Thursday 20 February 2014

ஈழத்தின் நாடக உலகம் பல்வேறு பரிமாணங்களுடன் வளர்ந்து வந்திருக்கிறது.

எழுத்துலகில் பெண்களின் பங்களிப்பு அபரிமிதமாக இருப்பினும் நாடகம்,நடிப்பு என்று வரும் போது பெண்களின் வருகை அதிகளவில் இல்லை. சமூகம் கலைகளை நேசிக்கின்ற அளவிற்கு கலைத்துறைசார் அரங்குகளுக்கு அனுமதிக்க தயக்கம் காட்டவே செய்தனர்.அதனால் அனேகமான அரங்குகளில் ஆண்களே பெண் பாத்திரங்களை ஏற்றுவந்தனர். பெண்களின் கல்வி,சமூகம் சார்ந்த உணர்வு உத்வேகம் பெற நாட்களாயிற்று.எனினும் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே அரங்கிற்கு வந்தார்கள்.சிலர் ஓரிரு செயல்பாடுடன் தங்களை குடும்பம்,சமூகம் என்று குறுக்கிக் கொண்டார்கள்.பிறமொழி அரங்குகளில் பெண்களின் பங்களிப்பு அபரிமிதமாக இருப்பினும் இன்றும் அதிகளவில் பேசப்படவேயில்லை.குறிப்பாக சிங்கள அரங்கியலில் அரச உதவிகள் கிடைத்த அளவிற்கு தமிழில் குறைவாகவே இருந்ததும் காரணம்.பெண்ணின் மனவியல்பிற்கு ஏற்றவிதத்தில் குடும்பம் அமையாதுபோனாலும் பெண்களின் அரங்கச் செயற்பாட்டு வலு குறைந்துபோய்விட்டமைக்கான காரணமாகியது. மாறாக, நடனம்,நாடகம்,ஒலி/ஒளிபரப்பு,பாடல்,பேச்சு,திரைப்படம் என பல்துறைசார் அரங்குகளில் இன்று வரை மிளிரும் ஒருவராக நம்முன் தெரிபவர் திருமதி.ஆனநதராணி பாலேந்திரா என்றால் மிகையாகாது. அவரின் கல்வி,நடனப் பயிற்சி அவரின் கலைஉலக வாழவைத் திர்மானித்திருக்கவேண்டும். நடன ஆசிரியைகளான கமலா ஜோன்பிள்ளை,கார்த்திகா கணேசர்,சிறிகாந்தன் சகோதரிகள் ஆகியோரிடம் பெற்ற பயிற்சிகள் அவரை பலருக்கு அடையாளம் காட்டின.பின்னாளில் நடிப்பிலும் முத்திரை பதிக்க உதவின எனலாம். யாழ் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் இளமைக் காலத்தை கொழும்பிலேயே கழித்திருக்கிறார்.கொழும்பு இந்துக்கல்லூரியில் பயின்ற பொழுதே ‘பக்தநந்தனார்’ நாடகத்தில் நடித்து நாடக வாழ்வைத் தொடங்கிவைக்கிறார். உரத்து சிறுகதைகளை வாசிக்கையில் பாத்திரங்களின் உணர்வு ஏற்ற இறக்கங்களை அவதானத்துடன் வாசிக்கையில் ஏற்பட்ட அனுபவமும் அவரின் நாடக,நடிப்புக்கும்,பின் ஒலிபரப்பாளராக மிளிரவும் உதவியது போலும். யாழ் அரங்கியல் கல்லூரியை முத்துத்தம்பி வித்தியாசலையில் குழந்தை சண்முகலிங்கம்,தாசிசியஸ்,பிரான்ஸிஸ் ஜெனம்,வி.எம்.குகராஜா,கவிஞர்.கந்தவனம்,,ஏ.ரி.பொன்னுத்துரை போன்ற பலரின் ஒரு பயிற்சிக்களமாகாவும் கொள்ளப்பட்ட அரங்கக் கல்லூரியில் பயிற்சியும் பெற்றுக்கொண்ட ஆனந்தராணி தன் கணவருடன் இணைந்து பல நாடக்ங்களில் பணியாற்றிவருகிறார். கொழும்பில் இருந்தபோது நவரங்கலா மண்டபத்தில் பேராசிரியர் மௌனகுரு அவர்களின் கூத்துமரபும்,நாட்டியக் கலைஞர் கார்த்திகா கணேசன் அவர்களின் நடன அமைப்புடனும் கூடிய 'இராமாயணம்' இன்றும் பேசப்படுகின்றது.