Friday 4 June 2010

காம்பு ஒடிந்த மலர்-தமிழ்ப்பிரியா




70இற்குப் பிறகு முகிழ்த்த படைப்பாளர்களில் தமிழ்ப்பிரியா குறிப்பிடத்தக்கவர்.சுடரில் எழுதிய 'வீணையில் எழும் ராகங்கள்'குறுநாவலுக்குப் பிறகு அவரின் படைப்புக்களை காணாத நம் போன்ற வாசகர்களைஏமாற்றாதவகையில் 90 அளவில் பாரிஸ் ஈழநாடு பத்திரிகையில் சிறுகதை ஒன்றை தந்ததின் மூலம் மீண்டும் தன் இருப்பை/வருகையை உறுதிப்படுத்திக் கொண்டார்.இவர் பிறந்தகமான ஏழாலை இலங்கையர்கோன் முதல் இன்றைய படைப்பாளர்கள்வரை(ஜனகமகள்சிவஞானம்,பண்டிதர்.ஆறுமுகம்,சி.வைத்தியலிங்கம் எனப் பலர்)இலக்கிய உலகத்தை அலங்கரித்தவர்கள்.கல்வி,இந்திய நூல்களுடனான பரிச்சயம்,ஆங்கில இலக்கியங்களூடான தேடல் இவர்களை பாதித்ததை உணர முடியும்.
எப்படி இலக்கியம் என்றவுடன் குரும்பசிட்டி ஞாபகம் வருகிறதோ ஏழாலை என்றவுடன் எழுத்தாளர்கள் கண்முன் தெரிகிறார்கள்.அந்த வகையில் தமிழ்ப்பிரியாவுக்கும் இலக்கியத்தில் ஓர் இடம் உண்டு என்பதை சொல்லமுடியும்
.இவரின் கண் முன் தெரிவாக இருந்தது சமூக அவலங்களே.மென்போக்குடனான சம தளத்தில் ஒரே சீராக அமைகின்ற கதைகளே இவருடையவை எனலாம்.சாதி,ஏற்றத்தாழ்வு,வஞ்சகம்,மனதுள் புதைந்து போகிற மெல்லிய காதல்...இப்படி நகர்த்திச் செல்கிறதான முறை நாம் மேல் சொன்ன வழி முறைகளே.நிறைய வாசித்த அருட்டுணர்வும் இவரை எழுத வைத்திருக்கலாம்
.86இற்கு பிறகு இவரின் நாட்டைவிட்டு வெளியேறுதல் நிகழ்வு நடந்தேறுகிறது.இவரின் கருத் தெரிவுகள் இப்போதும் பொருத்தமானதாக இருப்பது ரசிக்கும் படியாக இருக்கிறது.81 இல் எனது நூல் வெளிவந்த காலத்தில் காசோலை அனுப்பி நூலை பெற்றுக் கொண்டதில் இவரின் எழுத்தாளனை நேசிக்கும் பக்குவம் புரிந்தது. அக்காலத்தில் அதிகமாக எழுதியத நான் நினைத காவலூர்.ஜெகநாதன் போல் இவரும் வேகமாக எழுதினார்.எனினும் எழுத்தின் நிதானம் நிறையப் பேரிடம் சென்று சேர்த்திருகிறதை உணர முடியும்.அதிகம் அலட்டிக் கொள்ளாத காட்சிப்படுத்தல்கள்,நறுக்குத் தெறித்தாற்போல சொல்லடுக்குகள் இன்னும் எழுதியிருக்கலாமோ என நினைக்கத் தோன்றுகிறது.
குடும்பம்,இதர சூழலால் பலர் எழுதாமல் போனது துர்ப்பாக்கியம் தான் எனினும் இவரிடமிருந்து(ஜனகமகள் சிவஞானம்,மண்டைதீவு கலைச்செல்வி,கலைலங்கா ராசையா,மீசாலை கமலா இவர்களின் எழுத்துகளும் வரவேண்டும்)மொழி மீதான ஆர்வம் அதை வசப் படுத்துகிற லாவகம் கதைகள் மீதான வாசகனின் ஆர்வம் அதிகமுள்ளது.இளைஞர்களின் ஆயுதப்போராட்டம் இவரைப் பாதித்திருந்தாலும் எழுத்தில் இவரின் மென் போக்குத் தன்மை அதிகமாக எழுத்தை பாதிக்காமல் எழுதித் தப்பித்து கொள்கிறார்.இத் தொகுதியில் 14 கதைகள் இணைக்கப் பட்டுள்ளன.தன் கண் முன் காணும் நிகழ்வுகளை சேதாரமில்லாமல் உள்வாங்கி தன் மொழியில் எழுதி எம்மை வசப்படுத்துகிறார்.
