Saturday 12 June 2010

இலக்கியப் பூக்கள் -கவிஞர் மா.கி. கிறிஸ்ரியன்





இலக்கியப் பூக்களின் ஆழம் பொதுமையில் நிற்கின்றது. படைப்பாளியின் ஒற்றுமைக்கு அறைகூவல் விடுகின்றது. காலமென்னும் கடலில்க் கட்டப்பட்டிருக்கும் கலங்கரை தீபம். நமக்குத் தெரிந்ததையும், தெரியாததையும் அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது. சமுதாய பொருளியல் அரசியல் கண்ணோட்டஙகளோடு கூடிய மக்கள் இலக்கியங்களைப் படைத்த படைப்பிலக்கியக் களத்தில் மேலோராக விளங்கி வெற்றி பெற்ற அமரர்களாகியவர்களைப் பற்றிய கட்டுரைகள், இன்றிருக்கும் படைப்பாளிகள் படைத்து ‘இலக்கியப் பூக்கள்’ வழங்குகின்றது.

சமுதாய ஈடுபாட்டுடன் மண்ணையும், மக்களையும் நேசித்து வாழ்ந்த‌ தலைமுறை வாழ்வுக்கு வழி காட்டியவர்கள் வாழ்த்துக்களுக்கு உரியவர்கள்! வணங்கத்தக்கவர்கள்!! இதன் அடிப்படையில்த்தான் முருகையன் ஒரு கட்டுரையில் சொன்னார், ‘படைப்பாளிகள் கடவுளர் என்று’. சமுதாய மாற்றத்திற்கும், மாறுதல்களுக்கும், கலை இலக்கியக் களம், இலக்கிய வடிவங்களைத் தந்த தளத்தை தரிசித்து நின்று பிரபல்யம் பெற்ற முன்னோடிகளை, இலக்கிய கர்த்தாக்களை, ‘இலக்கியப் பூக்கள்’ விளம்பி நிற்கின்றது.

உண்மையான ஈடுபாட்டோடு ஈழத்தில் வாழ்ந்த உண்மையை வரவேற்றுள்ளதை இந்த நூலில் மதிப்பிடவும் முயன்றுள்ளேன். இக்கால கட்டத்திற்குத் தேவையான புதிய அணுகுதலோடு வெளிவந்துள்ளதும் பாராட்டத் தக்கனவாகும். செம்மையான அச்சுப் பதிப்பும், அழகும் நிறைந்துள்ள முகப்புத் தெறிப்பும், கட்டுரையாளர்களின் சாயல்ப் படங்களும் மிகப்பெரும் கவருதலை கச்சிதமாக கையாண்டுள்ளமை பாராட்டுக்குரியது.

‘காற்றுவெளி வெளியீடாக’ காந்தளகம் பதிப்பகத்தால் வெளிவந்துள்ளது. இந்த ‘இலக்கிலப் பூக்கள்’ பற்றிய திறனாய்வு செய்ய வேண்டியவர்கள் கட்டாயம் அதனை மேற்கொள்ள வேண்டும். தங்களுக்குச் சரியெனப் பட்டதை ஒளிவு மறைவின்றி தயங்காமல் கூறும் அறிவைக் கூறவேண்டும். இம்மேலோர் பற்றிய கட்டுரைகளை எழுதியவர்கள் சமகாலத்தோரே! இவற்றின் வளர்ச்சிக் கூற்றில் இனத்தின் எதிர்காலம், சுற்றாடல், கருத்தாடல், நாளைய நடையியல், தெறிப்புகள் கவனமாக கவனிக்கப்பட்ட படைப்பையும், படைப்பாளியையும், பார்வைக்குட்படுத்தப்பட்டு பதியப்பட்டுள்ளது. இந்த வகையிலும் முல்லை அமுதனைப் பாராட்டவேண்டும்.

