Thursday 20 February 2014




நாற்பதுகளில் நமது நவீன கவிதைவடிவத்தினை மகாகவியின் நெம்புகோல் தொடக்கிவைத்தனவெனினும் 70இற்குப் பிறகான கவிஞர்கள் கொஞ்சம் முனைப்பாக எழுத்த தலைப்பட்டனர்.வடிவங்களில் சிதைவில்லாமலும்,எந்தச் சேதாரமுமில்லாமலும் எழுத முனைந்தவர்கள் பலர்.அவர்களுள் மலயன்பன் ,சத்தியன் என்று அறியப்படுகின்ற லோகேந்திரலிங்கமும் ஒருவர்.
ஈழத்து புதுக்கவிதையாளர்கள் 70இற்குப் பிறகு தங்கள் கவிதை நூல்களை வெளியிடும் வாய்ப்புப் பெறுகையில் பலர் அடையாளம் காணப்பட்டனர்.சபா ஜெயராஜா,திக்வெல்லைக்கமால்,மேமன் கவி,பேனா.மனோகரன்,கருணையோகன்,அன்பு ஜவகர்ஷா எனப் பலர் நூல்களை வெளியிட்டு திரும்பிப் பார்த்தவர்கள் வரிசையில் மலையன்பனும் ஒருவர்.தன் பதினேழாவது வயதில் சிரித்திரனில் எழுதிய அவரின் போலிகள் கவிதை நூல் மூலம் கவிஞராக மட்டுமல்ல ஒரு புதிய சிந்தன வீச்சாளராகவும் இனம் காட்டினார்.இன்னொரு படி மேலே போய் இவரின் ஆளுமையை வெளிக்கொணர்ந்த மாற்று,கீற்று சஞ்சிகைகள்  நம்மை வந்தடைந்த போது பிரமிக்கவைத்தது.கல்லூரன் போன்றவர்களுடன் இணைந்து இலக்கியப் பணி ஆற்றியமை மேலும் அவரைச் செழுமைப் படுத்த உதவியது எனலாம்.80களில் இவரின் சஞ்சிகைகளின் வருகையின் போது புதுசு,அலை,சமர்,மேகம்,சிரித்திரன்,மல்லிகை என பல சஞ்சிகைகள் வந்திருந்தாலும் இவரின் விரிவான சிந்தனை ஆற்றல்
இன்னும் பேசுபொருளாகவே உள்ளது.
நாட்டின் சூழல் மாறுபாடு அடைய(இன மோதல்/இனக்கலவரம்) இவரும் பலரைப் போலவே கனடாவிற்கு இடம் பெயர்ந்தார்.
அங்கும் அவரின் அகப்/புறச் சூழல் இதழியலாளனாக/பத்திரிகையாளனாக புதிய உத்வேகத்துடனும்,சுதந்திரமாகவும் செயல்படவைத்தது.அந்த எண்னம் 'உதயன்' பத்திரிகையாக நம் முன் பரந்துபட்ட வாசகர்களை உள்வாங்கியபடி நடைபயில்கிறது.
வேர்களை நாம் மறக்கவில்லை என்பதற்கு ஆதாரமாக உதயன் எனும் பெயர் நிலைத்துள்ளது. சூரியன் பத்திரிகை ஆசிரியராகவும் இருந்த அனுபவமே உதயனின் முதல்படி.
கனடாவில் ஈழநாடு,ஈழமுரசு,முழக்கம்,செந்தாமரை,சுதந்திரன்,தாய்வீடு,விளம்பரம்,தூறல்,முற்றம் எனப் பல பத்திரிகளுடன் இணைந்து வளர்ந்து இன்று விருட்சமாக நிற்கிறது.
இங்கு,பத்திரிகை ஆசிரியர் என்கிற வகையில் தன் உள்ளக்கிடக்கையை ஆசிரியர் குறிப்பாக எழுதுவதும்,காலப்போக்கில் அதுவே ஒரு இலக்கிய வகையாகவும் ஏற்றுக்கொள்கிற நிலைமை ஏற்பட்டுவிடுகிறது.அந் நாட்களில் தினகரன்.வீர்கேசரி,உதயன்,சுடரொளி,ஈழநாடு  ஆசிரியர் தலையங்கள் பேர் பெற்றவை.
முதன் முதலில் ஈழநாடு ஆசிரியர் அமரர்.சபாரத்தினம் அவர்கள் எழுதிய ஆசிரியத் தலையங்கள் பிரபல்யம் பெற அவற்றைத் தொகுத்து ஊரடங்கு வாழ்வு எனும் தொகுப்பு முதலில் வெளிவருகிறது.தினக்குரல் ஆசிரியரின் நூலும் வந்துள்ளதாக அறிய முடிகிறது.
