Sunday 30 May 2010


கவிஞர், எழுத்தாளர் – முல்லை அமுதன்
Posted on தீபன் on January 14, 2009 // Leave Your Comment

எழுத்தாளர்களைப் பொறுத்தவரையில் அவர்களது வாழ்க்கை சம்பவங்கள் அவர்களது எழுத்தில்ப் பொதிந்திருப்பவையே, அவர்களைப் போற்றுவதற்கும், மதிப்பிடுவதற்கும், உகந்தவையாக இருப்பவை. பிரித்தானியாவில் வாழும் முல்லை அமுதன் இன்று புலம் பெயர்ந்த எழுத்தாளர்களாக தமிழ் நூல் சேகரிப்பாளராகவும் திகழ்கின்றார். இவர் உறுதியான, ஆணித்தரமான, தனித்தன்மையான, அபிப்பிராயங்கள் கூறுவதிலும், காத்திரமான கருத்துக்கள் சொல்பவரும், ஆர்வமுடன் எழுதி வருபவரும் ஆவார். உரிய நேரத்தில் கிரகித்து பல படைப்புக்களையும், இதுவரை 12 நூல்களையும் படைத்தளித்துள்ளவர், தற்போது காற்றுவெளி என்ற சஞ்சிகையையும் வெளியிட்டு வருகின்றார். தமிழ்ப்படைப்பு இலக்கியத்திற்கு இவர் ஆற்றும் பணி போற்றுதலுக்கு உரியனவாக அமைந்துள்ளமையோடு, பல ஆயிரம் நூல்களையும் சேகரித்து ஆவணக்காப்பகத்தையும் கட்டிக் காப்பவராக திகழ்கின்றார். ஊரில் இருந்து 1981-ம் ஆண்டு நித்திய கல்யாணி கவிதை நூல் மூலம் படைப்பிலக்கியக் களத்துக்குள் புகுந்துள்ள முல்லை அமுதன் என்னும் புனைப்பெயர் கொண்ட இ.மகேந்திரன் அவர்களை தமிழ்விசை மூலமாக சந்திப்பதில் சிறப்புண்டு.

கேள்வி : புலம் பெயர்ந்தோர் படைப்பிலக்கியம் பற்றியும் தமிழுக்கு நீங்கள் வழங்கும் மதிப்பினைப்பற்றியும் தரும் விளக்கம்?

பதில் : எமது புலம்பெயர் இலக்கியம் 1983ன் பின்பே விதைக்கப்படுகிறது. எமது இனம், மொழி,கலை,கலாச்சாரம், பண்பாடு இவைகளை ஜனனாயகப்படுத்தி இறுக்கமாகவும், இலகுபடுத்தியும், சர்வதேச அளவில் இனம்காண வைத்தன, அல்லது அடையாளப்படுத்தின. லெ. முருகபூபதி, கிரிதரன், மா.கி. கிறிஸ்ரியன், செழியன், ஷோபாசக்தி, கருணாகரமூர்த்தி, இப்படிப்பலரின் எழுத்தின் மூலம் அடையாளப்படுத்தலாம். எனவே ஈழத்தவரின் படைப்பிலக்கியம் சரியானதிசையில் செல்வதாகவே எனக்குப்படுகிறது. புதிய எழுத்தாளரின் வருகைகூட நிறைய எதிர்பார்ப்பைத் தருவதுடன் எதிர்கால இலக்கியம் நவீனத்துவம் அடையும் என்பதில் நம்பிக்கை எழவேசெய்கிறது.

கேள்வி : உங்களது படைப்பிலக்கியம் நூல் சேகரிப்பு ஈடுபாடு எப்போது தோற்றம் கண்டது?

பதில் : 1981ல் சிரித்திரன் அச்சகத்திலிருந்து வெளியான ‘நித்தியகல்யாணி’ எனும் கவிதைநூலுடன் ஆரம்பமான என் எழுத்து முயற்சி எங்கள் ஊர்ச் சனசமூக நிலையத்தின் நாடக முயற்சிகளுக்கான பங்களிப்புடன் தொடர்ந்தது. என் வாசிப்பு முயற்சியுடன் நம் தேசியத்தின் மீதான எதிர்கால கலையிலக்கிய ஆவணப்படுத்தல் முயற்சிகளுக்கான பங்களிப்பையும் கருத்தில் கொண்டு நூல் சேகரிப்பினை தொடர்ந்து செய்வதுடன், பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்துவதுடன் அதனை ஆவணப்படுத்தியும் வருகிறேன். எனது நூலகத்தை தங்கள் ஆய்வுக்காக அல்லது பதிவுக்காக பயன்படுத்துபவர்கள் கூட இதனை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தாமையும், எம் சேகரிப்புக்காக நூல்களைத் தருவதைத் தவிர்ப்பதும் கவலையே. எனினும் நம்பிக்கையுடன் நூல் விற்பனையாளர்களிடம் இருந்து நூல்களைத் தருவித்துக்கொள்கிறேன்.