உரையால், எழுத்தால், உயர் நோக்கால் தமிழ்ச் சமூகத்திற்கு முக்கியமாக இளைஞர்களுக்கு வழிகாடடிகளாக விளங்குபவர்கள், தெளிந்த நோக்குடைய எழுத்தாளர்களால் சிறந்தமைந்துள்ள இந்த ‘இலக்கியப் பூக்கள்’ முன்மாதிரியாகத் திகழ்கின்றது. முன்னோடி மேலோர்கள் பற்றிய கட்டுரை நல்ல நிலையில் உயிரோட்டம் உள்ள நடையும், வாசகர்களைத் தன்பால் ஈர்க்கின்ற வகையில்த் துலங்குகின்றது. தொகுப்பாசிரியர் முல்லைஅமுதனையும் இந்த இடத்தில்ப் பாராட்ட வேண்டியுள்ளது.

இவர் எழுத்துக்களும், தமிழ் நூல்க்காப்பக முயற்சியும், தமிழ் கூறும் நல்லுலகிற்கும், தலைமுறை தலைமுறைக்கும் தேடலுக்குரியனவாகும். 1980களில் கவிதைகளுடன் 12 நூல்களை எமக்களித்துள்ளார். பிரித்தானியாவுக்குப் புலம் பெயர்ந்த பின்னர் இவர் மூச்சான பேச்சும் எழுத்தும் பேணிக்காக்கப்பட வேண்டிய நூல்களை ஆவணப்படுத்துவதில் உள்ள ஈடுபாடும் கவனத்தில்க் கொள்ளத்தக்கனவாகும்.

இவரது நினைத்தவுடன் வெளிவரும் ‘காற்றுவெளி சஞ்சிகை’ தமிழர் வாழும் இடங்களெங்கும் தவழ்ந்து கொண்டிருக்கின்றது. இதன்கண் கலையிலக்கியப் பங்களிப்பு அளப்பரியதாகவே திகழ்கிறது. ‘இலக்கியப் பூக்கள்’ அடக்கியுள்ளவற்றைப்போல் பல நூல்கள் வந்துள்ளது. அந்த நூல்கள்பற்றிக் கருத்துச் சொல்லவேண்டும் என்று நான் நினைக்கிறேன். என் நினைப்பிற்கு இக்கட்டுரை இடந்தராது என்பதால் அந்த நினைப்பை அறுத்துக்கொள்கிறேன். இந்தக் கட்டுரையில் பொறுப்பற்ற முறையில் சுருக்கமாக சொல்வது அறிவுமல்ல, விமர்சனமுமல்ல, பாராட்டுக்குரிய மேலோரான முன்னோடிகள் பற்றி இனிப்பார்ப்போம்.

இக்கால கட்டத்தில் புலத்திலோர் மத்தியில் புதிதான தேடல் நோக்கு முகுள்வதைக் காணலாம். பலர் இலக்கியப் பூக்கள் போன்ற நூல்களைக் கையாண்டுள்ளார்கள். கலை இலக்கிய நாடகங்கள், சினிமா, நாட்டியம், ஓவியம், சிற்பம் போன்றவற்றிற்கு ஆற்றிய பணிகளை மறந்து போகாதவண்ணம், மறைந்துவிடாத வகையில் ஆடுவணப்படுத்தலுக்கு ஏற்றவகையில் ஈடுபட்டு வருவதையும் காண்கின்றோம். இவர்கள் எல்லாம் இணைத்துப் பிணைப்பது ஒன்றே ஒன்றுதான்.

அந்தப் பெரும் பேறான ‘மானிட நேயத்தை’ மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு தலைமுறைக்கு அப்பாலும் செல்ல வேண்டும் என்பதற்காக ஆறாவது விரலைப் பயன்படுத்தி பங்களிப்பைக் காத்திரமாக இக்காலகட்டத்தில்ச் செய்கின்றனர். தமிழீழ மக்கள் படும் துன்ப துயரங்கள், சாவுகள், அவலங்களுக்குள்ளும் சாதிக்கின்றனர். ‘இலக்கியப் பூக்கள்’ நூலில் இடம்பெற்றுள்ளவர்கள் மனிதனுக்கு தங்கள் பணியைச் செய்தவர்கள். மனிதனுக்கு அப்பாலும் எப்பாலும் ஒன்றுமில்லை! மனிதனுக்காகவே தங்கள் வாழ்நாளை, இலக்கியப் பங்களிப்பை ஆற்றியவர்கள்.