புலம் பெயர்ந்த பின் ஊர்க்குருவி,ஊடாடி,நடமாடி எனப் பெயர்களில் வெளி வந்த குறிப்புக்கள் நம்மை உலுக்கியுமுள்ளன.அப்படியொரு சக்தி,வீரியம் அதற்கு உள்ளதை பின்னாளில் உணர்ந்தோம்.உஅதயனிலும் வலுவான கட்டுரைகள் ஆசிரையர் குறிப்பாக வந்து உலுக்கி உள்ளதை மறுக்க முடியாது.
ஆளுமை மிக்க தன் எழுத்துக்களால் பல்வேறு வடிவங்களில்,உள்ளடகத்தில் சமூக வாஞ்சையுடன், சமூக சீராக்கச் சிந்தனை கொண்டு எழுத்தட்டுள்ள தொகுப்பு இன்று நமக்குக் கிடைத்திருக்கிறது.
கவிதை,சிறுகதை,விமர்சங்கள்,சமூகசேவை,இதழியல் என்கிற பன்முக ஆளுமை கொண்ட ஒருவரிடமிருந்து வெளிப்பட்ட இன்னொரு வடிவமே 'இதுவரை' நூலாகும்.
இதனை பத்தி எழுத்து என்கிற புதுவடிவமாகக் கொள்ளலாமா என்பதை காலம் தீர்மானிக்கட்டும்.
17 வருடங்களுக்கு மேலா வெளி வரும் 'உதயன்'பத்திரிகை பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்கும்,முகம்கொடுத்திருக்கும் என்பதில் ஐயப்பாடு இல்லை.
கத்தி மேல் நடக்கும் விளையாட்டு.
முள்ளின் மேல் நின்றுகொண்டு நர்த்தனமாடும் நிலை..
எனினும்,
எதிர்கொண்டதின் விளைவே நமக்குக் கிடைத்திருக்கிற தொகுப்பு.
எழுத்தாளனுக்கு சுதந்திரமாக எழுதுதல் வாய்க்கவேண்டும்.
அப்போதுதான் எழுத்தில் சத்தியம் இருக்கும்.
எமது விடுதலைப் போராட்டத்தில் காட்டிக்கொடுப்புக்கள்,விட்டுவிலகுதல்,பின்னடைவு,என்பன நிகழும் போது சமூக அக்கறை உள்ள எவனுக்கும் வலிக்கவேண்டும்.அந்த வலி இவருக்கு எழுத்தாய் வந்திருக்கிறது.ஒவ்வொரு கட்டுரைகளும் பல்வேறு  விடயங்களைப் பேசினானும் ஏதோ ஒரு இடத்தில் சந்திக்கிற,தொடுகிறதாய் உணர்கிறேன்.
கருணாவின் பிரிவு/காட்டிக்கொடுப்பு,உலக வல்லாதிக்க சக்திகளின் ஒருங்கிணைவுடன் விடுதலைப் போராட்டத்தை சிதைவுறசெய்தமை அல்லது பின்னகர்த்தியமை முள்ளிவாய்க்கால் வரை வந்து நின்றமை...
தேசியத் தலைமை மீதான நம்பிக்கையின்மையை கருணா வெளிப்படுத்திய விதம்,கிழக்கின் போராளிகள் ஒரு கருணாவால் அவர்களின் தேசியத்தின் மீதான அதீத நம்பிக்கையையைச் சிதைத்து விடுமா என்கிற கேள்விகள் இவரது கட்டுரைகளில் தொக்கி நிற்கின்றன.
மாவீரர்களுக்குச் செய்யப்படுகின்ற மரியாதை சிங்களச் சிப்பாய்களுக்குக் கிடைப்பதி என்கிற வருத்தம் ஒவ்வொரு சிங்களச் சிப்பாய்க்கும் இருக்கும்.எரிக் சோல்கையும் கூட இராணுவமேதை என்று தலைவரைக் குறிப்பிடுவதும் சான்று.
புலம்பெயர் நாடுகளில் நடைபெறுகின்ற மாவீரர்தினங்கள் பற்றியும் பேசுகின்றன.
