Thursday 20 February 2014

ஒரு உன்னத சினிமாக் கலைஞன்:பாலு மகேந்திரா!




தமிழீழத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அமிரதகழி எனும் ஊரில் பிறந்த அமரர்.பாலு மகேந்திரா ஆரம்பக்கல்வியை மட்டக்களப்பு புனிதமைக்கேல் கல்லூரியிலும்,உயர் கல்வியை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியிலும் பயின்றார்.அங்கு விரிவுரையாளராகக் கடமையாற்றியவரும் பின் நாளில் சிங்களப்படங்களை இயக்கியவருமான  ஜோதேவானந்த் அவர்கள் இயக்கிய பாசநிலாவிலும் பங்குபற்றியதாக தகவல் உண்டு.நாடகங்களிலும் விரும்பி நடித்தார்.எனினும் பிரபல ஒளிப்பதிவாளர்களின் ஒளிப்பதிவின் மீதான ஆர்வமே அவரை திரைத் துறை சார்ந்து சிந்திக்கவைத்தது.லண்டனில் தன் உயர்பட்டப்படிப்பை முடித்தவர் பூனா திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பற்றிக் கற்றுத் தேர்ந்தார்.
20.05.1939இல் பிறந்த இவர் சிறுகதை,கவிதை,குறும்படம்,நடிப்பு(இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம்),திரைப்படம்,புகைப்படம் போன்ற பல துறைகளில் தன் முத்திரையை அந் நாளிலேயே  பதித்துக்கொண்டார்.
இலங்கையிலிருந்த காலத்தில் வெளிவந்த தேனருவி சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிலும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒளிப்பதிவுத் துறையில் தனக்கென ஒரு பாணியினை வளர்த்தெடுத்ததை அவரதுநெல்லு’ படம் உதாரணம்.அப் படத்தை ராமு காரியத் இயக்கியிருந்தார்.தொடர்ந்து சேதுமாதவன்,மகேந்திரன்,மணிரத்தினம் போன்ற பலரின் படங்களின் ஒளிப்பதிவாளராகக் கடமையாற்றினார்.
சிறந்த ஓலிபதிவாளர்/இயக்குனர் விருதுகளைப் பலமுறை வென்றுள்ளார்.
மட்டக்களப்பின் வாழ்ந்த இளமை அனுபவங்களைக்கொண்டு உருவாக்கிய கதையே 'அழியாத கோலங்கள்'.இவர் பிறந்த பூமி பல கலைஞர்களையும்,படைப்பாளர்களையும் உருவாக்கிய மண். பெஞ்சமின் பாலநாதன்.மகேந்திரன் பின் நாளில் இப்படி உலகம் வியக்கும் கலைஞனாக வருவான் என்று நினைத்திருந்ததா தெரியவில்லை.ஆனால் மண்ணின் ஆசீர்வாதமும்,அவரின் விடா முயற்சியுமே இப்படி வளர முடிந்தது.மொழி கடந்த ஒரு கலைஞனாகவே வாழ்ந்திருந்தார்.ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்ப்புக்கிளம்பும் போதெல்லாம் சவாலாக சமாளித்து முன்னேறினார்.
கன்னடம்,மலையாளம்,தமிழ் என பன் மொழிப்படங்களின் ஒளிப்பதிவாளராகவும்,இயக்குனராகவும் கடமையாற்றியவரின் நடிப்பை தற்போது வெளி வந்த 'தலைமுறைகள்'உணர்த்தியது.ஈழப்பிரச்சினையை,அதன் வலிகளை,ரணங்களை தன்னால்தான் எடுக்கமுடியும் என்கிற நம்பிக்கையைக் கொண்டிருந்தார்.தன் வாழ்நிலை உத்தரவாதம் கருதி மௌனமாக இருந்திருக்கலாம்.
நேரம் தவறாதவர்.பயிற்சிக் கூடமும் வைத்திருந்ததாகச் சொல்வர்.இவ்வாண்டு'கதை நேரம்'எனும் நூலையும் வெளியிட்டிருந்தார்.அவரின் அனுபவங்களை எழுதியிருக்கலாமே..பலருக்குப் பிரயோசனமாக இருந்திருக்கும்  என்கிற ஆவல் பலநாள் என்னிடமிருந்தது. தன் வாழ்வியல் அனுபவங்களை கதைநேரம் என்ற தொடராக குறும்படங்களாக வெளியிட்டார்.வீடு படத்தின் மூலம் அர்ச்சனாவையும்,அழியாத கோலங்கள் மூலம் ஷோபாவையும்,வண்ண வண்ணப்பூக்கள் மூலம் மௌனிகா,வினோதினி போன்றோரையும் அறிமுக்கப்படுதி அவர்களாலும் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை நிரூபிக்கச் செய்தார்.மேலும் இவரிடம் பயிற்சி பெற்றவர்களான பாலா,சீமான்,வெற்றிமாறன்,ராம் போன்ற பலர் இன்று திரை உலகில் மிளிர்கிறார்கள்.
அவர் பணியாற்றிய சங்கராபரணம்,கோகிலா,மூன்றாம் பிறை,வீடு,சந்தியா ராகம்,பிரயாணம்,மூடுபனி,நீங்கள் கேட்டவை,மறுபடியும்,சத்மா போன்ற பல படங்களின்றும் பேசப்படுகின்றன.
தன் திரைப்படங்களின் மூலம் உலகை வியக்கவைத்தவர் இன்று(13.02.2014) நம்மிடையே இல்லை என்பது வருத்தம் தருகிறது.இன்னும் நாம் அவரிடம் கற்கவேண்டியது ஏராளமாயிருக்கிறது.அவருக்கென சாதகமான சூழல் வருகையில் ஈழத்து வலிகளின் கதையை எடுப்பார் என்கிற நம்பிக்கையும் இழந்து காலம் நிற்கிறது.


முல்லைஅமுதன்

13/02/2014

No comments:

Post a Comment