Monday 31 May 2010

நூல் விமரிசனம்!
'உயிர்த்தெழல்'

- முல்லைஅமுதன் -




சுல்பிகாவின் மற்றுமொரு கவிதை நூல் இதுவாகும்.'விலங்கிடப்பட்ட மானுடம்' எனும் நூலை ஏற்கனவே வெளியிட்டுள்ள சுல்பிகா வீச்சுள்ள கவிதைகளை அச்சு ஊடகங்களிலும் இணையத் தளங்களிலும் எழுதி வருபவர்.கல்வி/சமூகச் சூழல் இவரைக் கவிஞராக்கி இருக்கலாம்.80ற்குப் பிறகு எழுதத் தொடங்கியவர்களில் சுல்பிகாவும் குறிப்பிடத்தக்கவர். யாழ்ப்பாண பல்கலைக் கழக விஞ்ஞானப் பட்டதாரி.திறந்த பல்கலைக் கழககல்வியியல் முதுமானி பட்டம் பெற்றவர்.கல்வித் தகைமைகளுக்கப்பால் இவர் வகிக்கின்ற பதவி கூட பலருடன் பழகும் வாய்ப்பு கிடைப்பதால் அனுபவங்கள் வழியாக நல்ல கவிதைகளை நாம் தரிசிக்க முடிகிறது. பெண்ணியம்,விடுதலை சார்ந்த சிந்தனைகள் அவர் பார்வையில் நமக்கு சொல்கிறார்.அழகியல் சார்ந்த விசயங்களில் அதிக கவனம் செலுத்தி எழுதப் பட்டுள்ளதாகவே உணர்கிறேன். முஸ்லீம் ஆராய்ச்சி செயல் முன்னனி இந் நூலை வெளியிட்டுள்ளது. மனிதநேயம் மிக்கவர் என்பதையும் கவிதைகள் மூலம் உணர்த்துகிறார்.இந்நூலில் 22 கவிதைகள் இடம் பெற்றுள்ளன.எல்லாக் கவிஞர்கள் போலத்தான் உணர்வு சார்ந்து சிந்திக்கிறார்.ஒவ்வொரு கவிஞனின் மன உணர்வுகள் மோதும் போது நல்ல கவிதைகள் கிடைக்கின்றன.உணர்வுகளும், அழகியலும் இணைந்து தரப் படும் கவிதைகள் காலம் வென்று நிற்கும்.

'கொட்டிக் கிடக்கிறது
பெண்ணின் பாலியல்
மடி முட்டுமளவுக்கு நீ
வட்டி கொள்ளலாம்
குற்றமொன்றும்
உன் மேலே வராது
குற்றம் செய்தது
கொட்டிக் கிடந்த
பெண்ணின் பாலியல் தான்'
உன்னைக் குதறி
உயிர் குடித்தோர்
எங்கெங்கு
குதுகலமாயுள்ளாரோ
அங்கெல்லாம் என் ஒலி
எதிரொலிக்குமா?
உன்னையோ யோனியாக்கி
உன் யோனியைப் புண்ணாகிய
காமுகக் கயவர்களின்
காது பறைகள்
வெடித்துச் சிதறுமளவிற்கு
என் ஒலி எங்கும்
எதிரொலிக்குமா?'

காமுகர்களால் வதை படுகின்ற பெண்களின் வலிகளை அவர் மொழியில் நமக்கு சொல்கையில் நமக்கும் வலிக்கிறது. தனி நபர்களின் காமுகச் சேட்டைகளுக்கப்பால் இரானுவம்/துணைக்குழுக்கள் மூலம் வதைபடுகின்றவர்கள் பற்றியும் இவர் சொல்ல வேண்டும்.ஏனெனில் நமது இன விடுதலை/போராட்டம் பற்றிய சிந்தனை வேறாக வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வாழ்கிற கவிஞர்கள் வெளிப்படுத்தியது குறைவு.