அத்தகைய நாற்பத்தி நான்கு இலக்கிய வாதிகளை இன்நூலில்க் காண்கின்றோம். இந்த அமர எழுத்தாளர்கள் அதன் முன்னோடித் தமிழ்ப்பெரும் புலவர் ஈழத்தின் கண் பூதந்தேவனார் சங்கநூலில் இடங்கொண்ட பாடல்களால் ஈழத்திற்குப் புகழ்சேர்த்த அந்தப் பெரும் புலவரோடு தொடங்கி, நாப்பத்தி நான்காவது கட்டுரை அவர்கள் அவனைச் சுட்டுக் கொண்டார்கள் என்ற கட்டுரையுடன், அடுத்த இரண்டாவது பகுதிக்குக் காத்திருக்க வைத்துள்ளார் முல்லைஅமுதன்.

‘இலக்கியப் பூக்கள்’ முன்னூற்று ஏழுபத்தொரு பக்கங்களைக் கொண்டு பக்குவமான தகவல்ப் பரப்புதலைக் கச்சிதமாக உள்ளடக்கியுள்ளது. வார்த்தைகள் பூப்போன்றன. அவற்றைத் தொடுக்கும் விதத்தில்த் தொடுத்தால் மதிப்புப்பெறும். அந்த நூலைப் பார்க்கும் வாசகர்கள், விமர்சகர்கள் அடுத்த பாகத்தை எதிர்பார்ப்பார்கள். அத்தகைய ஆர்வத்தைத் தூண்டிவிட்டிருக்கிறது.

முதற்பகுதி நாற்பத்தி நான்கு கட்டுரைகளை எழுதியவர்களின் நிழற்படங்களோடு அவர்கள் பற்றிய சிறு குறிப்புகளும் இடம்பெற்றுள்ளது. எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் விரிந்து, பரந்த வாழ்க்கைக்குரிய சகல அம்சங்களையும் உள்ளடக்கிய உயர்ந்த கண்ணோட்டத்துடன் இக்கட்டுரைகள் விளங்குகின்றது. சார்பு நிலைகொண்டு நிகழ்ந்த நிகழ்வுகளை கைக்கொள்ளாமல், தொகுப்பாசிரியர் கையாண்டுள்ளார். இதுபோன்ற நூல்களின் உள்ளடக்க முயற்சிக்குப் பதிலாக வெளிவேசக் கவர்ச்சி, சுயனலச் சுண்டுதல், தன்னலப்போக்கும், புகழாதிக்கம் செலுத்தி வெளிவந்தன எனக்கொள்ள அண்மையில் வெளிவந்த நூல்கள் உண்டு.

சந்தர்ப்பவாத வெளிவேசமிட்ட பாசாங்காகவே அவற்றறை நான் கவனித்திருந்தேன். இவற்றையெல்லாம் நீக்கும் சாலச்சிறப்பு நூலாக இலக்கியப் பூக்கள் வந்துள்ளதைக் காணலாம். இவ்வாறான அறிவார்ந்த பதிவாக்கல்த் துறையில் நம்மவரின் நாட்டம் அதிகம் செல்வதும், விரித்தி அடைவதும் கண்டு நம்மவர் பாராட்டுக்களைத் தந்து மதிப்பர். இலக்கியப் பூக்களில் இடம்பெற்ற படைப்புக் கடவுளரையும், படைத்தளித்த படைப்பாளிகளையும் நாம் இனிப் பார்ப்போம்.

1-மயிலங்கூடலூர் பி. ந‌டராசன் எழுதிய ஈழத்து முன்னோடி தமிழ்ப்பெரும புலவர் ஈழத்துப் பூதந்தேவனார், சங்ககாலத்தின் ஈழத்து முன்னவர் எம்மினத்தின் வரலாற்றின் கண்ணாடி.

2-மா.பா. மகாலிங்கம் சிவம் எழுதிய உரையாசிரியர் ம.க. வேற்பிள்ளை தமிழ் நாட்டில் பட்டம் பெற்ற யாழ்ப்பாணத்து முதல்ப்பட்டதாரி.