கேள்வி : இதுவரையில் எத்தனை நூல்களை எழுதி வெளியிட்டுள்ளீர்கள்?

பதில் : நித்தியகல்யாணி, புதிய அடிமைகள், விடியத்துடிக்கும் ராத்திரிகள், விழுதுகள் மண்ணைத்தொடும், ஸ்னேகம், விமோசனம் நாளை, யுத்தகாண்டம், பட்டங்கள் சுமக்கிறான், முடிந்தகதை தொடர்வதில்லை, ஆத்மா, யாகம் என நூல்களை வெளியிட்டுள்ளேன். அத்தோடு ஈழத்து மறைந்த எழுத்தாளர்கள் பற்றி பலரும் எழுதிய கட்டுரைகளின் தொகுதியாக ‘இலக்கியப்பூக்கள்’ தற்போது வெளிவந்துள்ளது.

கேள்வி : போர்க்காலச் சூழலில் எழுந்து வந்த படைப்பிலக்கியம் கலை பற்றி உங்கள் கருத்துக் கண்ணோட்டத்தில் என்ன கூறுகின்றீர்கள்?

பதில் : பாரதியின் கவிதைப் பாரம்பரியத்துடன் ஆரம்பமாகிய புரட்சிக்கவிதைகள், புதுவையின் கவிதைகள் தொடங்கி இன்றைய கருணாகரன் வரை புதியவடிவங்களில், புதிய எழுச்சியுடன் போர்க்கால இலக்கியமாகப் பரினமித்துள்ளது. பாலஸ்தீனக் கவிதைகள், அல்லது வியட்னாமியக்கவிதைகள் போன்று, அல்லது அதனை விஞ்சிய வடிவத்தில் எமது போர்க்கால இலக்கியம் வளர்ந்து விரிகிறது. அதுவும் களத்தில் இருந்தே புறப்படுவதால் புதிய வீச்சாய் எம்மை வந்தடைகிறது. புலம் பெயர் நாடுகளில் இவ்வகை இலக்கியம் நம்மிடையே வளர்த்தெடுக்கப்படவில்லையே என்ற ஆதங்கமும் உண்டு.

கேள்வி : புலத்தில் எப்படி எழுதுவதென்பதும், என்ன எழுதுகின்றோம் என்பது பற்றிய விடயம் புரியாமல் கோணல் மாணலாக எழுதுகின்றார்களே இது பற்றி என்ன கூறுகின்றீர்கள்?

பதில் : சரியான பயிற்சியின்மை, ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பின்மையே காரணமாகலாம். புலம்பெயர் வாழ்வோட்டத்திற்கு ஈடாக ஓடுகின்ற இயந்திர வாழ்க்கை ஒவ்வாது போய்விட நல்ல இலக்கியத்திற்கான வருகையில் ஒரு சறுக்கல் ஏற்பட நியாயம் உண்டு. கூடவே அசுர பிரசுர கள வளர்ச்சி மலினப்படுத்தப்பட்ட பிரசுரக்காரர்களின் அதிவேக ஊடுருவலும், ஏனோதானோ என நூல்கள் வெளிவர ஏதுவாகின்றது. இதனை படைப்பாளிகள் ஒன்றித்து செயல்படுவதன் ஊடாக முறியடித்து வெற்றிகொள்ளலாம்.

கேள்வி : இலக்கண விதிகளை உடைத்தெறிந்து அதன் அர்த்தமும், ஆழமும் புரியாமல் புலத்தில்பிறக்கும் கவிதைகள் பற்றி என்ன கூறுகின்றீர்கள்?