'இலங்கையரென நாம்
இனி இணைவோம்
இணைவதில் பெருமிதம்
கொள்வோம்.
துணிந்து பல சாதனை
செய்வோம்-பிறர்
துயர் துடைக்க
வழி செய்வோம்.'
'ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு
அவரவர் அடிப்படைகள்
முக்கியமானவை.
தேக(சிய)வாதிகளுக்கு
மூளையின் ஆளுகை மையங்கள்
முக்கியமானவை.
பல்தேசியக் கூத்தாடிகளுக்கு
நோயாளியின்
இரண்டும் கெட்டான் நிலை
அவசியமானது.'
சில சமயம் வருத்தம் எனக்குண்டு.வார்த்தைகளை முறித்து எழுதுவதனால் அவை கவிதையாகி விடுமா?
'மனித மன அழுக்குகளை
அகற்ற முடியாத புத்தொளி
அழுக்குகளின் அரிப்புக்குள்ளிருந்து
தெறித்து வருமபிவிருத்திப் புத்தொளி
அது கொண்டு வரும்விடியல்
இதுவல்ல
நான் தேடிய விடியல்'
'கிழிக்கப்பட்ட என் புன்னகையும்
நெரிக்கப்பட்ட என்
குரல்வளையின் ஒலிகளும்
எங்கும் பரவுகின்ற
மனித மன அழுக்குகளை
அகற்றுகின்ற
சொர்க்க வெளிச்சம் எங்கும் பரவுகின்ற
அந்தக் காலையின் விடியல்
அது தான்
நான் தேடுகின்ற விடியல்.'
அவர் எதிர் பார்க்கின்ற விடியல் வசந்தமா?சுபீட்சமா?

போராடாமல்,இன முரண்பாட்டு நெருப்பு வேலிக்கப்பால் நின்று எழுதுவதால் விடுதலை பற்றிய சிந்தனையை சரியாக உள்வாங்கியதாக சொல்லமுடியாது. எனினும் அவரின் மனித நேயம்,வாஞ்சையை நம்மாலும் உணர முடிகிறது.மனித நேயம் மிக்கவரான பாரதியினால் தானே சுதந்திரம் வேண்டி நின்ற மனிதத்தின் விடுதலை பற்றி பாட முடிந்தது.

'தரித்திரம் பிடித்த நாரை
கெழுத்தியை விழுங்கி விட்டது.
நாரைகளின் சந்ததிகள்
கெழுத்தி முட்களைப்
பிரசவிக்கத் தொடங்கியுள்ளன
எங்கும் கெழுத்தி முட்களின்
கொடுமை தலை விரித்தாடுகின்றது....
ஆக
தரித்திரம்
உயிர்த்தது
மறுப்பிலிருந்து தான்...
மறுத்தலை வெறுத்தல்
இயல்பாக நடந்ததுதான்
மறுத்தலை வெறுத்தல்
மகிமையுடயதுதான்
அதன் முள் வடிவம்
மாசற்றதல்ல'

எதையோ சொல்ல வருகிறார்.சொல்லாமலேயே உவமையாகி விட்டு தப்பி விடுகிறார்.

'இப்போதெல்லாம்
தெருவில் செல்வது கடினம்
கற்கள் இட்டறவில்லை
காயங்கள் இடறுகின்றன
வெள்ளம் கடக்கவில்லை
குருதிவெள்ளம் பாய்கின்றது...
வெடிமருந்து நாறல் எடுக்கும்
பூங்காற்றின் மெல்லிசையில்
விமான இரைச்சல் எரிச்சலூட்டும்.

இவருக்கு எரிச்சலூட்டுகிற சமாச்சாரங்கள் போருக்குள் வாழ்பவர்க்கு வாழ்வை நிர்ணயிக்கிற செயல்பாடுகள். அன்றைய பொழுதை நிச்சயமாக்குவதே பெருமபாலும் போர்விமானங்களே.தூரமாய் நின்றபடி எழுத முடியாத வாழ்வுப் பயணங்கள் அவர்களது.வெறுமனே பலஸ்தீனத்தையும்,வியட்நாமையும் துணைகழைக்க முடியாத உவமானங்கள் இங்கு எடுபடாது. எனவே 51 பக்கங்களில் வந்துள்ள 'உயிர்த்தெழல்' நூல் (சுல்பிகாவின் கவிதைகள்)நமக்கு சில செய்திகளை சொல்லி சென்றுள்ளது.அடுத்த நூலில் நிறைய எதிர்பார்க்கின்றோம். வாழ்த்துகளுடன்,

No comments:

Post a Comment