ஒவ்வொரு கதைகளிலும் தமிழக எழுத்துக்களின் தாக்கம் தெரிகிறது.காம்பு ஒடிந்த மலர்,சுமைகள் சுமக்கும் இதயம் இரு கதைகளிலும் மெல்லியதாய் சோகம் இழையோட கதையை நகர்த்திச் செல்வதை தன் வெற்றியாக்கிக் கொள்கிறார்.முகமே தெரியாத ஒருவனுக்கு அல்லது ஒருவனை- வாழ்வை ஒப்படைத்து அல்லது அவனின் நினைவுகளுடன் வாழ நிர்ப்பந்திக்கப் படுகிற கொடுமையும் நம் முன் நிகழ்கின்ற சம்பவம் தான் எனினும் அவற்றை தன் கதைகளில் லாவகமாக எடுத்தாள்கிற திறமை தமிழ்பிரியாவிற்கு கிடைத்திருக்கிறது.வாழ்க்கை பற்றிய இவரது சிந்தனை...'அந்தரங்க சுகங்களில் மட்டும் பங்கு பற்றுவதற்குத்தான் கணவன், மனைவி என்று வேண்டுமா?அதற்குப் பெயர்தான் குடும்பமா?அதற்காக மட்டும் தான் வாழ்க்கை என்று ஒன்று அமைக்கப் படுகின்றதா?இல்லையே அதற்கு மேலும் குதூகலங்கள் நிறைந்தது தானே வாழ்க்கை'..

'மற்றவர்கள் சொல்லாவிடாலும் என் வயது தானே?இன்னமும் மூன்றுவருடங்கள் போனால் முக்கால் கிழவியாகிவிடுவேன்.எனக்கு வாழவேண்டும் என்ற ஆசை கிடையாது.எனக்குள்ள ஆசை என்னவென்றால்..'ஒரு அனுபவித்த அனுபவசாலியின் எழுத்தாகவே கொள்ளமுடியும்
. இவரின் கதைகள் அனைத்தும் மீள் வாசிப்புச் செய்யும் பட்சத்தில் புதிய செழுமையுடன் கதைகளை இவரிடமிருந்து எதிர் பார்க்கலாம்.
'பார்வைகள் கோணலாகும் போது' கதையில் நிவேதாவின் மனக் குமுறல்,ஆணின் இயல்பான வார்த்தை பிரயோகங்கள் கூட அவளை தூக்கி நிறுத்தி கோபங் கொள்ள வைக்கிற உணர்வு கதையில் நம்மையும் லயிக்க வைக்கிறது.நம்மிடையே இன்றும் உலவி வருகிற பாத்திரங்களை கண்முன் நிறுத்துகிற போது நாமாகிவிடுகிறோம்.பெண் பார்க்கிற படலத்தினூடாக காட்சியை அமைத்து கதையை நகர்த்திய விதம் பிடித்திருகிறது.'..என் கனவுகளோடு ஒத்துப் போகிற-கோணலில்லாத பார்வை ஒன்றிற்குத்தான் என்னால் சொந்தமாகமுடியும்'...திடமான வார்த்தைப் பிரயோகம்...நிவேதாவின் கம்பீரம் தெரிந்தது.
ஜெகன் என்ற பாத்திரத்தின் கோபத்தை தன் தந்தையின் இழவு வீட்டில் வந்து சாதிக்கிற நிகழ்வை -அழகாக படம் பிடித்துக் காட்டுகிறார்.கதையில் நேர்த்தி தெரிகிறது.தனக்கு முன்னே நடக்கின்ற சமூக வாழ்வியலை உள் வாங்கி அவற்றை வாசகனுக்குத் தருவதில் தமிழ்ப்பிரியாவின் மொழி ஆளுமை கை கொடுக்கிறது.
ஒரு படைப்பாளிக்கு மொழியை ஆளுகின்ற தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டும்.
.தாத்தாவும் ஜெகனும் காரசாரமாக உரையாடுவதன் ஊடாக சில செய்திகளை நமக்குத் தந்துவிடுகிறார்கள்.அதனுள்ளும் ஆணுக்கொரு நீதியும் பெண்ணுக்கொரு நீதியும் வழங்குகிற சமூகப் பார்வை முன் நிறுத்தப்படுகிறது.'நெஞ்சில் நிலைக்காத அந்த உறவிற்கு என்னால் உரிமை பாராட்ட முடியாது.சமூகத்திற்குக் காட்டுவதற்காக என்னால் போலியாக நடிக்க முடியாது..'இளமையும் முதுமையும் மோதிக் கொள்கிற போது அனுபவ முதிர்ச்சி தெரிகிறது.