பதில் : முன்பு கூட எழுபது, எண்பதுகளில் எழுதப்பட்ட ஆக்கங்கள் குறிப்பாகக் கவிதைகள் தரமில்லாமல் போஸ்ட்காட் கவிதைகள் என விமர்சித்தோரும் உண்டு. பின்னாளில் அக்கவிஞர்களே நல்ல கவிதைகளைத் தந்தும் உள்ளனர். அவர்களுக்கான சரியான பட்டறைகள் கிடைக்கும் எனில் நல்ல கவிதைகளைத் தரமுடியும். வானம்பாடிக் கவிஞர்களை வரவேற்கமறுத்தவர்கள் கூட இப்போது குளிர்காய்கிறார்கள். எனவே வரம்புகளை உடைப்பதில் தவறில்லை. வாசகர்களை நல்ல முறையில் சென்றடைவதிலேயே எதிர்கால வெற்றி அவர்களுக்கு வாய்க்கும்.

கேள்வி : படைப்பிற்கு வெளிப்படையான அழகு தேவைதான். அதைவிட உள்ளே உறைந்திருக்கும் அழகு சத்தியம் தகவல் முக்கிய தேவை, உங்களது படைப்பில் இவற்றைக் காண முடிகின்றதா?

பதில் : அழகும் உள்ளடக்கமும் ஆத்மாத்தமான அர்ப்பணிப்பும் என் படைப்புகளில் உள்ளதை உணர்கிறேன். வாழ்விலும், எழுத்திலும், ஒத்திசைவாக, சத்தியமாக, வாழ்ந்தாலே படைப்புக்களும் வாழும் என்கிற நம்பிக்கை நிறையவே உண்டு.

கேள்வி : ஓர் இலக்கியப் படைப்பை மதிப்பீடு செய்யும் கணிப்பில் ஆரோக்கியமான விமர்சனம் தேவை அந்தவகையான விமர்சனங்கள் உங்கள் படைப்புகளுக்கு விழுந்தனவா?

பதில் : விமர்சகர்களின் பார்வையில் பட்ட என் படைப்புகள் கணிசமான விமர்சனத்தைத் தந்திருந்தாலும் இன்னமும் நல்ல படைப்புக்களைத் தர முடியவில்லையே என்ற ஏக்கமும் உண்டு. எதிர்காலத்தில் ஈழப்போராட்டம் சார்ந்த நாவலை வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். அப்போது முழுமையடையலாம.

கேள்வி : இது நூல் அல்லத்தோழா ! இதைத் தொடுபவன் மனித இதயத்தைத் தொடுகின்றான் என்று வால்ட் விட்மன் கூறியிருக்கின்றார். நீங்கள் இதுவரை நூல்த் தோட்டத்திற்காக எத்தனை இதயத்தைத் தொட்டுள்ளீர்கள்?

பதில் : பலருக்குத் தெரிந்திருக்கிறது இவன் முல்லையமுதன் என்று. வாசகர் அல்லது நண்பர்கள் தொடர்பிலிருந்து பெறமுடிகிறது. எனினும் நிறுவனம் சாராத என் படைப்பிலக்கிய முயற்சி இன்னமும் சரியான தளத்தை சென்றடையவில்லை என்கிற நெருடலும் உண்டு.

கேள்வி : காற்றுவெளி சஞ்சிகை பற்றி ஆதரவான கல்லெறிகள், அல்லது இடி வெடிகள் கிடைத்த அனுபவத்தைக் கூறுங்கள்?

பதில் : விளம்பரம் சார்ந்து அச்சு, ஒளி, ஒலி ஊடகங்கள் மலிந்துள்ள புலம் பெயர் சூழலில், தரமான சஞ்சிகை ஒன்று நாம் வாழும் சூழலின் தேவைகருதி, விளம்பரங்களைத் தாங்கிவராமல் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து 13 இதழ்களை தந்தும், ஒழுங்காக வெளியிடும் நிதி வசதியின்மைகருதி நினைத்தபோது வரும் இதழாகவே காற்று வெளி நண்பர்கள் வட்டத்திற்காகவே வெளியிடப்படுகிறது. இது விரிவுபடுத்தப்படும் போது விமர்சனங்களை எதிர்பார்க்கலாம். இப்போதைக்கு திருப்தியாகவே நகர்கிறது காற்றுவெளி.

கேள்வி : படைப்பிலக்கிய இதயத்தைத் தொடுவது சுகராகம், அந்த ராகத்தில் திளைத்து எழுந்து பட்டபாடலைப் பாடுங்கள்?

பதில் : சுபராகம் சுகராகமாகவே தொடரட்டுமே…..

நேர்காணல் தமிழ்விசை
14‍ . 01 . 2009

No comments:

Post a Comment