Friday, 9 July 2010



சுதந்திரம் என்பது...!இன்றைய பொழுதில்-
யாவரு போலவே
அகதி முகாமில் விழித்திருக்கிறோம்..
உன்-
அழைப்பு, கை குலுக்கல் எல்லாம்...
வழமை போலத் தான்
பொம்பர்களுடன் நடை பெறுகிறது.!
நீங்கள்-
சுதந்திரமானவர்கள்...
என்ற படி
செல்களும் ஏவப் படுகின்றன...
உலக நாடுகளின் ஆசீர்வாதத்துடன்...!.
குழந்தை, குமரி
கூடவே-
அப்பனும், ஆதாளும்
வீடிழந்து நிற்கின்றனர்...!
கையொடிந்த ராஜாவானாலும்
சுப்பர் சொனிக் விரடும்...
வெடி குண்டுகளை-
வானத்தில் விதைத்துவிட்டு
நட்சத்திரங்கள் என்று
குழந்தைக்கு காட்ட முடியுமா?

யாவர்க்கும் அகதி முகம்...
பரிசளித்தது...
நிச்சயம் யார் என சொல்..!
விடை காணாது துடிக்கிறாய்.!
சூரியனைப் பிடித்து குழந்தைக்கு
பரிசளிக்க முடியவில்லையே...
என நிலவிடம்-
முறையிட்டால் எப்படி?
பூமி கிழிபடும் என மௌனித்தது போதும்..
உரத்துச் சொல்...
'சுதந்திரம் என்பது பற்றி'
வானம் நொருங்கட்டும்..!
-முல்லைஅமுதன்-
7/02/97



நானும் நீயுமான...என்னை நீங்கள்
நிறம் பிரிக்கலாம்...
அது-
உங்கள் உரிமை..
இவன்-
இந்த தெருவில் வசிப்பவன்.
இன்னாரின் மகன்
என்றாலும்-
எதுவும் சொல்வதற்கில்லை..!
மழை-
எனக்கும் சேர்த்தே பொழிகிறது.
என்பதை-
மறுக்கிற போது தான்
கோபம் வருகிறது..!
பனிப்பூக்கள்
உன் வீட்டிலும் பூத்தது...
என் தவ்று எதுவுமில்லை..!
என் மரணம் பற்றி
நீ-
சிலாகிக்கும் போது
நெருப்பை
துப்ப மனது விரும்புகிறது.
நீ யார் என்
மரணம் பற்றி சொல்ல...?
கடவுள் என்கிறய்.
அப்படியானால்
இத்தனை நாள்
வழிபட்டது யாரை?
முகம் சிதைகிற-
ஒரு நாள் வரும்..
அப்போது
என் வினாவுக்குரிய
பதில்
உன்னிடமிருந்து
நிச்சயம் வரு..!
முல்லைஅமுதன்-
20/05/90

.

No comments:

Post a Comment