Friday, 9 July 2010




புதிய பாய்ச்சலில் ஒரு கவி நூல்.
---------------------------------
துவாரகனின் அழகான கவிதைகளைத் தாங்கி வந்துள்ள 'மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள்' நிறைய கதைகளைப் பேசி நிற்கிறது. நமக்கு தெரிகிற வெளிகள் மூச்சுக்காற்றால் நிறைந்துள்ளதை புரிய வைக்கிறார்.இந்த நூற்றாண்டின் முக்கிய பதிவு.இரத்தத்தால் செம்மண் மேலும் சிவப்பாக்கிய படி யுத்தம் தொடர்கிறது.கல்வி,சூழலின் கொடூரம்,அலைக்களிக்கும் வாழ்வு,அடிக்கடி அடிக்கடி அச்சுறுத்தும் அன்னிய பூதங்கள் ...பலரைக் கவிஞராக்கியுள்ளது.90 இற்குப் பிறகு முகிழ்த்த கவிஞர்களுள் முக்கியமானவர் துவாரகன் ஆவார்.'தினைப்புனம்'வெளியாடாக 78 பக்கங்களில் வந்துள்ள நூலில் எல்லாமே நல்ல கவிதைகளாய் தொகுத்துள்ளதால் சிறப்பிடம் பெறுகிறது.இன்றைய கவிஞர்கள் காட்சிக்கே முக்கியத்துவம் கொடுப்பதால் கவிதைகளின் யதார்த்தம் நமக்குள் ஊடுருவுகிறது.
ஒரு படைப்பாளிக்கு சூழலை விட அவனின் தேடுதலும் அவன் தருகின்ற கவிதையும் ரசிக்கும்படியாக இருக்கும்.துவாரகனின் படைப்பும் அவ்வாறே.கவிஞனின் மனச் சுமைகள் கவிதையூடாக வாசகனுக்கு கடத்தப்படுகிறது.அதனால்தான் இந் நூலில் உள்ள கவிதைகளை வாசகராகிய நாம் சுமந்து செல்கிறோம்.இன்றைய கவிஞனின் பார்வைக்கு நிறைய சேதாரமில்லாத படி அனுபவங்கள் கிடைக்கின்றன.ஒவ்வொரு நிமிடமும் தன்னையே கிள்ளிப் பார்த்து உயிருடன் இருக்கிறேனா- அல்லது உயிருடன் புதைக்கப்படுகிறேனா- என பார்த்துப் பார்த்து வாழ வேண்டியிருக்கிறது.
எப்போதும் பூட்ஸ் கால்களின் ஒலி,டிறக்குகளின் மரண உறுமல்,யார் இறப்பாரோ, யார் இருப்பாரோ எனும் விதி தெரியாப் பயணம்....கவிதை புரிய வைக்கிறது.இங்கு இவரின் மொழி கூட வலிக்கிறது.
கவிதைகள் வரம்புகளை உடைக்கும் போது தான் நல்ல கவிதைகள் கிடைக்கும்.எல்லா வடிவங்களையும் உள்ளடக்கியதான நமது இதிகாசங்கள் நல்ல தரிசனங்களை தந்துள்ளது.
எனினும் வரம்புகளை புதுக்கவிதைகள் மீறியதால் தான் புதுவை, தீபச்செல்வன்,என்.ஆத்மா,சித்தாந்தன்,வ.ச.ஐ.ஜெயபாலன்,சேரன்,மஜீத்,மலர்ச்செல்வன்,த.அகிலன்,அனார்,ரஷ்மி,கருனாகரன் என கவிஞர்களை எமது இலக்கிய உலகம் நமக்குத் தந்துள்ளது.தமிழ்க் கவிதைக்கு வேண்டுமானால் 2000 வருடங்கள் ஆகியிருக்கலாம்.ஈழத்து நவீன கவிதை நாற்பதிற்குப் பின்னராகவே தொடங்கியதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.அதுவும் இந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியையே வீச்சான கவிதைகளுக்கான களம் திறந்து விடப்படுள்ளதை உணரலாம்.
நம்பிக்கை தருகிற காலங்களை கணக்கிட்டபடி நகருகின்ற காலடித் தடங்களின் கீழே குருதி ஓடுகிற சங்கதிகளை அனாயாசமாக எழுதிச் செல்கிற துவாரகனின் பேனாவும் குருதி சொட்டுகிற மாதிரியான உணர்வு ஏற்படவே செய்கிறது.
பொதுவாகவே மனிதரிடையே சூசகமாக பேசும்முறை உள்ளது. அதுவும் யுத்த பூமியில் நின்று கொண்டு சுதந்திரமாக பேசுதலின் உரிமை மறுக்கப்படும் நிலையில் மேலும் சூசகமான பாஷையில் பேசுவது மேலும் வலுப் பெற்று வரும் நிலையில் துவாரகன் போன்றோரின் கவிதைகளில் குறியீட்டு பாஷைகளே அதிகம் தென்படுவதை உணரலாம்.மூச்சு என்று தொடங்குகையிலேயே அங்கு மரணம் பற்றி மனது சிந்திக்கத் தொடங்கிவிடுகிறது.
'துயர் கவிந்த பொழுதுகளோடு
அலைகிறேன்
கூட்டத்திலிருந்து தவறிய
தனியன் ஆடுகள்போல்..
இருப்பது புசிப்பது படிப்பது
எப்படி முடியும்?
மனிதர்கள் தவிர்ந்த
நீண்ட பொழுதுகளில்
நாய்களும் எலிகளும் குரங்குகளுமே
அதிகமும் சந்திக்கின்றன..
கவிதைகள் மீதான அதீத பயிற்சி படைப்பாளிக்கு மாத்திரமல்ல வாசகனுக்கும் தேவைபடுகிறது.அப்போது தான் ரசிக்கவும், அனுபவிக்கவும் முடியும்.
'இந்தத் தலைகள்
எப்போதும்
என்னை விரட்டிக்கொண்டு இருக்கின்றன.

