
கவிதை, நாடகம் என கலை இலக்கியப் பணியில் நீண்ட காலமாக தன் சேவையை அளித்து வரும் திரு.வண்ணை தெய்வம் அவர்களை அவரின் கலைச் சேவையை பாராட்டி அவருக்கான 'மணிவிழா'வினை பாரிஸ் வாழ் கலைஞர்களால் செப்டம்பரில் விமரிசையாக நடாத்தவுள்ள இந் நேரத்தில் 'காற்றுவெளி'யும் தன் பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவிக்கும் அதே வேளை அவருடனான நேர்காணலையும் வெளியிடுவதன் மூலம் 'காற்றுவெளி'யும் பெருமை அடைகிறது..
-முல்லைஅமுதன்.
வணக்கம் திரு. வண்ணை தெய்வம் அவர்களே.!
என் அன்பிற்கும், மதிற்பிற்கும் உரிய இலக்கிய உறவான முல்லை அமுதன் அவர்களுக்கும், காற்றுவெளி வாசகர்களுக்கும் எனது இனிய வணக்கங்கள்.
தங்கள் கலைப்பணியைப் பாராட்டி பாரிஸ் வாழ் கலைஞர்களால் நடத்தப்படும் 'மணிவிழா' பற்றி சொல்லுங்களேன்.
எனது அறுபது வயதை கௌரவிப்பதற்கான விழா அல்ல இது! அறுபது வயதை ஒரு சாட்டாக வைத்து எனது கலை, இலக்கிய, சமுதாயப் பணிகளைக் கொரவிக்கின்றார்கள். இதில் இன்னொரு விடயமும் இருக்கின்றது! நான்கூட முன்னின்று இப்படியான விழாக்களை பலருக்கு நடாத்தியிருக்கின்றேன். இப்படியான பாராட்டுவிழாக்கள் மூலமாக வளர்ந்துவரும் இளம் தலைமுறையினரும் உற்சாகப்படுத்தப்படுகின்றார்கள். அப்படியாகத்தான் எனது இந்த விழாவினையும் பார்க்கின்றேன்.
ஈழத்தில் நீங்கள் மேடையேற்றிய அல்லது நடித்த நாடகங்கள் பற்றி குறிப்பாக 'சாவுக்குச் சவால் பற்றி....
ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்க்கையில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டியப ல விசயங்கள் இருக்கின்றன. அப்படித்தான் கலைப்பயணத்தில் நான் மேடையேற்றிய பல நாடகங்களில் 'சாவுக்குச் சவால்' நாடகம் மறக்கமுடியாதது! அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது வீரசிங்கம் மண்டபத்தில் மேடையேறிய அந்த நாடகத்திற்கு நாடகத் தந்தை 'கலையரசு' சொர்ணலிங்கம் ஜயா அவர்கள் தலமை தாங்கியது எனது கலைப் பணிக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே நான் கருதுகின்றேன்.
ஈழத்து அவலம் தங்களையும் நம்மைப் போல் புலம் பெயர வைத்த பின் தங்கள் கலை வாழ்க்கையின் வலிகள் இருந்திருக்கும். வலிக்காமல் வாழ்வில்லை... உங்கள் அனுபவம் எப்படி?
புலம் பெயர்ந்து ஏனைய நாடுகளில் வாழ்கின்ற கலைஞர்களைவிட பாரிஸில் வாழ்கின்ற கலைஞர்களுக்கு அந்த வலி கொஞ்சம் குறைவானதுதான்! காரணம் ஏனைய நாடுகளில் உள்ள கலைஞர்கள் பரந்து, சிதறுண்டு வாழ்வதால் அவர்களை ஒருங்கிணைப்பதும், ஒரு நிகழ்ச்சியை அரங்கேற்றுவதும் மிகவும் சிரமமானது. அப்படியான காரணங்களால் தங்களது கலைத் தாகங்களை தங்களது மனங்களுக்குள்ளேயே அடக்கி வைத்திருப்பது வலிதான்! ஆனால் பாரிஸில் வாழ்கின்ற கலைஞர்கள் ஒரு வட்டத்துக்கள்ளேயே வாழ்வதனால் அவர்களை ஒருக்கிணைப்பது எழிது. அது மாத்திரமல்ல தங்களது கலைத் தாகங்களைத் தீர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புக்களும், சந்தர்ப்பங்களும் அதிகமாகவே கிடைக்கின்றது. அந்த வகையில் கலைஞன் என்னும் வகையில் அந்த வலியை நான் அதிகம் அனுபவிக்கவில்லை.
