Saturday 28 May 2011

முல்லை அமுதனுடனான நேர்காணல் :-

1981ல் நித்தியகல்யாணி கவிதை நூலுடன் ஆரம்பித்த இவரது எழுத்துப்பயணம் 14வது வெளியீடாக வந்துள்ள இலக்கியப்பூக்கள் வரை தொடர்கிறது. ஆரம்பத்தில் நாடகம், கவியரங்கம் என தொட்டு வந்த இவர் ஈழத்துநூல் சேகரிப்பாளராகவும் சஞ்சிகையாளராகவும் திகழ்கிறார். இவர் எமக்காக வழங்கிய செவ்வி. (ஆ-ர்)

1. தங்கள் எழுத்துப்பணிபற்றி...?
1981 வரை நாடகம், கவிதை, என தொடர்ந்த என் இலக்கியப்பயணம் நித்தியகல்யாணி எனும் கவிதை நூலுடன் மேலும் இலக்கியப் பயணத்துடனான எனது வாழ்வும் இறுக்கம் கொண்டது இன்றுவரை தொடர்கிறது.
2. உங்களது நூல்சேகரிப்புப் பற்றி, அது சார்ந்த அனுபவங்களைக் கூறுங்கள்...
ஈழத்தில் இருந்த போதே தந்தையுடன் நானும் நூல்களை வாங்கி வாசிப்பதுடன் சேகரித்தும் வந்துள்ளேன். இன்று புலம்பெயர்ந்த பின் ஈழத்து இலக்கியம் சார்ந்த நூல்களை ஆவணப்படுத்த எண்ணி சேகரிப்புப்பணியில் ஈடுப்பட்டு வருகிறேன். ஆத்ம திருப்தி எனினும் வலிகள் அதிகம். அச்சுறுத்தலும் அதிகம்.
3. புலம்பெயர்ந்தோர் படைபிலக்கியம் சார்ந்து நீங்கள் அடையாளப்படுத்தும் எழுத்தாளர்கள் சிலரைக்குறிப்பிடுங்கள்...
என். கே. மகாலிங்கம், ஷோபாசக்தி, குமார்மூர்த்தி, செழியன், கி.பி. அரவிந்தன், கருணாகரமூர்த்தி, மு. புஸ்பராஜன். பாலகணேசன், இப்படி நீள்கிறது பட்டியல்.
4. இலக்கியம் இலக்கண விதிகளை உடைத்தெறிவது ஆரோக்கியமானது என நினைக்கிறீர்களா?
நிச்சயமாக. சில சமயம் கசப்பாகவும் இருக்கும். புதிய வீச்சுடனான நமக்கான உலகத்தை சிருஸ்டிக்க இலக்கிய விதிகளை உடைத்தெறிவது சாத்தியப்பட்டுத்தான் ஆகவேண்டும். புலம்பெயர் இலக்கியம் இதற்கான நெம்புகோலாக இருக்கும்.







5. காற்றுவெளி சஞ்சிகை பற்றி...
நினைத்தபோது வரும் இதழாக 13வது இதழ்வரை விளம்பரம் எதுவுமின்றி தனித்தே இலக்கியம் சார்ந்து வெளிவருகிறது. படைப்பாளிகளின் ஒத்துழைப்புடன் வெளிவரும் இதழ் புதிய படைப்பாளிகளுடன் பலரைச் சென்றடைய வழிசமைத்துள்ளது. சாதாரண விளம்பர சஞ்சிகைகள் போலன்றி ஆர்வம் உள்ளவர்களிடம் நேரடியாக சென்றடைகிறது.
6. புற்றிசல் போல் புலம்பெயர் எழுத்தாளர்களிடம் ஊடுருவும் தமிழக பதிப்பாளர்கள் பற்றி என்ன கூறவருகிறீகள்...
ஒரு வழிப்பாதையாக கைலாசபதி, டொமினிக்ஜீவா, பத்மநாபஐயர், காவலூர் ஜெகநாதன் போன்றோரால் சிரமத்துடன் தமிழக எழுத்தாளர்களுக்கு அறிமுகமான எமது ஈழத்து இலக்கியம் 83 இனக்கலவரத்திற்கு பிற்பாடு ஈழமக்கள் புலம்பெயர்நாடுகளில் தங்களைப்பதிய வைத்த பின்பு எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகமாக எதுவித சிரமமுமின்றி எம்மை நாடி பதிப்பகங்கள் நம்மை நாடி வர ஏதுவாயிற்று.
7. ஈழத்து இலக்கியம் அதன் செல்நெறி பற்றி....
அன்றைய எழுத்துப்போல இல்லாது காலச்சூழலில் சிந்தனை விரிவாக்கம் தொழில்நுட்ப வளர்ச்சி பதிப்பு சார்ந்த நெருக்கம் என்பவற்றால் எமது இலக்கியம் ஒரு வீச்சைத் தந்துள்ளது எனினும் உலக இலக்கிய தரத்திற்கு வரவில்லையே என்ற ஆதங்கமும் உள்ளது.
8. நீங்கள் தொகுத்த இலக்கியப்பூக்கள் வாசகர்களிடையே இருந்த வரவேற்பு எப்படி?
ஒரு வருட தேடுதலில் இருந்து நண்பர்கள் மூலம் கிடைத்த கட்டுரைகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன். 376 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்நூல் பலருக்கும் சென்று சேர்ந்துள்ளது. ஆங்காங்கே விமர்சனங்களும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இதனால் பகுதி 2 க்கான வேலையை ஆரம்பிக்கும் உற்சாகம் வருகிறது.







9. ஆரோக்கியமான விமர்சனங்கள் எழுத்தாளனை வளம்படுத்தும். இதை எற்றுக்கொள்கிறீர்களா?
விமர்சனங்கள் வாசகனையும் படைப்பாளியையும் இணைக்கும் கருவியாகும். படைப்பாளியை மீண்டும் மீண்டும் எழுத வைக்கிற உற்சாகத்தையும், படைப்பை – படைப்பாளியை ஆர்வத்துடன் தேடி வாசிக்கும் உந்துதலையும் தரவேண்டும். கூடவே விமர்சகனும் நூல்சார்ந்து அல்லது அதன் இலக்கியம் சார்ந்த பரிச்சயம் உள்ளவனாக இருக்க வேண்டும்.

10. ஈழத்து நூல்கண்காட்சி மூலம் ஒரு அசைவை ஏற்படுத்தியதா?
நிச்சயமாக. பலரை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. சிலரைச் சிந்திக்கவும் வைத்துள்ளது. எனினும் அது தந்த வலிகள் ஏராளம்.
11. இங்கு எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீகள்...
முள்ளிவாய்க்கால் வரை காவு கொள்ளப்பட்ட எம் கனவுகள், களவாடப்பட்ட எம் நிலங்கள், மரணித்த எம் மனிதர்களின் துயரம் சார்ந்த அவலங்களை எழுதுங்கள். அதுவே இன்றைய தேவையும் ஆகும்.

*ஈழநாடு ஆசிரியரால் வெளியிட இருந்த சஞ்சிகை ஒன்றிற்காக பெறப்பட்ட நேர்காணல் :சஞ்சிகை இதுவரை வரவில்லை(13/06/2010)

No comments:

Post a Comment