Saturday 12 June 2010

நாவற்குழி மண் தமிழீழத்திற்கு அளித்த மாபெரும் சொத்து பண்டிதர் சு.வே!.



- முல்லை அமுதன் -

தமிழீழத்திற்கான போராட்ட இக்கால கட்டத்திலே தமிழ் அறிஞர்களையும், அவர்களின் ஆக்கங்களையும் பேணிப் பாதுகாக்க வேண்டியது தமிழர்களான எங்களின் முக்கிய கடமையாகும். இதுவும் வித்தியாசமானதொரு போராட்டமே. இப்போராட்டத்தில் தற்போது நாம் இழந்து நிற்பது சு.வே. என்று செல்லமாக அழைக்கப்படும் நாவற்குழி மண் தந்த மாமனிதர் பண்டிதர் சு. வேலுப்பிள்ளை அவர்கள்.

2004ல் எனக்குத் தாயகத்திற்கு குடும்பமாகச் செல்லவேண்டிய அவசியமேற்பட்டது. அப்போது என்னால் மிகவும் மதிக்கப்பட்டவரும் எனக்கு மிகவும் மனதிற்கினிய எழுத்தாளரும் குடும்ப நண்பருமான சு.வேயின் இல்லத்திற்குச் சென்று அவருடன் அவர் சகோதரங்களையும் சந்திக்கும் அரும்வாய்ப்புக்கிடைத்தது. அப்போது சு.வே. அவர்களின் தளர்நிலையும், போராட்டசூழல் காரணமாக சொத்தழிவுகளுடன் அவரால் சேகரிக்கப்பட்ட விலைமதிப்பற்ற புத்தகங்களும் மழைக்கும் கறையானுக்கும் அழிந்து கிடந்தன. அவற்றில் இருந்து ஓரளவிற்கு பழுதடையாத நூல்களை தட்டி எடுத்து என்னிடம் வற்புறுத்தித்தந்தார். நோய் காரணமாக வடிவாகக் கதைக்க முடியவில்லை. அப்படியிருந்தும் தன்னால் முடிந்தவரை கதைத்தார். துக்கமிகுதியால் அழுதழுது கதைத்தார். அவரது கவலை முழுவதும் தனக்கு தமிழுக்கு இன்னும் தொண்டாற்ற முடியவில்லை என்பதே. அவரின்; நோய்த்தாக்கத்தால் அவரின் உச்சரிப்புகள் எமக்கு விளங்காத போது அவரது சகோதரர் மகேந்திரம் ஆசிரியர் அவர்கள் எமக்கு விளக்கம் கொடுத்தார். வாழ்கையில் பிரமச்சாரியத்தைக் கடைபிடித்த சு.வே அவர்களின் தேவைகளை அன்பே உருவான அவரது சகோதரி கவனித்துக் கொண்டிருந்தார். அன்று கனத்த மனத்துடன் திரும்பிய எமக்கு இன்று அவரின் இழப்பு (22.06.2007) மேலும் கனக்கவைக்கிறது.

தமிழர்களில் சு.வே. போன்ற பல எழுத்தாளர்களையும், புத்திஜீவிகளையும்,அறிஞர்களையும் போராட்டத்தினாலும், திட்டமிட்ட மருந்துத்தட்டுப்பாடு, உணவுப்பற்றாக்குறை, வறுமை, சுகாதாரச்சீர்கேடுகள் என்பவற்றால் காலத்திற்கு முன்பே இழந்து கொண்டிருக்கிறோம். இருக்கும் காலத்திலும் அவர்களின் வளர்ச்சிகள் ஏதோ ஒரு விதத்தில் மழுங்கடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கன்றது. ஏனையோர்களையும் சிந்திக்க இடமளிப்பதில்லை. தமிழர்களுக்கு இந்நிலையிலிருந்து எப்போது விடிவுகிடைக்குமோ?

04.05.1921ல் பிறந்த சு.வே. அவர்களின் இலக்கியபணி அளவிடமுடியாதது.; ஈழத்து உருவகக்கதையின் தந்தை என்று அனைவராலும் புகழப்பட்டார். ஈழத்தின் முன்னோடிச் சிறுகதை எழுத்தாளர்,உருவகக்கதை, கட்டுரை, நாடகம் ஆகிய இலக்கியத்துறைகளில் சிறந்து விளங்கினார். அத்தோடு தமிழ்ப்பண்டிதராகவும் இருந்த சு.வே. அவர்கள் பல பாடசாலைகளில் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். அவரிடம் கல்வி கற்றோர் பலர் தமிழில் மிகுந்த பற்றுள்ளவர்களாகவும் அறிவுப்பெட்டகங்களாகவும் திகழ்கின்றனர். நாவற்குழியில் தமிழில் திறமையான எந்த ஒரு மாணவனைக் கேட்டாலும் ஏதோ ஒரு வகையில் அவனது குருவாக சு.வே. திகழ்வார்.

திருநெல்வேலி வைவாசிரிய பயிற்சிக்கல்லூரி மாணவனான சு.வே. அவர்கள் 1942ல் பயிற்றப்பட்ட தமிழாசிரியரானார். இலங்கையின் பலபாகங்களிலும் அதாவது ஹற்றன், டிக்கோயா, சுன்னாகம், மானிப்பாய் போன்ற பிரதேசப்பாடசாலைகளில் 1946 முதல் 1981வரை தன் ஆசிரியப்பணியை மேற்கொண்டார். பின்பு தன் சொந்த ஊரான நாவற்குழி மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தார்.

நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த சு.வே. அவர்களின் திறமை உலகறியச் செய்தமையும் காலம் கடந்தேயாகும். சு.வே. யின் சிறுகதைகள் கொண்ட “பாற்காவடி” (2002) என்ற நூலில் அவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார். ‘இன்றைய இலக்கிய உலகினால் தொண்ணூறு விழுக்காடு மறக்கப்பட்டு, எங்கோ ஒரு மூலையிலே இருளில் கிடந்த என்னை மறுமலர்ச்சிச் சிறுகதைகள், ஈழகேசரிச் சிறுகதைகள் என்பவற்றினூடாக வெளிவரச்செய்த பெருமை தம்பி செங்கை ஆழியானிற்கே என்றும் மேலும் அவர் தன்னைப்பற்றிக் கூறும் போது “ சின்னஞ சிறிய எளிய மான் மனக்கோயிற் கொட்டிலில் இருந்து பல்லாண்டுகளுக்கு முன் தலைமேற்கொண்ட இந்தப் பாற்காவடியை கன்னித் தமிழ்த்தேவியின் திருக்கோவிற் சந்நிதியிலே, இலக்கிய ஆர்வலர்களான பக்தர்களின் திருமுன்னிலையில் இறக்கி வைத்துள்ளேன். என் பணி முடிந்துவிட்டது. சுபம்! இந்தப் பாற்காவடியே, எனக்கு இவ்வுலக வாழ்வின் எச்சங்கள், மிச்சங்கள்.வாரிசுகள்…. இவையே என் பெயர் விளங்க வந்த குழந்தைகள்.” இவ்வாறு தன் ஆதங்கத்தைத் தெரிவிக்கிறார்.

இவரது சிறுகதைகளை எடுத்துக்கொண்டால் ஈழகேசரியில் வெளியானவை,
1. கிடைக்காதபலன் - ஈழகேசரி 1943 (முதற் சிறுகதை)
2. மனித மிருகம்
3. புத்தனின் சுவடு
4. காலத்தின் தண்டனை
5. பாசம்
6. பிரேமை
7. மனநிழல்
8;. அன்புக்கறை
9. சிற்றன்னை
10.தோழன்

இவரது உருவகக்கதைகள் மறுமலர்ச்சி இதழ்களிலும் பல்வேறு ஊடகங்களிலும் வெளிவந்தவை,
1. மண்வாசனை
2. வெறி
3. பாரிசவாதம்
4. பூ
5. பாற்காவடி
6. அக்கினி
7. ஸ்ட்ரைக்
8. புகை
9. தகிப்பு
10. பெரியம்மா

கதைகள் தொகுப்பாக புத்த உருவில் வெளிவந்தமை

1. மண்வாசைன – சிறுகதைத்தொகுப்பு
2. பாற்காவடி - சிறுகதைத்தொகுப்பு
3. மணற்கோவில் - உருவகக் கதைத்தொகுப்பு
சு.வே. யின் கதைகள் வந்த ஏனைய நூல்கள்

1. ஈழகேசரிச் சிறுகதைகள்
2. மறுமலர்ச்சிச் சிறுகதைகள்

கல்வித்தினைக்களத்தில் பாடநூல் தொகுப்பாசிரியராகவும் சில காலம் பணிபுரிந்தார்.
1. சூழல்
2. சுற்றாடல் கல்வி
3. தமிழ்
4. தமிழ் மொழி

இவரது சிறுவர் இலக்கிய நூல்கள்-
1. சந்திரமதி
2. குகன்

இவரது பரிசு பெற்ற நாடகங்கள் மற்றும் வானொலி தொடர் நாடகங்கள்
1. வஞ்சி – ஓரங்க நாடகம் (1965) முதற்பரிசு பெற்றது.
2. எழிலரசி - முழுநீள நாடகம்(1966) முதற்பரிசு பெற்றது.
3. மண்வாசைன -இலங்கை வானொலியில்(1960)பரிசு பெற்றது.
4. ஒருமை நெறித்தெய்வம் -இலங்கை வானொலியின்பரி;சு(1968)
5. ஏட்டிலிருந்து - தொடர் நாடகம் 16 வாரம் (1964)
6. கிராமராச்சியம் -தொடர் நாடகம் 32 வாரம் (1964)
7. பொன்னாச்சிக்குளம் -தொடர் நாடகம் 97 வாரம் (1967-68)
8. நவயுகம் - தொடர் நாடகம் 12 வாரம் (1969)

இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகிய இலக்கிய உரைகள்
1. இலக்கியரசனை -32 வாரம் ஒலிபரப்பாகியது. (1965)
2. திருகுறட்சித்திரம் -36 வாரம் ஒலிபரப்பாகியது. (1968)
3. நாட்டுக்கு நல்லது -24 வாரம் ஒலிபரப்பாகியது. (1969)
சு.வே. அவர்கள் வாழும் போதே கூறுவது ‘தனது கதைகளை வாசித்துவிட்டு நீண்டதொரு பெருமூச்சு ஒரு பக்தனிடமிருந்து வருமாயின் அஃதொன்றே நான் மனநிறைவடையப் போதும் என் நெஞ்சு குளிர்வதற்கு நன்றும் தீதும் எனக்கு ஒன்றே’ என்பார்.. இவரின் கதைகளைத் தேடிப்படியுங்கள். அவரது ஆத்மா மனநிறைவடையும். படிப்பவர் மனமும் குளிரும்..

No comments:

Post a Comment