சமாதான ஒப்பந்தம்,அதன் வடிவமிப்பு,சந்திரிகா/ரணில் நாடகங்கள்,மகிந்தாவின் வருகை,இறுமாப்புடன் ஒப்பந்தத்தை முறித்தல்,போராளிகளுக்தெதிராக நெறி பிறழ்ந்த வன்முறை,யுத்தத்தை வலிந்து நடத்தியமை,பாலியல் வன்கொடுமை,யுத்த நிறுத்ததிற்கு வலியுறுத்தி புலம்பெயர் நாடுகளிலும், தமிழகத்திலும் எழுந்த போராட்டங்கள்,அதன் பல,பலவீனம்,தமிழகத்தில் எழுந்த யுத்தநிறுத்ததை வலியுறுத்தி எழுந்த எழுச்சியை தமக்கக்குச் சாதகமாக்கிய அரசியல்வாதிகள் அவரவர் பலம்/பலவீனம் பற்றியெல்லாம்
நமக்குள் எழுந்த கேள்விகள்,வியாகியானங்கள் எல்லாம் இவருக்கும் ஏற்பட்டதின் விளைவே  கட்டுரைகளாக வெளிவந்துள்ளன.
கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம்,ரணிலின் நடுநிலை நாடகம்,டக்ளஸின் அரச ஆதரவுப்புராணம் இவர்கள் எப்போதும் சமூக அக்கறையுடன் செயல்பட்டதாகவோ,தமிழர் ஆதரவு செயல்பாட்டாளராகவோ அடையாளப்படுத்தியவர்கள் இல்லை.இனப்படுகொலை யை இவர்கள் ஆதரிப்பவர்களாகவும்,விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துபவர்களாகவுமே தென்பட்டார்கள்.
சட்டத்தை,நீதிமன்றத்தை மதிக்காத,அவமரியாதை செய்கின்ற மகிந்தாவின் அடியொற்றிகள் மக்களையும் அச்சுறுத்துபவர்களாகவே வலம் வருகிறார்கள்.
சமாதான ,யுத்த நிறுத்த ஒப்பந்தங்களை மீறுகின்ற செயல்பாடுகளை செய்கின்ற அரச நிலைப்பாட்டாளர்களை ஆதரிக்கிற வல்லரசுகள்,தம் அரசியல்,அதிகார செல்வாகைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளுக்கெதிரானா ஊர்வலங்கள்,போராட்டங்களை நடாத்துதல் இப்படி பலவகையிலும் மக்களின் மனதில் நிலவும் போராட்ட உணர்வை மழுங்கடிக்கச்செய்கின்ற வல்லாதிக்கங்கள் புலம்பெயர் நாட்டிலும்,தமிழத்திலும் ஊடுருவி செயல்படுகின்ற போதிலும் மக்களின் உள்ளுணர்வு மேலும் வலுவடைந்து செல்வதே கண்கூடு.காலம் வருகையில் மேலும் வெளிப்படும்.
காலத்திற்கேற்ற தலையங்கங்களைத் தாங்கிய தொகுப்பு 'இதுவரை' 327 பக்கங்களில் வெளிவந்துள்ளமை காலத்தின் தேவை.
ஆங்காங்கே எழுகின்ற எழுச்சிகள்,போராட்டங்கள்,அரசியல் பேச்சுவார்த்தைகள்,கலந்துரையாடல்கள்,அமைப்புக்கள் யாவும் நகர்கிற நேரத்தில் தேசியத் தலைவரின் நாமத்தை உச்சரிக்கவே தயங்குகிறநிலை அல்லது நிராகரிக்கிற செயல்பாடுகள் இவரையும் வருந்த வைத்திருக்கிறது.
நூலின் முன்னுரை,அணிந்துரை,வாழ்த்துரைகளை திரு.பழநெடுமாறன் ஐயா,வீரகேசரி பிரதம ஆசிரியர்.திரு தேவராஜா,கவிஞர்,வி,கந்தவனம்,திரு,பொ.கனகசபாபதி அவர்கள் எழுதியுள்ளமை நூலின் கனதியைச் சுட்டி நிற்கின்றன.
அன்று திலீபனை நாம் இழந்ததும், அங்கு தொல்திருமாவளவன்,கருணாநிதியை உண்ணாவிரதம் இருக்கச் செய்ததும்,இன்றைய அவலத்திற்கும் இந்தியாவே காரணம் என்பதை உணர்த்தும் கட்டுரையும் அடக்கம்.