நாடகத்திற்குரிய பாடல்களை பாத்திரங்களுக்கேற்ப தானே படும் திறமை,குரல்வளமும் இருப்பது சிறப்பானது. ஆரமபத்தில் இராமாயணம்,பக்தநந்தனார்,நாயன்மார் போன்ற இதிகாச,பக்தி நாடகங்களில் நடித்து வந்தவர் இலங்கையில் வானொலிக் கலைஞராக பவனி வந்தார்.இளங்கீரனின் வாழப்பிறந்தவர்கள் தொடரில் நடித்து வானொலிநேயர்களையும் கவர்ந்தார்.அந் நாட்களில் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் வர்த்தக,வங்கி அனுசரணையுடன் பல தொடர் நாடகங்களை ஒலிபரப்பி வந்தன.கோமாளிகள் கும்மாளம்(மரிக்கார் எஸ்.ராமதாஸ்),அசட்டு மாபிள்ளை(வரணியூரான்),ஒரு வீடு கோவிலாகிறது,தணியாத தாகம் குறிப்பிடத் தக்கன.இவரும் பல வானொலி நாடகங்களில் பங்கு பற்றினார். மேடை நாடகங்களை கமலாலயம் சிவதாசன் வரணியூரானின் இயக்கத்தில் வேலணை வீரசிங்கம் அவர்களின் பிறவுன்சன் கோப்பி நிறுவனத்தின் ஆதரவில் மேடையேற்றிய நாடங்கள் இவருக்குப் புகழைக் கொடுத்தன.சம்பந்தம்,அசட்டுமாப்பிள்ளை குறிப்பிடத்தக்கனவாகும்.கூடவே ,கட்டுப்பெத்தை தமிழச் சங்க நாடகமான'பிச்சை வேண்டாம் நாடகம் அவரை நவீன நாடகத்திற்கு அழைத்து வந்தது.இதனால் கோமாளிகள் படமாக்கப்பட்டபபோதும்,கமலாலயம் நிறுவனம் வாடைக்காற்று(1978) நாவலை திரைப்படமாக்கிய போதும் ஆனந்தராணி சிறப்பாக நடித்து தன் திறமையை வெளிப்படுத்தினார்.வாடைக்காற்ரு நாவலாகவும் பலரால் வாசிக்கப்ப்ட்டதும்,திரைப்படமாகியதும் ஓரளவிற்கு வசூலையும் தந்த திரைப்படங்களில் ஒன்றாகவும் கணிக்கப்பட்டது. கண்னாடி வார்ப்புக்கள் மேடையில் ஏகோபித்த பாராட்டுதல்களை பெற்றிருந்த வேளை அதனை தொலைக்காட்சிகேற்பவும் வடிவமைத்து இலங்கை ரூபவாகினியில் ஒலிபரப்பிய போது பலரையும் வியந்து பார்க்கவைத்தது. வீரசிங்கம் மண்டபத்தில் மேடையேறிய மழை நாடகத்தின் பாத்திரவார்ப்புக்கள் இந்திராபார்த்தசாரதியுடையது எனினும் அதற்கு உயிரூட்டியவர்கள் ஆனந்தராணியும் அவர்களது குழுவினருமே.. பல தரப்பட்ட கதைகளை நாடக வடிவத்திற்குள் உள்வாங்கி ரசிகர்கள் குறிப்பாக அவைக்காற்றுக்கென உருவான ரசிகர்கள் விரும்பும் வண்ணம் கொண்டுவருவதில் வெற்றிபெற்றவர்களாவார்கள்.அதனால் தான் குந்தவையின் சிறுகதை ஒன்றை மேடைக்கென வடிவமைத்து நாற்சார் வீடு எனும் பெயரில் மெடையேற்றினர். மிகுந்த சிரமங்களுக்கிடையே ஒவ்வொரு நாடகங்களையும் தன் கணவருடன் தயார் செய்து பாத்திரங்களுக்கேற்ப கலைஞர்களையும் தேர்வு செய்து ,பயிற்சி அளித்து மேடையேற்றி ரசிகர்களிடம் போய்ச் சேரும் வரை அவர்களின் கஸ்டங்கள் அனேகம். விளம்பர் விழாக்கள் எனில் அனுசரனையாளர்களின் உதவியை நாடலாம்.ஆனால் கலைஞர்களை,ரசிகர்களை நம்பித்தான் உழைக்கின்றனர். இவர்களுக்கான மேடைகளும் கை கொடுக்கின்றன.