
நெருங்கி வந்துவிடாதே
புத்தாண்டே....
எனக்கான மண்ணில்
அந்நியன்
குடிகொள்கையில்
எப்படி
நீ குதூகலமாய் வருவாய்?
வரவேற்க முடியாது போ.
பசி தின்ற என் குழந்தை
இறந்து விட முன்
உணவு தந்திருக்கலாம்
கால்களே இல்லை
நீ சப்பாத்துடன்...
பள்ளிக்கூடம் போய்ப்
பலநாட்கள்...
பள்ளிகளே அகதி முகாங்களாய்..
மழை வரும் என்று அண்ணாந்து
பார்க்கும் போதெல்லாம்
அவர்களின் எரிமழைதானே
எம்மை வந்தடைகிறது.
வரவேற்க முடியவில்லை.
போய்விடு புத்தாண்டே!
எனக்கான கிழக்கும்
கந்தகக் காற்று
தொடாமல் விடியவேண்டும்.
வழமான என் மண்ணின் பயிர்களுக்காய்
மனிதக்குருதியே நீர்ப்பாசனமாய்...
வழமான என் கனவு
சிதைந்து நாட்களாயிற்று.
அம்மா இறந்தாள்
தங்கை நஞ்சு கடித்தாள்
என் பிள்ளை காணமல் போனான்.
பிறகு
புத்தாண்டு வந்து என்னவாகப் போகிறது.
களவாடப்பட்ட நாற்சார் வீடு
முற்றத்து மாமரம்
தைலாப் பெட்டி
இன்னும் இன்னும்...
மீண்டும் என் வசப்பட வேண்டும்.
எனினும்
என் உடல் எரியுமுன்
எதிரியை அழிக்கும்
சூட்சுமம் தெரிந்தால்
வந்து பார்...
பார்க்கலாம்
முல்லைஅமுதன்
No comments:
Post a Comment