தனியே வெட்டி எடுக்கப்பட்ட தலைகளுக்கு
சீப்புக் கொண்டு
எந்த ஸ்ரைலிலும்
என் கனவுகளில்
நன்றாக வாரிவிட முடிகிறது.
தளர்ந்து..இறுகி..
தனியே வந்து விழும்
உறுப்புகள் ஒவ்வொன்றும்
என் கைப்பைக்குள்
பத்திரமாக இருகின்றன..
தனியே வெட்டி எடுக்கப்பட்டஒரு ஆட்டின் தலைபோலவே..'
கவிதைகளுடன் நாமும் இறுகிப் போவது உணரமுடியும்.வாசகனை கவிதைகளுக்குள்
இழுத்து வந்து தான் ஒரு வெற்றியாளராகிறார்.
20ஆம் நூற்றாண்டில் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் கவிதை,புனைகதைகள்' பற்றி ஆய்வு செய்து தன் பட்டப் படிப்புக்கு சமர்ப்பித்ததன் மூலம் தன் தேடலின் மீதான ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.அதனூடான ஆழமான பார்வையின் தெறிப்பே இக் கவிதை வெளிப்பாடுகள்.கவிதைகள் அணைத்தும் உயிர்த் துடிப்பு மிக்கவையாக அமைந்துள்ளது .
'..துலாக்கயிறு அறுத்து
ஆழ்கிணற்றில் அமிழ்ந்தாலும்
தூண்டியிட்டு எடுத்திடலாம்.
ஆனால்
இது தூண்டியிட்ட வழ்வு
முழ்நிலவு வானில்
முகங் காட்டும் போதெல்லாம்
நிலவை ரசிப்பதற்கும்
நாதியற்றுப் போன வாழ்வு..'
எமக்கான வாழ்வு பற்றி அவர்களே தீர்மானம் செய்கின்ற கொடுமை ..அடையாள அட்டையை அடிக்கடி தட்டிப் பார்த்து சரி செய்தபடி நடக்கின்ற வாழ்க்கை...நண்பனைக் கூட நண்பன் என உரிமை கூற முடியாத இரும்புத் தொப்பிகளின் நடமாட்டத்தினை அனுசரித்துப் போகின்ற சூழல்..கவிதைகளில் தெர்கிறது.
'...விடியும் பொழுதின் நினைவுடன்
பாதி விழிகளின் துயிலில்
ஓரிரு சட சப்பு...
மீண்டும் கணப்பை மூட்டும்
நாடி நரம்புகள்
நத்தின் ஓலத்தில் நலிந்து கொள்ள
மீதமிருக்கும் அந்நியகால இருளில்
மருண்ட வாழ்வு
மீண்டும் விழித்துக் கொள்ளும்..
இந்த ஊரும் ஒழுங்கையும்
என்றுமே இப்படித்தான்!
குருட்டு வெளிச்சமும்..ஊமை நாடகமும்...'
ஒவ்வொரு நகர்விலும் ஏதோ ஒரு உந்துதல் கவிதை செய்ய தூண்டிவிடுகிறது.மொழி மீதான பற்று மொழியை ஆழ முனைந்து அதுவே தன் ஆழுமையை நம் முன் கொண்டுவந்து விட்டிருக்கிறது.நம்மையும் அவரின் கவிதைகள் முன் மண்டியிட வைக்கிறது.இவரின் நண்பர்கள் கவிஞர்கள் அல்லது கவிதையின் மீதான காதல் கொண்டவர்கள். இதுவும் இவரை வளர்த்து விட்டிருக்கிறது போலும்.
'..தம் நீண்ட பிரிவின் பின்னான
உறவுகளையும்
வெடித்துச் சிதறடிக்கும்
ஒரு வெடிகுண்டைப் போல்
காத்திருக்கிறது மரணம்..'