மேடை வடிவமைப்பு,அரங்க நிர்மாணம்,ஒலி,ஒளி அமைப்புகளையும் அவர்களே பயிற்றப்பட்டவர்களுடன் ஒருங்கிணைவதால் நாடகத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருக்கின்றது. லண்டனுக்கு வந்த பின் தீபம் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகக் கடமையாற்றினார். அதே வேளை யோகாதிணேஸ் தொகுத்து வழங்கிய சொற்சிலம்பம் நிகச்சியிலும் (சிறப்பு விருந்தினராக) நடுவராகக் கடமையாற்றி அனேகரின் பாராட்டுதல்களையும் பெற்றார். ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் தங்கள் நாடகங்களை மேடையேற்றியுள்ளனர்.மேலும், இந்தியா,கனடா போன்ற நாடுகளிலும் தங்கள் குழுவினருடன் சென்று நிகழ்சிகளை நடத்தியுள்ளனர்.அண்மையில் இலங்கை சென்று பல இடங்களிலும் நாடகங்களை மெடையேற்றியதுடன்,கலைஞர்களுக்கான பயிற்சி கருத்தரங்குகளையும் நடத்தியுள்ளனர். தொடங்கிய காலம் முதல் இன்று வரை அதெ உற்சாகத்துடன் தொய்வின்றி நாடகங்களை புதிது புதிதாக அரங்கம் நிறைந்த ரசிகளுடன் நடத்தி வருகின்றனர். இதற்கு மேலும் முத்தாய்ப்பாக புலம் பெயர் நாட்டில் வாழும் சிறுவர்களை அரங்க செயற்பாட்டிக்குள் இணைக்கும் வகையில் நாடகப் பள்ளியையும் நடத்து வருவதும் சிறப்பென கூறலாம். இன்னும் உயிர்ப்புடன் வாழும் இலங்கை ரசிகர்கள் மத்தியில் அரங்கம் சார்ந்த பயிற்சிக்களை ஆர்வத்துடன் மக்கள் கலந்து சிறப்பித்ததும்,திரைப்படங்கள் போன்று ஹவுஸ்புல் அரங்காக மக்கள் நிறைந்ததும் ஆனந்தராணி,க.பாலேந்திரா தம்பதிகள் உருவாக்கிய நாடகப் பதிவுகளே சான்றாகும்.இலங்கையிலும்,லண்டனிலும் கண்ணாடி வார்ப்புக்கள் நாடக நூலை வெளியிட்டு மேலும் ஒரு படி மேல் சென்று அடுத்த தலைமுறைக்காக தங்கள் செயல்பாட்டை முன்வைக்கின்றமை வரவேற்கத் தக்கதாகும். எப்படி யாழ்ப்பாணத்தில் முளைவிட்ட நாடக அரங்கக் கல்லூரி நிறையக் கலைஞர்கலை உருவாக்கியதுடன்,அதன் தொடர்ச்சியாக பல்கலைக் கழக பாடநெறியாகவும் கற்பிக்கபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.அதே போல் அவைக்காற்றுக் கலைக் கழகமும் இலங்கையில் முகிழ்த்து லண்டனில் விழுதுகளைப் ;பரப்பி வருகிறது.கூடவே, பல்கலைக் கழக மாணவர்களும் தங்கள் கற்கைநெறிப் பாடத்திட்டத்திற்கமைய அவைக்காற்றுக் கலைக்கழக நாடகங்கள்/அதன் ஸ்தாபகர் பற்றிய ஆய்வினை மேற்கொண்டு கட்டுரைகளைச் சம்ர்பித்தமையும் ஈழத்து அரங்கம் வாழ்கிறது எனவும் கூறலாம். ஈழத்துக் கலை உலகம் அவைக் காற்றுக் கலைக் கழகத்தினரை மறந்துவிடாது.அதே போல் ஈழத்து பெண் கலைஞர் ஆனந்தராணி பாலேந்திராவை ஒவ்வொரு மேடையும் பெயர் சொல்லும் அதிசயம் தொடர்ந்து நிகழும். வாழ்த்துக்களுடன், முல்லைஅமுதன்

No comments:

Post a Comment