இவரின்கதைகள்சிந்தாமணி,ஈழநாடு,வீரகேசரி,தினகரன்,குங்குமம்,சுடர்,அமிர்தகங்கை,மல்லிகை ஆகியவற்றில் வந்துள்ள போதும் நூலாக வருகையில் உண்டாகிற பூரிப்பு பெண்ணின் சுகம் போன்றது
வறுமை காரணமாக வாழ்வைத் தொலைத்த மானுடத்தின் வலியை ஒரு பிச்சைக்காரப் பாத்திரத்தின் ஊடாக சொல்ல முனைகிற கதை மனதைத் தொடுகிறது.'மீளாத சகதி மலர்கள்'கதையை நகர்த்தும் பாணி சிறப்பைத் தருகிறது.
'நாங்கள் பட்டிக்காடுகள்'கதையில் நாகரீகம் என்ற போர்வையில் நமது பெண்கள் சீரழிந்து போவதை சொல்கிறார்.பாரதி சொல்லிச் சென்ற புதுமைப் பெண்கள் பற்றிய கருத்தை பிழையாக கற்பிதப்படுத்தி வாழும் பெண்கள் பற்றி கதை சொல்லாமல் சொல்லி வைக்கிறது.கதையில் வார்த்தைகளை கோர்த்து முத்து முத்தாய் தெளித்தது போல உணர்வு ஏற்படுகிறது.நல்ல பயிற்சி தெரிகிறது.
காதலித்து திருமணம் செய்தவர்கள் விவாகரத்து செய்கிறதை வலிக்கின்றவாறு எழுதியுள்ளார்.கற்பனை சிதறாமல் ஒவ்வொரு நிகழ்வையும் நகர்த்திச் செல்கிற பாங்கு பிரமிக்க வைக்கிறது.அகல்யா,சுமல்யா பாத்திரங்களூடாக காரமாகவும்,எமக்கும் புரிகிறமாதிரி எழுதிஉள்ளார்...'குங்குமச் சிமிழுக்குள் இருக்கும் வரைதான் குங்குமத்தின் புனிதத் தன்மை போற்றப்படும்.அது வெளியே-இப்படி நிலத்தில் சிதறிப்போனால்,பிறகு அதைக் குங்குமமாக யாரும் எடுத்து நெற்றியில் அணிய முன் வரமாட்டார்கள்.மணமான பெண்ணும் இதே குங்குமம் போன்றவள்தான்..'பெண்ணாக நின்று எழுதுகிறபோது அதன் வீச்சு அதிகம் தான்.'விதி எழுதாதகதை’ உணர்த்தி நிற்கிறது..
மனிதாபிமானம் அற்று பயணிகளுடன் மோதும் கண்டக்டர்கள் பற்றியும்,பயணிகள் மூலம் அதை உணர்த்தி நிற்கிற கதை'மனிதாபிமானம் மாறுகிறது'கதை சொல்கிறது’
ஷங்கர்,அகல்யா அன்ரி பாத்திரத்தினூடாக சம்பவங்களை சொல்லி நம்மையும் நிமிர்ந்து உட்காரவைக்கிறார்.ஆண் என்றதும் குழந்தையை காரணம் காட்டி மறுமணம் செய்து வைப்பதும் அதனையே பெண்ணுக்கு எனில் விதவை பட்டம் சூட்டி அவளின் ஆசாபாசங்களை புரிந்து கொள்ளாத படி அல்லது புரிந்து கொள்ள விடாதபடி சமூகச் சட்டங்களை முன்னிருத்தி அவளுக்கு முள்முடியைச் சூடிவிடுகிற சமூகத்தை நினைக்க வைக்கிற அதே நேரம் ஆணுக்கு குழந்தைகளைச் சாட்டி மறுமணம் செய்து அழகு பார்க்கிற நிகழ்வையும்,அவனின் உணர்ச்சிகளை புரிந்து கொள்கிற உறவுகள்...சரியாகவே சாடுகிறார்.'கருவிகள்'கதைஅழகாக வந்துள்ளது.
கோவிலை பக்தர்கள் வலம் வரவேண்டும்.வியாபாரிகள் வரக் கூடாது.கோவிலை வியாபார பொருளாக்குகிற கோவில் தர்மகர்த்தாக்களின் கதை சொல்கிறது'தரம் அதர்மங்கள்' கதை
'அவனும் ஒரு மனிதன்'என்ற கதையூடாக இன்னொரு கண்டக்டர் கதை வருகிறது.தினசரி பயணிகளிடம் ஐந்து பத்து என சதங்களை அபேஷ் பண்ணுகிற கண்டக்டருக்கு சிறுவன் மூலம் மனிதபிமானத்தை புரிய புரியவைக்கிறதை பைத்தியக்காறன்,அவள், சிறுவன் சக பயணிகள் பாதிங்களில் செதுக்கி வைக்கிறார் ஆசிரியர். ..'அவனை பைத்தியக்காரன் என்றுநான் நினைக்கேல்லை.ஏனென்றால்..மனிதர்கள் எல்லோருமே பயித்தியக்காரர்கள் தான்.எனக்கு நன்றாகப் படித்து கை நிறைய உழைக்கவேண்டும் என்ற பைத்தியம்..'இப்படியாக விளக்கம் நம்மை தொடுகிறது.