ஈழத்தில் வாழ்ந்த காலத்து கலை முயற்சிக்கும் இங்குள்ள கலை முயற்சிக்கும் என்ன வேறுபாட்டைக் கண்டீர்கள்?.
அங்கு ஒரு நாடகத்தை அரங்கேற்றுவதற்கு ஏற்படும் சிரமங்களைவிட இங்கு பத்துமடங்கு அதிகமான சிரமங்கள் இருக்கின்றது! கலைஞர்களை ஒருங்கிணைப்பது, ஒத்திகை பார்ப்பது, ஒத்திகைக்கான இடத்தை தேடிக்கொள்வது, காட்சி அமைப்பது, இப்படியாக எல்லாவற்றிலும் பல சிரமங்கள் இருக்கின்றன! இங்கு ஒரு நாடகத்தை அரங்கேற்றுவதற்கு முன்பாகவே இதற்கான செலவுகள் ஏராளாகின்றது! இதை;தவிர இதற்காக எல்லோரும் ஒரே நேரத்தில் இதற்கான நேரத்தை ஒதுக்குவது! இப்படி பல வேறுபாடுகள் இருக்கின்றன.
நவீன கவிதைகளின் பாய்ச்சலில் ஈழத்துக் கவிஞர்கள் சாதித்திருக்கின்றார்களா? உங்களைக் கவர்ந்த கவிஞரைக் குறிப்பிடுங்கள்.
சாதித்திருக்கின்றார்கள்! நிறையவே சாதித்திருக்கின்றார்கள். அதற்கு உதாரணம், தமிழ்நாட்டில் தரமான பதிப்பகங்கள் என மக்களால் அங்கீகாரம் பெற்றவைகளான கிழக்குப் பதிப்பகம், காலச்சுவடு, விடியல் பதிப்பகம் போன்ற இன்னும் சில பதிப்பகங்கள் ஈழத்துக் கவிஞர்களின் படைப்புக்களை விரும்பிப்பெற்று நூலாக்குகின்றார்கள்! இது சாதித்தல்தானே? அடுத்து என்னைக் கவர்ந்த கவிஞர்கள் பலர் இருக்கின்றார்கள். அந்தப் பட்டியல் மிக நீளமானது!
உங்கள் எழுத்துக்கள் முதலில் அச்சில் பார்த்த அனுபவம் எப்படி?
நானும்ஒரு சாதாரண மனிதன்தானே? இதில் நீங்களும் நானும் விதிவிலக்கல்லவே! முதன் முதலில் உங்கள் எழுத்தை அச்சில் பார்த்தவுடன் உங்களுக்கு ஏற்பட்ட அதே உணர்வுகள்தான் எனக்கும்.
புற்றீசல் போல வெளி வருகின்ற நூல் வெளியீடுகள் ஆரோக்கியாமாக இருக்கும் என்று நம்புகிறீர்களா? கூடவே, தமிழகப் பதிப்பாளர்களின் ஊடுருவல் இலக்கியம் வியாபாரிகளால் காவு கொள்ளப்படுவதாய் உணர்கிறீர்களா?
