Thursday, 23 September 2010

அணிந்துரை

எமது போர்ச்சூழலின் புலப்பெயர்வு பலரை படைப்பாளிகளாக்கியுள்ளதை மறுக்கமுடியாது. பல்நாட்டுக்கலாச்சாரம் கல்விச்சூழல் கணணிப் பரிச்சயம் இன்னோரென்ன பிறவற்றால் தீபன் போன்ற இளைஞர்களின் எழுத்துலகப் பிரவேசம் வியப்பைத்தராத போதிலும் எதிர்காலத்தில் அவர்களால் உள்வாங்;கப்படும் அல்லது அவர்களால் தரப்படப்போகும் வெளிச்சங்கள் ஈழத்தின் எழுத்துக்கு புதிய பாய்ச்சலைத் தரலாம். இது எமது நம்பிக்கை.

மேத்தா, திலகபாரதி போன்றோறின் காதல் கவிதைகளை படித்திருக்கிறேன். ஏனெனில் காதல் கவிதைகள் மனித மனத்தை அசைத்துப் பார்க்கவே செய்யும். இன்றைய காதல், உன்னாலே உன்னாலே திரைப்படம் வரை காதல்தான் அடிப்படை. பெரிய நாவல்களை எடுத்தாலும் காதல் இழையோடும்.

சில சமயம் சூழல் எம்மைப் புறக்கணிக்கும். ஆனாலும் அதனையே புறம்தள்ளி மேல் செல்ல வைக்கும். கவிஞனின் உலகம் அதிசயமானது.

கம்பனுக்குள் மூழ்கிப்போகும். சிலசமயம் வள்ளுவனுக்கு வக்காலத்து வாங்கும். பட்டுக்கோட்டையிடம் மண்டியிடும். கண்ணதாசனிடம் கடன் கேட்கும். 80பதுகளில் சிந்தாமணி போன்ற பத்திரிகைகளில் எழுதிய சிறுகவிதைகளை 'போஸ்ட் காட்' கவிதைகள் எனக் கிண்டலடித்தோம். பின் 'ஹக்கூ' கவிதைகள் என்று பெருமைப்பட்டோம். இப்போது குறட்பாக்கள், குறும்பாக்கள், அல்லது நறுக்குகள் என்று தொட்டுக்கொள்கிறோம்.

'வானம்பாடி' கவிதைகளைப் பார்த்து வியர்ந்தபோது கூட கிண்டலடித்தவர்கள் பலர். ஆனால் காலச்சுழற்சி எமது மகாகவியை, சேரனை, வ.ஐ.ச.ஜெயபாலனை, நீலாவணனை, பஷில் காரியப்பரை. ஈழவாணனை, தருமு. சிவராமுவை, புதுவையை, கருனாகருனை நாம் படிக்கவைத்த பெருமை எமது புலப்பெயர்வே காரணம் எனலாம். இன்று எத்தனை கவிஞர்கள்... பட்டியல்; நிச்சயம் நீளும். கௌசல்யா சொர்ணலிங்கம், த.சு. மணியம், வண்ணை தெய்வம், சரீஷ், திலீபன், விக்னா, வேதா, பொன்னண்ணா.... தீபன் வரை.....

தீபனின் 'மனசெல்லாம் உன் வாசம்' கவிதை நூலைப் பார்த்தபின் அவரின் வார்த்தைகளை வாலாயப்படுத்துகின்ற வசீகரம் நிறையவே தென்பட்டது. இங்கு

'மணம் வீசும் மலர்களையும்
மயக்கும் மழலையின்
புன்னகை!'

'சிரிப்பதும் அழுவதும்
மழழலகள் இசைக்கும்
சுகமான ராகங்கள்!'

வள்ளவனின் குறள் தோற்றது போங்கள்!.
இன்னொரு அதிசயம்... ஒவ்வொரு கவிதைகட்கும் அழகான படங்கள்.... பிரமிக்க வைக்கிறது.

கவிதைகள் ஊடே இழையோடும் தேசியத்தின்பால் இவரின் ஈர்ப்பு ... ஈடுபாடு தெரிகிறது. தலைவரின் புகைப்படங்கள்... மாவீரர் சார்ந்த நினைவுகள் இன்னும் நிறைய வாசித்தால் தீபனின் கவிதைகள் வீரியம் பெறும்.

வேர்கள் பிடுங்கி எறியப்பட்டாலும் மண்ணின் வாசமே எம் சுவாசம். எந்த ஈழத்துக்கவிஞனும் மண்சார்ந்த கவலைகளுடன், ஏக்கங்களுடன் வாழவே செய்கிறான். தீபனும் உதாரணம்.

'எதிரியே நீ குண்டு
வீசிக்கொன்றது வெள்ளைச்
சட்டை அணிந்த மொட்டுக்களை!'

ஒரு கணம் திகைப்பில் ஆழ்த்தியது. இன்னும்...இன்னும்... நிறையக் கவிதைகளுடன் தீபன்.
எமது ஆத்மாத்த வாழ்த்துகள் என்றென்றும்!

இவன்
முல்லை அமுதன்
லண்டன்

No comments:

Post a Comment