'...நாங்கள் பொதி சுமக்கும் ஒட்டகங்கள்
முதுகு முறிய பொதிசுமக்கும் ஒட்டகங்கள்
மூசிரைக்க இழுத்துச் செல்லும்
வண்டில் மாடுகள் போல்
நாங்கள்
முதுகு முறிய பாரம் சுமக்கத் தயாராய் இருக்கிறோம்
சாட்டையும் விரட்டும் இலாவகமும்
உங்களிடம் இருக்கும் வரை
நாமும் சுமந்து கொண்டே
இருப்போம்..'
கவிதைகள் திறமையாக வெளிப்பட்டதில் நல்ல கவிதைகளை நாம் சுவைக்க முடிகிறது.
ஈழத்து கவிதைகள் தொட்ட அளவிற்கு இதர படைப்புகள் தொடவில்லை என்பதும் உண்மை தான்.கவிதைகள் பரிட்சாத்தமாகவும் பிற படைப்பிலக்கிய முயற்சிகளின் முன்னோடியாகவும் ஈழத்தவர்களை திரும்பிப் பார்க்க வைத்த இலக்கியமாகவும் கொள்ளலாம்.மறுக்க முடியாதளவிற்கு துவாரகனின் கவிதைகள் புதிதாய் செய்திகளைச் சொல்வது போல் மொழியைத் தன் கைகளுக்குள் அடக்கிய படி கவிதைகளை நகர்த்திச் செல்கிறார்.ஒவ்வொரு கவிதைகளுக்குமான கோட்டோவிய படங்கள் கூட கவிதை பேசுகின்றன.
'இந்த-
வண்ணாத்திப்பூச்சிகளுடன்
கூர்வாள் உணர்கொம்பு கொண்டவையும்
இப்போ பறக்கத் தொடங்கிவிட்டன..
அவை தம் உணர்கொம்புகளைக் காட்டிப்
பயமுறுத்துகின்றன.
அவற்றுடன் இவை எப்போதும் ஒட்டியதுமில்லை..
ஆனாலும்.. அவையிப்போ
எல்லா நிற வணாத்திப்பூச்சிகளையும்
நன்றாக இனங்காணத் தொடங்கிவிட்டன...'
பேராசிரியர்களாக இவருக்கு வாய்த்தவர்களும் ஒரு வகையில் கவியாற்றலை வளர்த்தவர்கள்.கோ.கைலாசநாதன்,சனாதனன்,நேசன் போன்றவர்களின் ஓவியப்பங்களிப்பு சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.ஒரு கிழக்கிற்கான வாசலை இவர் கவிதைகள் திறந்தே வைத்துள்ளது.ஒரு வழி பாதையாக இருந்த ஈழத்துப் படைப்புலகம் விரிந்து சிறப்பான வடிவமாகவும்,பலரையும் வியப்புடன் பார்க்க வைத்துள்ளது.துவாரகன் போன்றோர்களுக்கு கவிதை உலகம் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளது.
-முல்லைஅமுதன்-

No comments:

Post a Comment