சுமார் ஜந்து வருடங்களுக்கு முன்னராக கேட்கப்படவேண்டிய கேள்வி இது!. நீங்கள் ஈழத்து படைப்பாளிகளின் நூல்களை சேகரிப்பவர், நான் வாரா,வாரம் நு.வு.சு வானொலியில் தயாரித்து வழங்கும் 'ஏடும் எழுத்தாணியும்' என்னும் நூல் அறிமுக நிகழ்ச்சிக்காக எமது படைப்பாளிகளின் நூல்களை தேடி வாங்குகின்றேன். நீங்களே சொல்லுங்கள் ஜந்து வருடங்களுக்கு முன்னர் வெளிவந்ததைப் போலவா இப்பொழுது நம்மவர்களின் நூல்கள் வருகின்றன?! அன்று தங்கள் எழுத்துக்களை அச்சில் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் எழுத்தின் தராதரம் பாராது! ஏன் இன்னொரு அனுபவமான படைப்பாளியிடம் ஆலோசனைகள்கூடக் கேட்காது புத்தகமாகப் பதிப்பித்துத் திருப்திப் பட்டுக்கொண்டவர்கள் பலர்!. இன்று நிலமை அப்படியில்லை!; தங்கள் படைப்புக்கள் தரமானவையானதாக இருக்கவேண்டும் என்பதில் படைப்பாளிகள் மிகக் கவனமாக இருக்கின்றார்கள். வருகின்ற படைப்புக்களும் ஓரளவு தரமானதாகவே இருக்கின்றது. இப்படியாக படைப்பாளிகள் விழிப்புணர்வு பெற்றிருப்பதால் பதிப்பாளர்கள் என்னும் பெயரில் இலக்கிய வியாபாரம் செய்த தமிழக பதிப்பாளர்களின் வரவும் இப்பொழுது குறைந்திருக்கின்றன என்பது எனது கருத்து.
நாடக மேடையேற்றம் சினிமா அல்லது தொலைக்காட்சியின் ஆக்கிரமிப்பால் தடைப்படும் ஆபத்துள்ளதாய் கருதுகிறீர்களா?
நிச்சயமாக ஆபத்து இருக்கின்றது! ஆனால் அழிந்துவிடாது! உதாரணத்திற்கு... அமைச்சூர் நாடகங்கள், சமூக நாடங்கள் பிரபலம் பெற்றபொது கூத்து நாடகங்கள், அரச நாடகங்கள், போன்றவைகள் கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்பட்டு வந்தன. ஆனாலும் அவை அழிந்து விடவில்லை! இன்னொரு விடயத்தையும் இங்கு சொல்லவேண்டும், சமூக நாடகங்களின் ஆதிக்கம் வலுவாக இருந்த காலத்தில் மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் ஆலயப்பிரவேசத்தை மையமாக வைத்து காத்தான் கூத்து இசையில் அரங்கேற்றப்பட்ட 'கந்தன் கருணை' என்னும் நாடகம் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு இலங்கையின் பல பாகங்களிலும் மேடையற்றப்பட்டதும் தங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனாலும் கந்தன் கருணைக்குப்பின் சமூகப் பிரச்சனைகளை முன் வைத்து கூத்திசையில் நாடகங்களை அரங்கேற்றுவதற்கு யாரும் முயற்சிக்கவே இல்லை. காரணம் கலைஞர்களின் கவனமெல்லாம் அமைச்சுர் நாடகங்களின் பக்கமே திரும்பியிருந்தது. அதேபோலத்தான் இப்பொழுது தொலைக்காட்சி நாடகங்களின் வரவும் Nமைடை நாடகங்களை ஓரங்கட்டுகின்றது. தொலைக்காட்சிக்காக ஒருமுறை பதிவு செய்துவிட்டால் அந்த நாடகத்திற்காக இன்னொருமுறை முயற்சிக்கவேண்டிய அவசியமில்லாதிருப்பதும் மேடை நாடகங்களின் வரவு குறைவதற்கு ஒரு முக்கி காரணமாக இருக்கின்றது.
தங்கள் கவிதையின் முதல் வாசகர் யார்?
முதல் வாசகர் என்று யாரையும் என்னால் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனாலும் எனது எழுத்துக்கள் பத்திரிகைகளில் வெளிவந்தவுடன் அவற்றைப்பற்றிய விமர்சனங்களை என்னுடன் பகிர்ந்துகொள்பவர்கள் பலர் இருக்கின்றார்கள். அதில் முதன்மையானவர் பாரிஸ் அறிவாலயம் புத்தகசாலை அதிபர் திரு.சிவதாஸ் அவர்களின் துளைவியார் திருமதி மோகனா அவர்கள். இப்படி இன்னு சிலர் இருக்கின்றார்கள்.
