Saturday, 4 September 2010


நட்புப் பூக்களை தன் மீதே சூடிக்கொண்ட பெருஞ் செடி !
கலை இலக்கிய செயல்பாடுகளில் புலம் பெயர்ந்த பின்னும் ஆளுமையுடன் செயல்பட்டு வருபவர்களில் சிறப்பிடம் பெறுபவர் வண்ணை தெய்வம் ஆவர். கம்யூனிஸ சித்தாந்தங்களில் தன்னை வரித்துக் கொண்டு டானியல், பெனடிக் பாலன், கார்த்திகேசன் என நீண்ட வரிசைக்காரர்களை நட்புடன் பேணி வந்ததுடன், தான் வாழ்கின்ற சூழலுக்கேற்ப பலரையும் நேசிக்கின்ற பக்குவத்தையும் , மனித நேயமும் கொண்டவராக பாரிஸில் வாழ்ந்து வருபவர் வண்ணை தெய்வம் அவர்கள். ஊரில் இருந்த போது எனது நாடக முயற்சிகளுக்கு பல அரிய இயக்குனர்கள் களம் அமைத்துத் தந்தது போல வண்ணை தெய்வத்துக்கும் பல இயக்குனர்கள் களம் அமைத்துத் தந்திருந்ததனால் தான் இன்று நமக்கு நல்ல கலைஞனை, எழுத்தாளனை தந்திருக்கிறது.
பண்பாளர், மனித நேயம் மிக்கவர்.
எனது நூலகத்தைப் பார்த்துப் பிரமித்தவர். கண்காட்சியினை நேரில் வந்து பாராட்டியதுடன் பலருக்கும் எடுத்துச் சொன்னவர்.இந்த பண்பு யாருக்கும் வராது.
பத்திரிகை, வானொலி, மேடை என் தன் உலகத்தை பரந்த அளவில் விரித்து கிளை பரப்பி நிற்பவர்.வானொலியில் கவிதைக்கான நிகழ்வுகள் மூலம் கிடைக்கப் பெற்ற கவிதைகளை தொகுத்து 'வானலையில் எங்கள் கவிதைகள்' தொகுதி ஒன்று/இரண்டு என வெளியிட்டு பலரின் பாராட்டைப் பெற்றவர்.தனித்து நின்று பல நிலைகளில் சாதனை படைத்தவர்களை-அவர்களின் தகவல்களைத் தொகுத்து 'காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக கலைஞர்கள்' எனும் பாரிய தொகுப்பினைத் தந்து நம்மைப் போன்றவர்களுடன் மேலும் நட்பாய் இணைந்தார்.
ஊரில் நான் தேடித் தேடி பார்த்த நாடகங்களுள் 'சாவுக்குச் சவால்' நாடகமாகும். அப்போது தெரியாது இப்படி இப்போது நெருங்கி வந்திருப்போம் என்று...!
அந் நாட்களில் அதிகமாகப் பேசப்பட்ட யோ.பெனடிக் பாலனின் 'நீ ஒரு பெக்கோ' நாடகம் நூலாக வருவது பற்றி பேசப்பட்டிருந்தது.ஊர்த் திருவிழாக்களில்,வாசிகசாலை ஆண்டு விழாக்கள் தவிர்ந்து நல்ல நாடகங்களை வீரசிங்கம் மண்டபம் மேடையேற்றம் கண்டது.கொழும்பிலிருந்து வந்து 'ஹவுஸ்புல்' நாடகங்களை தந்து செல்லும் போதெல்லாம் நாம் வருத்தப்பட்டதுண்டு.எமது கிராமத்து கலைஞர்களின் கலைகளை அங்கீகரிக்காத சூழலும் இருந்தது.மாறாக சில நாடகங்கள் (மச்சானைப் பார்த்தீங்களா?-நல்ல சூடு-அலாவுதீன்-வடக்கும் தெற்கும்-சந்தர்ப்பம்-சாவுக்குச் சவால்-தங்கையா? தாரமா?)மக்களின் வரவேற்பை பெற்ற நாடகமாய் அமைந்தது எனலாம்.
நாடகம் தருபவர்களின் வலிகள் அதிகம். என்னைப் போலவே படைப்பாளர்களிடமிருந்து நாடகங்கள் கிடைக்காத வருத்தத்தில் நானே எழுதியது போல வண்ணையும் எழுதி மேடையேற்றினார். எந்தச் சேதாரமுமில்லாமல் நமக்கு இன்னொரு கலைஞன் கிடைத்தது பாக்கியமே.
1983இல் 'சாட்டை' எனும் பத்திரிகையின் மூலம் பத்திரிகையின் மிதான தன் கவனத்தையும் பெற்றவர்.இன்று பல ஒலி/ஒளி/அச்சு ஊடகங்களில் தன் எழுத்துப் பணியைத் தொடர்ந்தாலும் பாரிஸில் 'சிரித்திரு' 'வண்ணை' சஞ்சிகைகள் மூலம் தன்னை ஆளமாகத் தடம் பதித்தவர்.அமரர்.இளவாலை அமுது ஐயாவின் கரங்களினால் (2007)கலைஞர் காவலர்' பட்டம் பெற்றதைப் பாக்கியமாகக் கொள்கிறார்.பலரையும் கெளரவிக்கின்ற மனங் கொண்ட கலைஞரை நாம் பாராட்டுவதுடன் வாழும் போதே கெளரவிப்பது பொருத்தமான நிகழ்வே.அவர் எடுத்து வைக்கின்ற தடங்கள் இன்னும் பல படைப்புக்களை,பாராட்டுதல்களை பெற்றுத் தரவேண்டும் என இலக்கிய உலகம் காற்றுவெளியுடன் வாழ்த்தி நிற்கிறது.
முல்லை அமுதன்

No comments:

Post a Comment