3- சைவப்பெரியார் சி. சிவபாதசுந்தரனார் நாவலர் என்றவுடன் எவ்வாறு ஆறுமுகநாவலரின் நினைவு வருகிறதோ, அவ்வாறு சிவபாதசுந்தரனார் நினைவும் வரும்.

4- பண்டிதர் ம.வெ. திருஞானசம்பந்தப்பிள்ளை உரையாசிரியர் என்றும், பிள்ளைப் புலவர் என்றும் போற்றப்பட்டவர்.

5-குருகவி ம.வெ. மகாலிங்கசிவம் கல்வியைப் போதிப்பதிலும், இலக்கண இலக்கியத்திலும், கவிதையிலும் புகழ்பெற்றவர்.

6-கா. சிவபாலன் எழுதிய தமிழ் மூதறிஞர் இலக்கியக் கலாநிதி பண்டிதமணி சி.கணவதிப்பிள்ளை, ஆறுமுகநாவலர் பெருமானின் நிகழ்காலச் சின்னமாக விளங்கியவர். பண்டிதமணி நாவலர் பெருமானுடைய தருமத்துள் மூழ்கியவர். மேலும் நாவலரின் கண்டணப் பரம்பரையின் கடைசித் தமிழ்மகன்.

7-திருமதி ஜெயா நடேசன் எழுதிய தவத்திரு தனிநாயக அடிகள் உலகமெல்லாம் தமிழ் வளர்க்கவும், ஆய்வுக்குட்படுத்தவும், தமிழுக்கு மகாநாடு தொடங்கியவர்.

8-திருமதி ஜெயமணி கனகரத்தினம் படைத்த வித்துவான், கவிமணி, கலைஞானி, புலவர் க.த. ஞானப்பிரகாசம் புகழையும், பெருமையையும், விரும்பாத இலைமறை காயாக வாழ்ந்த ஒரு மரபுக்கலைஞர் ஞானி.

9-தமிழ்வேள் இ.க. கந்தசாமியின் தூரிகை வரைந்தது ஈழத்து நாடக இலக்கிய பெரும்புலவர் தேவசகாயம் பிள்ளை.

10-வி. கந்தவனம் படைத்திருக்கும் கனக செந்திநாதன் நெடுதுயர்ந்த உருவம், நெற்றியில்த் திருநீறு, வடிவாக வாய்விட்டுச் சிரிக்கும் குணமுடையான், குடியிருந்த வீடு தமிழ் நூல்கள் சஞசிகைகள், படிக்கும் சஞசிகைகள் பைந்தமிழ்ச்செல்வி, அடி எடுத்து வைத்து நடைபயிலும் தமிழ்வீடு.

இப்படியே இனி முப்பத்து நான்கு இலக்கியப் பூக்களையும் தேடுங்கள். தொகுத்தளித்த முல்லை அமுதன் இக்கங்கரியத்தைத் தவறாது ஈடுபடவேண்டும். படைப்பாளியளுக்கும், இப்பேற்றினைக் கொடுக்கவேண்டும். எமது தாயகம் எரிந்து கொண்டு இருக்கின்றது! எரிந்து சாம்பலலகிப் போனவற்றையும் நினைத்து இந்த ஆவணப்படுத்தலைத் தீவிரமாக ஈடுபடவேண்டுமென்று வாழ்த்தி நிற்கின்றோம்.



மேலதிகக் ஆக்கங்கள்…
சரத் பொன்சேகாவின் ஆட்சி காலத்தில் புலிகளின் சகல சொத்துக்களும் அரசுடமையாக்கப்படும்: ரணில்
இனிய நண்பிக்கு! – தயாநிதி
அரசியல்வாதிகள் பலர் ஜோதிடப் பலன்களை அறிந்து கொள்வதில் அதிக நாட்டம்
வெப்ப வாயு வெளியேற்றம்: யு.எஸ். அதிகளவு குறைக்க ஜெர்மன் வலியுறுத்தல்
தமிழராகிய நாம் எமது தாயகத்தில் முழுமையான சுயநிர்ணயவுரிமையுடன் வாழ விரும்புகின்றோம்: டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்
கடற்புலிகளை முறியடிக்க சிறீலங்கா கடற்படை உசார்நிலையில் உள்ளது: கோத்தபாய

No comments:

Post a Comment