப்பித்துள்ள இலக்கியப்பூக்கள் என்ற நூலையே முல்லை அமுதன் தொகுத்துள்ளார். மறைந்தவர்களைப்
பற்றிய ஆக்கங்களைத்தொகுக்கும்பொழுது ஏற்படும் சிரமங்கள் பல. குறிப்பாக அந்த அமரர்களின் ஒளிப்படங்களை தேடி
எடுப்பதும் பொருத்தமானவர்களுடன் தொடர்புகொண்டு ஆக்கங்களைப்பெறுவதும் சிரமசாத்தியம்தான். முல்லை அமுதனின் உழைப்பு பெருமதியானது. அது வீண்போகவில்லை.

ஈழத்து பூதந்தேவனார், ம.க.வேற்பிள்ளை, சிவபாதசுந்தரனார், திருஞானசம்பந்தப்பிள்ளை, மகாலிங்கசிவம், பண்டிதமணி சி.
கணபதிப்பிள்ளை, தனிநாயக அடிகள், புலவர் ஞானப்பிரகாசம், புலவர் தேவசகாயம்பிள்ளை, கனக செந்திநாதன், பஞ்சாட்சர சர்மா,
வ.இராசையா, பண்டிதர் வடிவேல், கிருஷ்ணா வைகுந்தவாசன், சிவ.விவேகானந்த முதலியார், சு.வேலுப்பிள்ளை,
அ.செ.முருகானந்தன், அ.ந.கந்தசாமி, வரதர், நந்தி, தில்லைச்சிவன், சொக்கன், புலவர் மிக்கேல்பிள்ளை, பேராசிரியர் கைலாசபதி,
யாழ்வாணன், ஏ.ஜே.கனகரட்ணா, அப்பச்சி மகாலிங்கம், மு.தளையசிங்கம், பிரமிள், செ.கதிர்காமநாதன், அங்கையன்
கைலாசநாதன், செ.யோகநாதன், செம்பியன் செல்வன், பேராசிரியர் அம்பலவாணர் சிவராசா, சிலோன் விஜயேந்திரன்,
நாவண்ணன், ராஜஸ்ரீகாந்தன், சு.வில்வரத்தினம், சி.புஸ்பராஜா, சிவலிங்கம் சிவபாலன், கணபதி கணேசன், முல்லையூரான், குமார்
மூர்த்தி, எஸ்போஸ் ஆகிய 44 அமரர்களின் பல முகங்களை நாம் இந்த நூலில் தரிசிக்கலாம். பலமும் பலவீனமும் கொண்ட
மனிதர்கள் படைப்பாளிகளாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் சாதனைகளும் சாதுரியங்களும் வாசகர்களுக்கு தம்மைத்தாமே
சுயவிமர்சனம் செய்துகொள்ளவும் தூண்டுகிறது.

தந்தை செல்வாவை காங்கேசன்துறையில் எதிர்த்துப்போட்டியிட்ட வைகுந்தவாசன் பின்னாளில் ஐ.நா. சபையில்
மின்னலெனத்தோன்றி முழங்கியதையும் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சந்தேகநபராக சிறைசென்று மீண்ட சிலோன்
விஜயேந்திரனின் நடிப்புலக பக்கங்களையும், அற்பாயுளில் மறைந்துபோன இலக்கியவாதிகளையும் காலை ஆகாரமாக
இடியப்பமும் வடையும் சுண்டலும் அடையும் ஒரேநேரத்தில் ரசித்து சுவைத்து உண்டு இனிப்பையே தனது தீராத
நேயாக்கிக்கொண்ட (நீரிழிவு) செம்பியன் செல்வனின் சுவாரஸ்யமான வாழ்வையும் இன்னும் சிலரின் வலிகளையும்
ஏமாற்றங்களையும் சொல்கிறது இந்த ஆவணம்.

அவர்களின் ஆற்றல் ஆளுமை வாசகர்களை நிச்சயம் வியக்கவைக்கும். விந்தையான இந்த மனிதர்களின் வாழ்வில்தான்
எத்தனை சோதனைகள்? சில பக்கங்களை படித்து முடித்ததும் அவர்களின் அந்த வாழ்விலிருந்து வெளியே வருவதற்கு சற்று
நேரமாகிறது.

இலக்கியப்பூக்களில் இடம்பெற்றிருக்கும் சிலரை பல எழுத்தாளர்கள் அறிந்திருக்கமாட்டார்கள். இந்த நூல் வாசகர்களுக்காக மாத்திரம் தொகுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. எழுத்தாளர்களும் அறிந்துகொள்ளவேண்டிய பல அரிய தகவல்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

தொகுப்பாசிரியர் முல்லையமுதன் தமது என்னுரையின் இறுதியில் இப்படிக்குறிப்பிடுகிறார்:- சக எழுத்தாளர்களை நேசிக்கின்ற பக்குவம் யாருக்கும் வந்ததாகத்தெரியவில்லை. வரலாறுகளைத் தேடுகின்ற தேடுதல் முயற்சியும் அரிதாகியே வருகின்றது. ஒரு சிலர் முனைப்புடன் செயல்பட்டு வந்தாலும் போதியதாக இல்லை. எனினும் தேடுவோம். தமிழால் இணைவோம்.

இலக்கியப்பூக்கள் பிரதிகளுக்கு:-

Mullai Amuthan
34. RED RIFFE ROAD.
PLAISTOW - LONDON - E 13 OJX

நன்றி: உதயம்
mullaiamuthan_03@hotmail.co.uk

****************************************

No comments:

Post a Comment