புதுவை இரத்தினதுரை- பாட்டுப்புலவன் பாரதி ஒப்பிடுங்கள்.
இருவரும் தங்கள் கவிதைகளின் மூலமாக தேச விடுதலைக்கு உரமூட்டியவர்கள். இருவரும் தாங்கள் வாழ்ந்த காலத்தில் தேசத்தின் விடுதலையைக் காணவில்லை (புதுவை இரத்தினதுரை அவர்கள் உயிருடன் இல்லையென்று இலங்கை அரசாங்கம் சொல்கின்றது)
மொழியை வாலாயப் படுத்தத் தெரியாதவனால் கவிஞனாக முடியும் என்று கருதுகிறீர்களா?
வாலாயப்படுத்துவது என்ற அந்தச் சொல்லுக்குப் பதிலாக அழகுபடுத்துவது என்றும் சொல்லாம். சொற்களை நீட்டிச் சொன்னால் அது வார்த்தை. அதை அழகுபடுத்திச் சுருக்கிச் சொன்னால் கவிதை. வார்த்தையை அழகுபடுத்துவது என்றால் குயில் கத்துகின்றது என்பான் ரசனை இல்லாதவன்! குயில் கூவுகின்றது என்பான் இசையை நேசிக்கத் தெரிந்தவன்! குயில் பாடுகின்றது என்பான் கவிஞன்!.
கவிஞர்களில் அனேகர் மொழி உடைந்து அல்லது வாழ்வு உடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது பற்றி...உதாரணம்...ஆத்மாநாம்,சிவரமணி...
சிவரமணியைப்பற்றி நான் முழுமையாக அறிந்திருக்கவில்லை. இருந்தாலும் பொதுவாகச் சொல்லுகின்றேன். இது மிகப்பெரியதொரு பொதுப் பிரச்சனை இதற்கு சாதாரணமாகப் பதில் சொல்லிவிட முடியாது. கவிஞர்களின் இந்த அவல நிலை பண்டைக்காலப் புலவர்கள்; முதல் இன்றுவரை தொடர்கின்றது. கவிஞர்களில் நூற்றில் ஒரு சிலர் மட்டும் புகழின் உச்சியில் நிற்கின்றார்கள்! இன்னும் ஒரு பகுதியினர் அந்தரத்தில் தொங்குகின்றார்கள்! இவர்களால் உச்சியைத் தொடவும் முடியவில்லை! கீழே இறங்கவும் முடியவில்லை! அடுத்த பகுதியினர்தான் தாம்; கற்ற புலமையால் முன்னேற முடியவில்லையே என்னும் மன விரக்தியில், மனம் வெறுத்து தற்கொலையை நாடுகின்றார். இதற்கு மாற்றுவழியொன்றை அனைவருமாகச் சேர்ந்துதான் தீர்வு தேடவேண்டும்.
நாடகம் பற்றிய வரலாறு பற்றி நாம் தொடுகையில் யார் யாரை கவனத்தில் கொள்ளலாம்?
நீங்கள் எந்தத் தளத்தில் நின்று இந்தக் கேள்வியைக் கேட்கின்றீர்கள் என்று புரியவில.லை! நான் ஈழத்தைத்; தளமாகக்கொண்டு கூறுகின்றேன். நாடகத்தின் மூலவேரே கூத்துத்தான்.இதன் மூலவர்கள் யார் என்பதை என்னால் கூறமுடியவில்லை. கூத்துக் கலையின் அடுத்த நாகரீக வடிவமாக பாடல்களும் வசனங்களும் கொண்ட அரச நாடகங்கள் தோற்றம் பெற்றன. இவைகளுக்கு உயிர் கொடுத்தவர்களாக அமரர்களான வி.வி.வைரமுத்து, குழந்தைவேலு போன்றவர்களே எனது ஞாபகத்திற்கு வருகின்றார்கள். கலையரசு சொர்ணலிங்கம் ஜயா போன்றவர்கள் அரசநாடகங்களையும் அதே நேரத்தில் சமூக நாடகங்களையும் அரங்கேற்றினார்கள். இவர்கள் காலத்தில் வாழ்ந்த மிகப்பெரிய கலைஞர்கள் பலர் இருக்கின்றார்கள். இதுபற்றி ஆய்வு செய்து அந்தக் கலைஞர்கள்பற்றிய தகவல்களைச் சேகரித்து அதை ஆவணப்படுத்தவேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கின்றது.