என்னை ஆகர்சித்த கட்டுரைத் தலைப்புக்கள்:
     நியாயமும் அநியாயமும் மோதிக்கொள்ளும் வன்னி நிலப்பரப்பு
      விடுதலைப்புலிகளின் இருப்பே புலம்பெயர் தமிழர்களின் விருப்பு-அதுவே  உலகத் தமிழர்களுக்குச் சிறப்பு
      மாங்கனித் தீவில் மலிந்தன கொலைகள்
      புலம்பெயர் தமிழரது பேராதரவு விடுதலைப்புலிகளுக்கும்,தலைவர் பிரபாகரனுக்கும்  என்றும் இருக்கும்
      முத்துவேல் கருணாநிதிக்கு முக்கிய 'செய்தி' ஒன்றைச் சொல்லிச் சென்ற தியாகி முத்துக்குமார்
     நம்மினம் விழுந்து மடிகின்றது.சர்வதேசம் வேடிக்கை பார்க்கிறது
      அரசாங்கம் எனிமேல் போர் செய்யாது.போக்கிரித்தனத்தையே செய்யும்
      உண்ணாவிரதிகள் உண்ண மறுக்கிறார்கள்.ஆனால் உலகமோ பேச மறுக்கின்றது
      இலங்கை அரசின் கழுத்தை நோக்கி நகரும் தூக்குக் கயிறு.
      இப்படிப் பல..
அவற்றுள் பொதுவானவைகள் உலுக்குகின்றன..சொல்லாடல்களின் தேர்ச்சி நன்றாக வந்திருக்கிறது.
மேலும்,
அவுஸ்திரேலியாவுக்குச்படகில் பயனம் செய்யும் நம்மவர்களின் அவலம்,தமிழர்களின் அவலத்தைப் புரியாமல் அரசுக்குத் துணைபோகும் ரவூல்கக்கீம்,மகிந்தாவின் மகனின் அடாவடித்தனம்,நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பற்றிய செய்தி,வெளி நாட்டு அரசுகளின் பாராமுகம்,கோபி சிவந்தனின் உண்ணாவிரதம் போன்றனவும் கரிசனையுடன் உற்று நோக்கப்படுகின்றமை பாராட்டுக்குரியது.
சில கேள்விகளும் அவருள் இருப்பதை உணரமுடிகின்றாது.
மகிந்தாவின் அடாவடித்தனம்,புலம்பெயர் தமிழர்களின் நேரான போராட்ட வடிவமுறைகள், அகதிகள் கவனிப்பு,தேர்தலில் அக்கறை காட்டும் அரசியல் கட்சிகள்,புலம்பெயர் தமிழர்களைச் சிதைக்கும் சக்திகள்,ஜெயலலிதாவின் வருகை,செயல்பாடுகள்,ஜனாதிபதி ஆட்சிமுறை,அகதிமுகாம்,உள்ளக,வெளிய தமிழ் அரசியல் கட்சியகளின் நடைமுறைச் செயல்பாடுகள்,ஒட்டுமொத்த தமிழர்களில் சிலரின் போலிமுகங்கள்,கனடிய வாழ்வுமுறை,தேசியத் தலைவரின் இருப்பு,சர்வதேசங்களின்  பிராந்தியச் செயல்பாடுகள்,போட்டிகள்,ஊடக அடக்குமுறை,வன்முறை இப்படி எல்லா திசை நோக்கிய சிந்தனைகளையும் ஆய்ந்துணர்ந்து எழுதும் இவரின் நூல் நமக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
தமிழர்களின் வலிகள்,நோவுகள்,இழப்புக்களைப் புரிந்துகொள்ளாமல் வெற்றிக்களிப்பில் இருந்து மீளாத மகிந்தா&கம்பனிக்கள் எக்காளமிடுவதும்,அவர்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ போர்க்குற்றம்,இனப்படுகொலைக்குற்றங்கள் தூக்குக்கயிற்ரை முத்தமிடும் நாள் தூரத்தில் இல்லை என்பதுவும்,எமக்கான விடுதலை கைக்கெட்டிய தூரத்தில் இருப்பதும் நமது ஒற்றுமைப் பலத்தில்தான் இருக்கிறது என்பதை இவரின் பேனா சொல்லி நிற்கின்றது.
அழகிய பதிப்பு.
ஆயிரம் பூக்கள் மலர வேண்டும்.
அதில் நல்ல பூக்களும் இருக்கும்.
அத்திவாரம் பலமாக கட்டி எழுப்பட்டிருக்கும் ஆசிரியரின் எழுத்து முடங்கிவிடாது என்பதற்கு நூல் நல்ல உதாரணம்.
வாழ்த்துக்களுடன்,

முல்லைஅமுதன்

No comments:

Post a Comment