சிறுகதைக்குள் உலக அனுபவங்களையே கொண்டு வரமுடியும்.யதார்த்தமான நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டுகிற திறமை வாய்ந்தவராக தமிழிபிரியா முன் நிற்கிறார்.
வேலைக்குப் போகிற அப்பா,அம்மா,அம்மம்மாவிடம் வளர்கிறவள் வளர்ந்து பெரியவளானதும் தனக்கென்று திருமணம் என்ற நிலை வருகிற போது தான் பாசத்துக்காக ஏங்கியது போல தன் பிள்ளைகளும் ஏங்குகிற நிலை வரக்கூடாது.தன் கணவனையே கவனிக்க முடியாத மனைவியாக வாழவும் முடியாது.இந்த நிலையிலும்தானே திடமாக தன் தாயிடம் தன் முடியை சொல்லுகிற துணிச்சலான பெண்ணை படைத்து தமிழ்ப்பிரியா தானும் நிமிர்ந்து நிற்கிறார். பெண்ணின் மன உணர்வுகளை சொல்ல ஒவ்வொரு கதைகளூடாக வித்தியாசமான வார்த்தைக் கோர்வைகளுடன் முத்தான மாலையாக தருகிற போது வியப்பு மேலிடுகிறது.

கணவனின் கொடுமையினால் பிரிந்து வாழ்கிற மிஸிஸ்.பாலசிங்கம் பற்றிய கதையை சொல்லி நிற்கிறது'மாற்ற்ங்கள்' கதை.வித்தியாசமாக சொல்லப்பட்ட கதை.தன்/பிற அனுபவங்கள் சார்ந்த நிகழ்வையே கதாசிரியர் நம் முன் வைப்பதின் மூலம் வெற்றி பெற்றிருக்கிறார்.சிறுகதையின் வெற்றி ஆசிரியர் தருகிற சேதி சரியாக உள்வாங்கப்படும் போது தான். 'இல்லை ஷங்கர் அவசரப்பட்டுச் சொல்லக் கூடாது.இப்படியான சந்தர்ப்பங்களிலை தான் நாங்கள் சற்று யோசித்துப் பார்க்க வேணும்.கணவனே பெரிது என்று நினைக்கிற ஒரு குடும்பத்திலை...பண்பாட்டோடை வளர்க்கப்பட்ட ஒரு வயதான பெண் தன் கணவன் இறந்துபோனான் என்றவுடனை 'ஐயோ' என்று துடிக்காமல் இருக்கிறாள் என்றால்..அது ஏன்?இதைத் தான் நாம் யோசிக்கவேணும்...'இப்படி நகர்கிற வசனங்கள் பெண்ணின் மனதை ...உள்ளுக்குள் அழுகிற மனதை...நாமும் பார்க்கிறோம்.நமக்குள் நடக்கிற ஆயிரம் கதைகளுள் ஒன்றாகவும் இருக்கிறது.
சிறுவர்கள் தானே என்று அங்கலாய்க்கிற சூழலில் அந்த சிறுவர்களே தீப்புச் சொல்கிற லாவகத்தை அனைவரும் வியப்புடன் பாராடுகிற போதும், ஊரி பெரிய மனிதராக உலா வருகிற அனைவருக்கும் ஒரு பாடமாக அமைகிறதும் கண்கண்ட சாட்சியும், காட்சியுமாகும்.குற்றங்கள் நடை பெறும் போது பொலிசாரே 'பொடியளிடம்' போய் சொல்லச் சொல்லும் நிலைமை ஒரு காலத்தில் இருந்ததை மறக்கமுடியாது.'நாங்கள் மனிதர்கள்' கதையின் சம்பவங்கள் யதார்த்தமாக சொல்ல முனைந்தற்கு பாராட்டுக்கள்.
காலா காலத்திற்கு பொருத்தமாக கதைகளை எமக்குத் தந்ததில் தமிழ்ப்பிரியாவிற்கும்,நூலாகத் தந்த மீரா பதிப்பகத்தாருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளது ஈழத்து இலக்கிய உலகம்.
-முல்லைஅமுதன்-
12/03/2010

No comments:

Post a Comment