'வண்ணை' பத்திரிகை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.
அது ஒரு தாகத்தில் பிறந்த பத்திரிகை. கலைஞர்களைப்பற்றியும் கலை நிகழ்வுகள் பற்றியும் பெரிய பத்திரிகைகள் அதிக முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தால் 'வண்ணை' என்ற பத்திரிகை பிரவசமானது பதினெட்டு இதழ்கள் வெளியானது. அதன் பின் முடியவில்லை இருந்தாலும் தேவை ஏற்படும்போது எப்போதவது வரத்தான் செய்கின்றது.
இலக்கியம் வியாபாரிகளின் கைக்குள் அகப்பட்டுவிட்டதாக உணரப்படுகிறது. தங்களின் கருத்து என்ன?
உண்மைதான். ஆனால் அந்த வியாபாரத்தின் மூலமாக கிடைக்கப்பெறும் இலாபம் அந்த இலக்கியத்தின் மூலவேரான படைப்பாளிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டால் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் இன்று நிலமை அப்படியில்லையே இன்று எல்லாப் பதிப்பகங்களும் இலக்கியக் கொள்ளைக் கூடங்களாகவே இருக்கின்றன.
கருவை முதலில் உருவாக்கிவிட்டு எழுதுவீர்களா?அல்லது எழுதிச் செல்கையில் கருக்கட்டிவிடும் என்கிறீர்களா?
அத்திவாரம் இல்லாமல் கட்டிடம் கட்டமுடியாது! முதலில் ஒரு கருவை எடுத்துக்கொண்டுதான் கதையை எழுதத் தொடங்குவேன். சில கதைகள் அந்தக் கருவுக்ள்ளேயே அடங்கிவிடுகின்றது. பல கதைகள் எழுதிக்கொண்டு போகும்போது கற்பனை விரிவடைந்து எனது கருவைவிட்டு விலகினாலும் நல்ல பல செய்திகளை உள்ளடக்கிக்கொள்கின்றது. ஆனாலும் அத்திவாரம் ஒன்று கண்டிப்பாக இருக்கும்.
இறுதியாக,எழுதத் துடிக்கும் இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விருப்புவது என்ன?
எனக்கு அறுபது வயது வந்துவிட்டதால் அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்லக்டிய அளவிற்கு நான் பெரிய அறிவாளியாகிவிட்டதாக என்னை எடுத்துக்கொள்ளவில்லை. நானே கற்றுக்கொள்வதற்கு இன்னும் நிறைய இருக்கின்றது. இருந்தாலும் எனது அனுபவத்தைக் கொண்டு சொல்கின்றேன் எமக்கு எல்லாமே தெரியும் என்னும் அகந்தையில்லாமல் அனுபவசாலிகளுடன் கருத்துப்பரிமாற்றம் செய்துகொள்வது வெற்றிக்கு வழிவகுக்கும்.
காலங்கள் வாழ்த்தும் நூறு கலைஞர்களைத் தொடர்ந்து வெளியிடவிருக்கும் நூல் எது?
எனது மணிவிழாவையொட்டி 'வண்ணை 60' என்ற நூலை வெளியிட முயற்சித்தேன் காலம் போதாததால் அதை ஒத்திவைத்திருக்கின்றேன். மேலும் 'காலங்கள் வாழ்த்தும் 500 கலைஞகர்கள்' என்னும் நூலை தொகுத்துக்கொண்டிருக்கின்றேன். இன்னும் நிறையச் செய்யலாம் எல்லாவற்றிக்கும் பொருளாதாரம் இடம் கொடுக்கவேண்டும்.
எழுத்தில் நீங்கள் சாத்திருப்பதாக நினைக்கிறீர்களா?
அப்படி ஒரு நினைப்பு எனக்கு ஏற்படும்போது நான் இல்லாதிருப்பேன்.
நன்றி.
No comments:
Post a Comment